Author Topic: ~ சட்டுன்னு செய்ய சத்தான புட்டு! ~  (Read 997 times)

Offline MysteRy

சட்டுன்னு செய்ய சத்தான புட்டு!



“உங்களுக்கு கொலஸ்ட்ரால் அதிகமா இருக்கு. சாப்பாட்டுல எண்ணெய் சேர்த்துக்காதீங்க, வாயு, அஜீரணப் பிரச்னை இருக்கு. மிதமா, ஆவியில வேகவெச்ச உணவா சாப்பிடுங்க” என டாக்டர்கள் அட்வைஸ் செய்யும்போது, இட்லி, இடியாப்பம் தவிர, வேறு என்ன சாப்பிடுவது என்று யோசிப்போம். இருக்கவே இருக்கு, எண்ணெய் அதிகம் சேர்க்காத, ஆவியில் வேகவைத்த புட்டு. எந்தப் பிரச்னைக்கும் இந்த உணவே பெஸ்ட். காலை, மாலையில் ஸ்நாக்ஸ் போல் சாப்பிடலாம். மதிய, இரவு வேளை உணவாக உட்கொள்ளக் கூடாது. எளிதில் ஜீரணமாவதால், உடலுக்கு ஏராளமான நன்மைகள் தரும்.

Offline MysteRy

சம்பா கோதுமை மாவு புட்டு



தேவையானவை:

சம்பா கோதுமை மாவு - ஒரு கப், உதிர்த்த வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை, தேங்காய்த் துருவல் - தலா கால் கப், நெய் - ஒரு டீஸ்பூன், முந்திரிப் பருப்பு - 5, ஏலக்காய்த் தூள் - கால் டீஸ்பூன்.

செய்முறை:

கடாயில், சம்பா கோதுமை மாவை வறுத்து, வெதுவெதுப்பான உப்பு நீர் தெளித்து, பிசறிவைக்கவும். இதில், தேங்காய்த் துருவல் சேர்த்து, ஆவியில் 10 நிமிடங்கள் வேகவைத்து, வெல்லம் சேர்த்துப் பிசறவும். நெய்யில் ஏலக்காய்த் தூள், முந்திரியை வறுத்துப் போடவும்.

பலன்கள்:

நியாசின் உள்ளிட்ட வைட்டமின்கள், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட தாது உப்புக்கள், புரதம், நார்ச்சத்து உள்ளன. வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது. உடலுக்கு வலுவைத் தரும்.

Offline MysteRy

சோள ரவை புட்டு



தேவையானவை:

சோள ரவை - ஒரு கப், நாட்டுச் சர்க்கரை - அரை கப், தேங்காய்த் துருவல் - கால் கப், நெய் - ஒரு டீஸ்பூன், பூசணி விதை, முந்திரி, பாதாம் - துருவல் ஒரு ஸ்பூன், ஏலக்காய்த் தூள் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை:

சோள ரவையைக் கடாயில் வறுத்துக்கொள்ளவும். இதில், வெது வெதுப்பான உப்பு நீர் தெளித்து, தேங்காய்த் துருவல் சேர்த்து, ஆவியில் வேகவைத்து எடுக்கவும். பிறகு, நாட்டுச் சர்க்கரை சேர்க்கவும். நெய்யில் பூசணி விதை, பாதாம், முந்திரி, ஏலக்காய்த் தூள் சேர்த்து வறுத்துக் கிளறி, சாப்பிடவும்.

பலன்கள்: 

சோளத்தில் உடலுக்குத் தேவையான புரதச்சத்து, இரும்பு, கால்சியம் அடங்கி இருப்பதால், அனைவரும் சாப்பிடலாம்.


Offline MysteRy

புழுங்கல் அரிசி, கொள்ளு கார புட்டு



தேவையானவை:

புழுங்கல் அரிசி மாவு - ஒரு கப், கொள்ளு - அரை கப், கறிவேப்பிலை, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு, கடுகு - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2 (நறுக்கிக்கொள்ளவும்) சிறிய எலுமிச்சைப் பழம் - 1, மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை.

செய்முறை:

கொள்ளை வறுத்து ஒன்றிரண்டாக மிக்ஸியில் உடைத்துக்கொள்ளவும். கடாயில் அரிசி மாவை வறுத்து, கொள்ளையும் சேர்த்து, உப்பு நீரில் பிசறி, ஆவியில் வேகவைக்கவும்.  கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, மஞ்சள் தூள், பச்சை மிளகாய் தாளித்து, எலுமிச்சையைச் சாறு பிழிந்து இறக்கி, வெந்த புட்டு மாவில் கொட்டி, கிளறிப் பரிமாறவும்.

பலன்கள்: 

கால்சியம் சத்து மிக அதிகம். வைட்டமின் சி, இரும்புச்சத்து, நார்ச்சத்து இருப்பதால், அனைவரும் சாப்பிட உகந்தது. ரத்தசோகை வராமல் தடுக்கும். எலும்புகளுக்கு நல்ல உறுதியைக் கொடுக்கும். உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் தினமும் சாப்பிடலாம். மலச்சிக்கல் பிரச்னை இருக்காது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும். கொள்ளை முளைக்கட்டிய பிறகு அரைத்துச் சேர்ப்பது நல்லது.

Offline MysteRy

கேழ்வரகு புட்டு



தேவையானவை:

கேழ்வரகு மாவு - ஒரு கப், உதிர்த்த வெல்லம் - அரை கப். தேங்காய்த் துருவல் - கால் கப். நெய், நட்ஸ், ஏலக்காய்த் தூள் - தலா ஒரு டீஸ்பூன்.

செய்முறை:

மாவை வறுத்து, உப்பு நீர் தெளித்துப் பிசிறிவிட்டு, தேங்காய்த் துருவல் சேர்த்து, ஆவியில் வேகவைக்கவும். வெல்லத்தைப் பாகு காய்ச்சி, புட்டில் ஊற்றிக் கலந்து, நெய்யில் ஏலக்காய்த் தூள், நட்ஸ் வறுத்துச் சேர்த்து, கிளறிப் பறிமாறவும்.

பலன்கள்: 

கால்சியம், இரும்புச்சத்து அதிகம் உள்ளன. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். உடல் வெப்பத்தைக் குறைக்கும். உடல் வலுப்பெறவும், வளர்ச்சிக்கும் உதவும். சர்க்கரை நோயாளிகள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் சாப்பிடலாம். ரத்தசோகை வராமல் தடுக்கும். கொலஸ்ட்ராலைக் குறைக்க வல்லது. சிறுநீரகப் பிரச்னை உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது.
« Last Edit: June 21, 2015, 09:46:59 PM by MysteRy »

Offline MysteRy

அவல் புட்டு



தேவையானவை:

அவல் அல்லது சிகப்பு அவல் - ஒரு கப், நாட்டு சர்க்கரை, தேங்காய் துருவல் - தலா கால் கப், நெய், பூசணி விதை, ஏலக்காய்த்தூள் - தலா ஒரு டீஸ்பூன்.

செய்முறை:

அவலை நீரில் நன்றாக அலசி வடித்து, உப்பு நீர் தெளித்து பிசறி 10 நிமிடங்கள் வைக்கவும். இதனுடன் தேங்காய் துருவல் சேர்த்து ஆவியில் வேகவைத்து எடுக்கவும். துளி நெய்யில் ஏலக்காய்த்தூள், பூசணி விதை வறுத்து போட்டு, நாட்டு சர்க்கரை தூவிக் கிளறவும்.

பலன்கள்: 

அவலில் இரும்புச் சத்து மிக அதிகம். மேலும் இதில் வைட்டமின்கள், தாது உப்புக்கள் மற்றும் நுண்ணூட்டச் சத்துக்கள் நிறைந்து இருப்பதால், உடலுக்கு நல்ல வளர்ச்சி தரும். எளிதில் செரிமானமாகும். உடல் வலுப் பெறும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.