Author Topic: ~ பாரம்பரிய ரெசிப்பிகள் ! ~  (Read 2861 times)

Offline MysteRy

Re: ~ பாரம்பரிய ரெசிப்பிகள் ! ~
« Reply #15 on: April 04, 2015, 07:23:04 PM »
கோதுமை வாழைப்பழ அடை



தேவையானவை:

கோதுமை மாவு - 200 கிராம், வாழைப் பழம் - 2, தேங்காய் - 2 துண்டு, ஏலக்காய் - 2, வெல்லம் - 200 கிராம், நெய் - தேவையான அளவு, முந்திரி - 5.

செய்முறை:

கோதுமை மாவுடன் வாழைப் பழம், ஏலக்காய்த் தூள், வெல்லம் சேர்த்து, தண்ணீர் விட்டு அடை மாவு பதத்துக்குக் கரைக்கவும். தோசைக் கல்லைக் காயவைத்து, மாவை ஊற்றிச் சிறிய அடைகளாக வார்த்து, நெய் விட்டு, வெந்ததும் எடுக்கவும். பொடியாக நறுக்கிய தேங்காய், முந்திரித் துண்டுகளை மேலாகத் தூவிப் பரிமாறவும்.

பலன்கள்:

 இனிப்புச் சுவை இருப்பதால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். புரதம், பொட்டாசியம், மாவுச் சத்துக்கள் இருப்பதால், அனைவரும் சாப்பிடலாம்.

Offline MysteRy

Re: ~ பாரம்பரிய ரெசிப்பிகள் ! ~
« Reply #16 on: April 04, 2015, 07:25:20 PM »
பனிவரகு ரவை கேசரி



தேவையானவை:

பனிவரகு ரவை - ஒரு கப், சர்க்கரை - இரண்டரை கப், தண்ணீர் - 4 கப், முந்திரி - 5, திராட்சை - 10, ஏலக்காய் - 2, நெய் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை:

கடாயில் நெய் ஊற்றி, மிதமான தீயில் பனிவரகு ரவையை வறுக்கவும். பிறகு, கொதிக்கவைத்த நீரில் ரவையைக் கொட்டிக் கிளறவும். ரவை வெந்ததும், சர்க்கரையைச் சேர்த்துக் கிளறவும். நெய்யில் முந்திரி, திராட்சை, ஏலக்காயை வறுத்துச் சேர்த்து, கிளறி இறக்கவும்.

பலன்கள்:

கால்சியம், தாது உப்புக்கள், மாவுச்சத்து அதிகம் நிறைந்த உணவு.  குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான ரெசிப்பி.

Offline MysteRy

Re: ~ பாரம்பரிய ரெசிப்பிகள் ! ~
« Reply #17 on: April 04, 2015, 07:27:56 PM »
சாமை அரிசி பிரியாணி



தேவையானவை:

சாமை அரிசி - ஒரு கப், பூண்டு - 2 பல், இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பட்டை - 2, ஏலக்காய், பிரியாணி இலை - தலா 1, லவங்கம் - 3, கலந்த காய்கறி துண்டுகள் (கேரட், உருளைக் கிழங்கு, பீன்ஸ்) - 2 கப், பச்சைப் பட்டாணி - கால் கப், மிளகாய்த் தூள் - கால் டீஸ்பூன், மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், நெய் - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லித் தழை, புதினா - சிறிதளவு, முந்திரி - 5, பெரிய வெங்காயம் - 1, உப்பு - ஒரு சிட்டிகை, தண்ணீர் - 3 கப், தக்காளி - 1, தயிர் - சிறிதளவு, எலுமிச்சைப் பழம் - பாதி, உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

 சாமை அரிசியைக் கழுவி ஊறவைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரியாணி இலை, நறுக்கிய இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளியை நறுக்கி, தயிர், மிளகாய்த் தூள், மஞ்சள்தூள் மற்றும் காய்கறிகள், பச்சைப் பட்டாணியைச்  சேர்த்துக் கிளறவும்.  மூன்று கப் தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். இதனுடன் ஊறவைத்த சாமை அரிசியைச் சேர்த்து, மிதமான சூட்டில் வேகவைக்கவும். நறுக்கிய புதினா, கொத்தமல்லி சேர்த்து, நெய் விட்டு, முந்திரியைத் தூவி ஐந்து நிமிடங்கள் மூடிவைக்கவும்.  எலுமிச்சைச் சாற்றை ஊற்றி, நன்றாகக் கிளறிப் பரிமாறவும்.

பலன்கள்:

இரும்புச்சத்து, மாவுச்சத்து, புரதம், நார்ச்சத்து நிறைந்த உணவு. கோடைக் காலங்களில் சாப்பிட, நிறைவான உணவு இது.

Offline MysteRy

Re: ~ பாரம்பரிய ரெசிப்பிகள் ! ~
« Reply #18 on: April 04, 2015, 07:32:47 PM »
தினை எள் சாதம்



தேவையானவை:

 எள் - 150 கிராம், தினை - ஒன்றரை கப், உளுத்தம் பருப்பு - 50 கிராம், காய்ந்த மிளகாய் - 6, வேர்க்கடலை - 50 கிராம், உப்பு - சுவைக்கேற்ப, நல்லெண்ணெய் - தேவையான அளவு.

தாளிக்க:

 கடுகு - அரை டீஸ்பூன், மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை, கடலைப் பருப்பு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத் தூள் - அரை டீஸ்பூன்.

செய்முறை:

 தினையை, ஒரு கப்புக்கு இரண்டரைப் பங்கு என்ற விகிதத்தில் தண்ணீர் விட்டு வேகவைக்கவும். வெந்த தினை சாதத்தை, ஒரு தட்டில் பரப்பி ஆறவிடவும். நல்லெண்ணையில் எள், காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள் சேர்த்து வறுத்து, மிக்ஸியில் பொடிக்கவும். ஒரு கடாயில், நல்லெண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, வேர்க்கடலையைப் போட்டுத் தாளிக்கவும். இதில், தினை சாதத்தைப் போட்டு, எள்ளுப் பொடியைத் தூவி, கிளறி இறக்கவும்.

பலன்கள்:

தினையும், எள்ளும் கால்சியம் நிறைந்த உணவுகள். எலும்புகளை உறுதி பெறவைக்கும். தேவையான புரதம் கிடைக்கும். உடனடி ஆற்றலைத் தரும்.

Offline MysteRy

Re: ~ பாரம்பரிய ரெசிப்பிகள் ! ~
« Reply #19 on: April 04, 2015, 07:43:54 PM »
கம்பு குழிப் பணியாரம்



தேவையானவை:

பச்சரிசி, இட்லி அரிசி, கம்பு (மூன்றும் கலந்த கலவை) - ஒரு கப், உளுத்தம் பருப்பு - கால் கப், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், பெருங்காயம் - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, கொத்தமல்லித் தழை - சிறிதளவு, சின்ன வெங்காயம் - ஒரு கையளவு, தேங்காய்த் துருவல் - கால் கப். தாளிக்க: கடுகு, கடலைப் பருப்பு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:

அரிசி, கம்பு, உளுந்துக் கலவையுடன் வெந்தயம் சேர்த்து, ஐந்து மணி நேரம் ஊறவைத்து, உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளவும். இதை ஆறு முதல் எட்டு மணி நேரம் புளிக்கவிடவும். தாளிக்க வேண்டிய பொருட்களைத் தாளித்து, மாவில் கலக்கவும். இதில், பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லித் தழை, பச்சை மிளகாய் சேர்த்துக் கலக்கவும். குழிப் பணியாரச் சட்டியில் ஊற்றி, எண்ணெய் விட்டு இரண்டு முறை திருப்பிப் போட்டு, முறுகலானதும் எடுக்கவும். தேங்காய் சட்னி அல்லது பொடியுடன் சேர்த்துச் சாப்பிட, சுவையாக இருக்கும்.

பலன்கள்:

இரும்புச் சத்துக்கள் நிறைந்துள்ளன. சுவையான நொறுக்குத் தீனி என்பதால், குழந்தைகள் விரும்பி உண்பார்கள். பெண்கள் தொடர்ந்து சாப்பிட்டுவர, மாதவிலக்குப் பிரச்னைகள் நீங்கும்.

Offline MysteRy

Re: ~ பாரம்பரிய ரெசிப்பிகள் ! ~
« Reply #20 on: April 04, 2015, 07:48:14 PM »
தாகமுக்தி (நன்னாரி குடிநீர்)



தேவையானவை:

 வெட்டிவேர், நன்னாரி, சுக்கு, ஏலக்காய், மாகாளிக் கிழங்கு வேர் - தலா ஒரு கைப்பிடி அல்லது தேவைக்கேற்ப.

செய்முறை:

 ஒரு பாத்திரத்தில் குடிநீரை ஊற்றிக் கொதிக்கவிடவும்.  நீர் கொதித்தவுடன், கொடுத்துள்ள பொருட்களைச் சேர்த்து, கொதிக்கவிட்டு, வடிகட்டிக் குடிக்கவும். மிகவும் மணமுடன் இருக்கும்.

பலன்கள்:

உள்ளுறுப்புகளையும் ரத்தத்தையும் சுத்தம் செய்யும். உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும். சிறுநீர்ப் பாதையில் ஏற்படும் தொற்றுகளைச் சரிசெய்யக்கூடியது.