« Reply #2 on: October 05, 2015, 02:32:05 PM »
பாதுஷா
தேவையானவை:
மைதா - 600 கிராம்
வனஸ்பதி/நெய்/வெண்ணெய் - 200 கிராம்
லேசாகப் புளித்த தயிர் - அரை கப்
சோடா உப்பு - அரை டீஸ்பூன்
வறுத்த முந்திரி - தேவையான அளவு
பொரிக்க:
நெய்/எண்ணெய் - அரை கிலோ
சர்க்கரைப் பாகு தயாரிக்க:
சர்க்கரை - 4 டம்ளர்
தண்ணீர் - 2 டம்ளர்
செய்முறை:
ஒரு பெரிய தாம்பளத்தில் மைதா மாவைச் சலித்துப் போட்டு நடுவில் குழித்துக்கொள்ளவும். இதில் முதலில் வனஸ்பதி/நெய்/வெண்ணெய் சேர்த்து கைவிரல்களால் அழுத்தி மைதாவுடன் சேர்த்துப் பிசிறிவிடவும். நன்கு கலந்தவுடன் மீண்டும் நடுவில் குழித்து தயிர், இதன் மேல் சோடா உப்பு சேர்த்து மீண்டும் அழுத்திப் பிசையவும். கடைசியில் லேசாகத் தண்ணீர் தெளித்துப் பிசைந்துகொள்ளவும். மேலே ஈரத் துணியால் மூடி அரை மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர் சிறுசிறு உருண்டைகளாக்கி வட்டமாகத் தட்டிக்கொள்ளவும். நடுவில் கட்டைவிரலால் லேசாக அழுத்தி பள்ளம்போல் செய்துகொள்ளவும். அனைத்து உருண்டைகளையும் இதேபோல் தயார் செய்து ஒன்றன் பின் ஒன்றாக நெய்/எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
இதற்குள் சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிட்டு பிசுக்குப் பதத்தில் சர்க்கரைப் பாகு தயார் செய்து கொள்ளவும். பொரித்தெடுத்த பாதுஷாக்களை சூடு ஆறும் முன் சர்க்கரைப் பாகில் போடவும் (பாகு சூடாக இருக்க வேண்டும்... ஆனால், மிகவும் சூடாக இருக்கக் கூடாது). சில மணி நேரம் கழித்து, பாதுஷாக்களை பாகிலிருந்து எடுத்து ஒரு தட்டில் அடுக்கி, மேலே வறுத்த முந்திரி தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.
« Last Edit: October 05, 2015, 02:34:45 PM by MysteRy »

Logged