Author Topic: தண்ணீர் தேசம் - கவிஞர் வைரமுத்து  (Read 15914 times)

Offline Maran

16

ஒரு மனிதன் -
எத்தனை நாடுகள் கடந்தான்.
எத்தனை கடல்கள்
கடைந்தான்.
எத்தனை பேரைக்
கொன்றான்.
எத்தனை மகுடம் கொண்டான்.
எத்தனை காலம் இருந்தான்.
எத்தனை பிள்ளைகள் ஈன்றான்
- என்பவை அல்ல அவன்
எச்சங்கள்.

இவையெல்லாம் நான் என்ற
ஆணவத்தின் நீளங்கள்.

அவன் இன்னோர் உயிருக்காக
எத்தனைமுறை அழுதான்
என்பதுதான், அவன் மனிதன்
என்பதற்கான மாறாத
சாட்சி.

சலீம் அழுதான்.

அது சுயசோகத்திற்காகச்
சொட்டிய கண்ணீரன்று.
சுண்டெலியின் மரணத்திற்காகச்
சிந்தப்பட்ட சுத்தக் கண்ணீர்.

காணவும் தூங்கவும் மட்டுமே
கண்கள் என்று பலபேர்
தப்பாகக் கருதிக்
கொண்டிருக்கிறார்கள்.

இல்லை - கண்ணீருக்கும்
சேர்த்துத்தான் கண்கள்.

பார்த்தல் என்பது
கண்களின் வேலை.
கண்ணீர் என்பதே
கண்களின் தியானம்.

இதயம் கொதித்து
ஆவியாகும்போது இமைகளின்
முடி திறந்து கொள்கிறதே...
அதுதான் கண்ணீர்.

ஒருவன் தனக்காக அழும்
கண்ணீர் அவனைமட்டுமே
சுத்திகரிக்கிறது.
அடுத்த உயிருக்காக அழும்
கண்ணீர்
அகிலத்தையே சுத்திகரிக்கிறது.

அழாதே சலீம். அழாதே.
இசக்கியின்
தவறுக்காக நான் மன்னிப்புக்
கேட்கிறேன்
- கலைவண்ணன் சலீமின்
கரங்கள் பற்றிக் கெஞ்சினான்.

அவன் நிறுத்தவில்லை.
அவன் கண்களிலிருந்து
அறுந்துபோகாத அருவி
வடிந்து கொண்டேயிருந்தது.

இவன் எவ்வளவு மெல்லியவன்.
அனிச்சப்பூ மனசு கொண்டவன்.

பிள்ளை மாதிரி
வளர்த்தேனே.
பிடித்துத் தின்றுவிட்டானே.
- அவன் எழுத்துக் கூட்டி
அழுதான்.

விடு சலீம். ஒரு
சுண்டெலிக்காக இவ்வளவு
சோகப்படுகிறாயே.
- பாண்டியின் சொற்களில்
அலட்சியம் சொட்டியது.

சொல்லாதே. அதை
வெறும் சுண்டெலி என்று
சொல்லாதே. இந்தப் படகின்
ஏழாவது ஜீவன் என்று
சொல். உருவங்கள்
மாறலாம். ஆனால், உனக்கும்
எனக்கும் அதற்கும் உயிர்
ஒன்றுதான். நம் ஆறுபேரில்
யாராவது ஒருவர்
செத்திருந்தால் நீ அழாமல்
இருப்பாயா?
அப்படித்தான் அதுவும்

அவன் வாக்கிலிருந்த தர்க்கம்
அவர்களை
வாயைடைத்துவிட்டது.

அவன் அழுகை நிற்கவில்லை.

தண்ணீர் குடிக்காத தேகத்தில்
எப்படித்தான் அவ்வளவு
கண்ணீர் இருந்ததோ.
பாண்டியும் பரதனும் அவனைத்
தங்கள் மார்பில்
சாய்த்துக்கொண்டு வேர்வைப்
பிசுக்கில் சிக்கலாகிப்
போன அவன் கேசத்தில்
சிக்கெடுத்தார்கள்.

அந்த ஸபரிசம் அவனுக்குத்
தேவைப்பட்டது.

இசக்கி மட்டும்
பேசவேயில்லை.

அவன் தன்னைத் துண்டித்துத்
தனியனானான்.

ஆடும் படகின் விளிம்பில்
அசையாது உட்கார்ந்து
பிரமைப் பிடித்தவன்போல்
கடல் பார்த்தான்.

தன்னைத் தாங்கிய
மார்புகளுக்கு மத்தியில்
அழுது கொண்டேயிருந்தான்
சலீம்.

ஒரு முரட்டுக்கூட்டத்தில்
இப்படி ஓர் இதயமா?
தன் தாகம், பசி இரண்டையும்
மறந்து வியந்தாள்
தமிழ்ரோஜா.

உரிக்கப்பட்ட சுண்டெலியின்
தோலை மட்டும் சலீமால்
தூக்கி எறிய முடியவில்லை.

தான் வருவதற்கு முன்பே
அடக்கம் செய்யப்பட்டுவிட்ட
தாயின் பழைய புடவையைத்
தொட்டுப் பார்க்கும்
ஒரு பாசமுள்ள மகனைப்
போல - சுண்டெலியின்
தோலை
அவன் தடவிக்கொண்டிருந்தான்.

கைகளில் ஒட்டிய
ரத்தம்பார்த்துத் திடீரென்று
ஆவேசமானான்.

டேய், மனிதனாடா. நீ
மனிதனா? என்று கண்கள்
பிதுங்கக் கத்தி, இசக்கியை
நோக்கி
முன்னேறினான்.

இழுத்துக் கொண்டோ டியவனின்
வயிற்றில் கைவைத்து வளைத்து
நிறுத்தினான் கலைவண்ணன்.
அவனைத் தழுவித் தடவிச்
சாந்தம் செய்தான்.

இதோ பார் சலீம்.
சுண்டெலியைக் கொன்றது
பாவம்தான். உன் உணர்ச்சி
நியாயம்தான். ஆனாலும்
உனக்கொன்று சொல்வேன்.
இதை உன் உள்ளத்தில்
எழுதிக்கொள்.
எது நியாயம், எது பாவம்,
என்று தீர்மானிப்பவன்
மனிதனல்லன்.
இடமும் காலமும்தான்.

தாகத்தில் சாகப் போகும்
பாலைவனப் பயணிகள்,
தங்கள் ஒட்டகத்தையே
கொன்று அதன் உள்ளிருக்கும்
நீரை அருந்துவார்களாம்.
அங்கே ஒட்டகவதை என்பது
பாவமல்ல. பாலைவன
நியாயம்.

பசி உடம்பைத் தின்னத்
தொடங்கும் பஞ்சநாட்களில்
எறும்புப் புற்றை இடித்து,
அதன் மாரிக்காலச்
சேமிப்பான
தானியம் எடுத்துச்
சமைப்பார்களாம்.
அங்கே அது திருட்டு அல்ல.
அது பசியின் நியாயம்.

உணவு கிட்டாத காலத்தில்
உயிர்காக்க நினைக்கும்
இருளர்கள், களிமண்
தின்பார்களாம்.
அங்கே மண் தின்பது என்பது
பாவமல்ல.
பழக்க நியாயம்.

பயிர் செய்ய முடியாமல்
வருஷத்தில் பாதி நாட்கள்
பனிமுடிக் கிடக்கும்
பிரதேசங்களில்
துருவக்கரடிகளும் நாய்களும்கூட
அன்றாட உணவாகுமாம்.
அங்கே அசைவம் என்பது
பாவமல்ல. பூகோள
நியாயம்.

சோமாலியாவின் பஞ்சத்தில்
எலும்பும் உயிரும் வெளியேறத்
துருத்திக் கொண்டிருக்கும்
உடம்புக்குச்
சொந்தக்காரர்கள்
ஒன்றும் கிடைக்காமல்
உடைகளையே தின்னத்
தொடங்கினார்களாம்.
அவர்கள் உடை தின்றது
பாவமல்ல. கால நியாயம்.

இசக்கி சுண்டெலியைக் கொன்று
தின்றதை நான்
நியாயப்படுத்த விரும்பவில்லை.
ஆனால், அவன் செய்தது
கொலை என்று
குற்றம்சாட்டவும்
முடியவில்லை.

சலீம் தன் அழுக்குச் சட்டையில்
வாய் புதைத்து
அழுகை அடக்கினான்.

அழுகை மெல்ல மெல்லக்
குறைந்து விசும்பலானது.

விசும்பல் மெல்ல மெல்லத்
தேய்ந்து மெளனமானது.

சுண்டெலியின் இறுதிச்
சடங்குக்குப்
படகு தயாரானது.

இறந்த உடம்பை இரண்டு
வகையில்
நிறைவு செய்யலாம்.

ஒன்று எரிப்பது அல்லது
புதைப்பது.

எரிப்பதென்றால் ஒரு தீக்குச்சி
செலவாகும்.
இருக்கும் சில தீக்குச்சிகளில்
ஒன்றை இழப்பது
அறிவுடைமை ஆகாது.

புதைத்தல் என்றால் அங்கே
பூமியில்லை.

யோசித்தார்கள்.

வீசுவது என்று
முடிவெடுத்தார்கள்.

எந்தக் கடுகுப்புட்டியின் முடியில்
அது ஆசையாக
உணவருந்துமோ அதே
கடுகுப்புட்டியில், அதன்
தோலையும் தலையையுமிட்டுக்
காற்றுப் புகாமல் முடினான்
கலைவண்ணன்.

அந்தக் கடுகுப் புட்டியைக்
கட்டிக் கொண்டு அழுதான்
சலீம்.

தாயின் மார்பகத்தோடு
ஒட்டிக் கொண்ட
குழந்தையைப் போல்
அவனிடமிருந்து அதைப் பிரிக்க
முடியவில்லை.

பாவம். அன்புள்ள அப்பாவி.

அவனைச் சிரமப்படுத்திப்
பிரித்து, அவன் விரல்களில்
ஒவ்வொன்றாய் விலக்கி, அதை
அத்தனை பேரும் பறித்துக்
கண்ணை முடிக்கொண்டு
கடலில் வீசினார்கள்.

சலீமோடு சேர்ந்து அலைகள்
சிலவும் அழுதன.

இசக்கி மட்டும் பிரமைப்
பிடித்தவன் போல்
உணர்ச்சியில்லாமல்
உட்கார்ந்திருந்தான்.

ஏ தமிழ்ரோஜா.
தலை கவிழ்ந்திருக்கும் என்
தங்கமே.
என்னை மன்னித்துவிடு.
ஆறுதலும் நம்பிக்கையும் தவிர
எதையும் தர முடியாத
ஏழையாகிவிட்டேன்.
உடுத்துவதற்கு மாற்று
ஆடையுமில்லை. உயிர்
பிழைப்பதற்கு
மாற்று வழியுமில்லை.
என்ன கலக்கம். ஏனிந்தக்
குழப்பம்.
உன் முகத்தில் என்ன பயத்தின்
முற்றுகை.
மீண்டும் தண்ணீர் பயமா?

இல்லை. மரணபயம்
- அவள் லேசாய்ச்
சிரித்தாள்.

சாவின் புன்னகை
இப்படித்தானிருக்குமோ?

அவன் ஒற்றைவிரல் கொண்டு
அவள் உதடு பொத்தினான்.

பேதையாய்க்கூட இரு.
கோழையாய் இருக்காதே.
இயற்கை அளவற்ற
கருணையுடையது.
நம்மை உயிரோடு வரவேற்ற
கடல் நம் பிணங்களைக்
கரை சேர்க்காது.

எனக்கும் அதுதான்
சந்தேகம்.
இங்கே இறந்தால் கரை
சேர்வதற்கு நம் உடலே
இருக்காது

நம்பிக்கை இழக்காதே
தமிழ்.
நாளை நம்முடையதே.

நாளை நம்முடையதென்றால்
இன்று யாருடையதோ?

அவளுக்குத் தலை சுற்றியது.
மயக்கம் வந்தது.
கொஞ்சம் தண்ணீர்
கிடைக்குமா?
கொஞ்சம் தண்...
மிச்ச எழுத்துக்களை அவள்
சைகையில்
உச்சரித்துவிட்டு
முர்ச்சையானாள்.

தமிழ். தமிழ். -
அவன் பதறினான்

தமிழ். தமிழ். -
அவன் கதறினான்.

கலைவண்ணன் முதன் முதலாய்
அச்சப்பட்டான்.

எல்லோரும் ஓடி வந்தார்கள்
- இசக்கியைத்தவிர.

சலீம் தன் மேல்துண்டைக்
கடல்நீரில் நனைத்துப்
பிழிந்து நீட்டினான்.

கலைவண்ணன் அவள் முகத்தில்
அதை ஒற்றி ஒற்றி
ஈரப்பசை காட்டினான்

முர்ச்சை தெளிந்து அவள்
முனகினாள்.

தலைக்குமேலே நாரைகளின்
மந்தை ஒன்று படபடவென்று
சிறகடித்துப் போனது.
அத்தனைபேரும் மொத்தமாய்
அண்ணாந்து பார்த்தார்கள்.

ஏ மனிதர்களே.
சிறகுகொண்டு கடல்கடக்கத்
தெரியாத நீங்கள்
எங்களைவிட எப்படி
உயர்ந்தவர்கள்?

உப்புத் தண்ணீர் பருகி
உயிர்வாழ முடியாத நீங்கள்
மீன்களைவிட எப்படி
உயர்ந்தவர்கள்.

ஒருவார தாகம் பொறுக்க
முடியாத நீங்கள்
ஒட்டகத்தைவிட எப்படி
உயர்ந்தவர்கள்.

எங்களைக் கொல்லுவதற்கும்
வெல்லுவதற்கும் ஆயுதம்
கண்டுபிடித்தீர்கள்.
அதனால் மட்டும்தானே நீங்கள்
உயர்ந்தவர்கள்?
இருந்துவிட்டுப் போங்கள்.

கொஞ்சம் தண்ணீர்...
கொஞ்சம் தண்ணீர்

முர்ச்சை தெளிந்தும்
தெளியாமலும்
அவள் புலம்பிக் கிடந்தாள்.

எங்கு போவது தண்ணீருக்கு?
என்ன செய்வது தண்ணீருக்கு?

கலைவண்ணனால் அப்போது
கொடுக்க முடிந்தது
தண்ணீரல்ல. தன்னை
மட்டும்தான்.

இசக்கி மட்டும் பிரமை
பிடித்தவனாய்க் கடலையே
வெறித்துப் பார்த்துக்
கொண்டிருந்தான்.

அந்தி வானத்தில் அஸதமனக்
கோடுகள் விழத் தொடங்கிய
வேளையில், படகின் விளிம்பில்
உட்கார்ந்திருந்த பரதன்
கடலிலும் வானத்திலும் தன்
கண்களை வீசி, ஆபத்தில்
உயிர் காக்கும் அடையாளம்
தேடினான்.

இருப்பது இறப்பது இந்த
இரண்டுக்கும் இடையிலான
வித்தியாசங்கள், அங்குலம்
அங்குலமாக அழிந்துகொண்டே
வருவதை அவன் உணர்ந்தான்.

தற்செயலாய்த் தலை
தாழ்த்தினான்.
ஆ. அவை என்ன?

தண்ணீர் மட்டத்துக்கு மேல்
தலைதூக்கும் அந்தப்
பிராணிகள் கடற்பாம்புகளா?

சற்றே உற்றுப் பார்த்தான்.
ஆமைகள். கடல்
ஆமைகள். என்று
கத்தினான்.

எல்லோரும் அவன் குரல்
கேட்டுக்
கூடுவதற்குள் அவன் கடலில் குதித்தான்.

வெயிலில் ஒதுங்கவும். படகின் வயிற்றில்
படிந்திருக்கும் பாசிதின்னவும் படகை உரசிய
அந்த ஆமைகளை ஒவ்வொன்றாய்த்
தலைபற்றித் தளத்தில் வீசியெறிந்தான்..

தப்பித்தவை போகத் தளத்தில் விழுந்தவை
முன்று ஆமைகள். ஒவ்வொன்றும்
ஆறு கிலோ எடை இருக்கும்.

தலையும் காலும் வாலும் தவிர ஓட்டுக்கு
வெளியே ஒன்றும் தெரியவில்லை.

ஆகா. ஆகா. ஆமைகள்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு இப்போதுதான்
படகில் பசிக்குரல் மறைந்து உயிர்க்குரல் கேட்டது.
கடலில் கிடந்த பரதன் தாவிக்குதித்து
மேலே வந்தான்.

சமையல்கட்டு சென்றான்.

கத்தியும் சட்டியும் கொண்டுவந்தான்.

ஆமைகளை நெருங்கினான்.

பார்த்து. கையைக் கடித்துவிடப்போகிறது
ஆமை.

அடப்போடா. ஆமைக்குப் பல்லில்லை
என்பது எனக்குத் தெரியாதா?

வெள்ளையாய்த் தெரிந்தது அடிவயிறு.

அதன் இதயப்பகுதியில் கத்தி வைத்தான்.
குத்தினான் - அழுத்தினான் - கீறினான் - கிழித்தான்.

முதலில் கசிய ஆரம்பித்த கருஞ்சிவப்பு
ரத்தம் குபுகுபுவெனக் கொட்டத் தொடங்கியது.

ஆமையின் தலைதுடிப்பதை அவனால் தாங்க
முடியவில்லை. அதை வெட்டி எறிந்தான்.

அப்படியே தூக்கிப் பிடித்துக் கவிழ்த்து
அதன் ரத்தத்தைச் சட்டியில் கொட்டினான்.

அவ்வாறே மற்ற ஆமைகளையும் பிளந்து
ரத்தமெடுக்க, நிரம்பிவிட்டது. பாதிச்சட்டி
பரதன் உற்சாகத்தில் கத்தினான்.
இப்போது இது ரத்தமல்ல. சிவப்பு தண்ணீர்
குடியுங்கள் - எல்லோரும் குடியுங்கள்.

அதுவரை இறந்துகிடந்த டம்ளர்களுக்கெல்லாம்
உடனே உயிர் வந்தது.

சட்டியில் விட்டு ஆளுக்கொரு டம்ளர்
ஆமை ரத்தம் அவசரமாய் மொண்டான்.

இந்தா பாண்டி. இது உனக்கு.
இந்தா சலீம். இது உனக்கு.
இதோ பேனாக்காரரே. இது உங்களுக்கு.

தூரத்தில் பிரமை பிடித்துப் பேசாதிருந்தான்
இசக்கி.

இந்தா இசக்கி இது உனக்கு.

அதுவரை திரும்பாதிருந்த இசக்கி திரும்பினான்.

அவன் கண்ணிலிருந்து ஒரு துளிக் கண்ணீர்
ஆமை ரத்தத்தில் விழுந்தது.

என்னை மன்னித்து விடுங்கள்.
இன்றுமுதல் நான் சாகும் வரைக்கும்
அசைவம் தொடமாட்டேன். நான் கொன்ற
சுண்டெலிக்கு ஆயுள் முழுதும் நான்
செலுத்தும் அஞ்சலி அதுதான்.

அசையவில்லை யாரும், அப்படியே
நின்றார்கள்

இசக்கி சைவமாகிவிட்டானா?

வேங்கைக்கு வெற்றிலை மட்டும் போதுமா?

இது என்ன புது அதிர்ச்சி.

அவர்கள் எதிர்பாராத திசையிலிருந்து
இன்னோர் அதிர்ச்சியும் வந்தது.

எனக்கும் கொடுங்கள் ஒரு டம்ளர்
ஆமை ரத்தம்.

திகைத்து திரும்பினார்கள்.
கேட்டவள் தமிழ்ரோஜா.

Offline Maran

17

இந்தப் பிரபஞ்சத்தில் எதுவும்
நேரலாம். இன்று காண்பது
நாளை மாறலாம்.

மாற்றமே பரிணாமம்.
மாறுதல் ஒன்றுதான் உலகில்
மாறாதிருப்பது.

இந்தக் கிரகத் தொகுதியும்
கட்சி மாறலாம்.

வியாழனை முட்டித் துளைத்த
வால்நட்சத்திரத்தால் அங்கே
தண்ணீரும் உயிர்களும்
உற்பத்தியாகலாம்.

என்றேனும் ஒரு நாள் -
இந்தப் பூமி என்னும் கிரகம்
இடிகொண்ட முட்டையாய்ச்
சிதறுண்டு போக, இங்கிருந்து
தப்பிக்க வசதிகொண்ட
மனிதர்கள் வியாழன் கிரகத்தில்
வீடு வாங்கலாம்.

இதுவரைக்கும் பூமிக்கு வெயில்
தந்த பழைய சூரியனைப்
புறந்தள்ளிவிட்டு, இன்னொரு
சூரியக் குடும்பத்துக்கு
ஜீவராசிகள் இடம்
பெயரலாம்.

நிகழும் வரைக்கும்தான் ஒன்று
அதிசயம். நிகழ்ந்த பிறகு அது
சம்பவம்.

தொப்பூழ்க்கொடி அறுத்தது
முதல் அசைவக்
கலாசாரத்திலேயே வளர்ந்த
இசக்கி, அன்று முதல் தன்னைச்
சைவன் என்று
பிரகடனப்படுத்திக் கொண்டதும்
- எறும்பு செத்து மிதக்கும்
பாலைக்கூட அசைவமென்று
ஒதுக்கிய தமிழ் ரோஜா,
அன்று ஆமை ரத்தம் பருகக்
கேட்டதும் பழகியவர்களுக்கு
அதிர்ச்சியே தவிர
பண்பாட்டுக்கு அதிர்ச்சி அல்ல.

மனிதன் இயற்கையின் குழந்தை.
அவனது உணவை, உடையை,
உறையுளை ஏற்படுத்திக்
கொடுப்பதும் இயற்கைதான்.

மதுரையில் சட்டையில்லாத
உழவனைப் பார்த்து, இனி
சட்டை அணிவதில்லை என்று
வடநாட்டு உழவன் சபதம்
செய்தால், அது சரியான
சிந்தனை என்று கருத
முடியாது.

அந்த வெயில் பூமியில்
சட்டையில்லாமலிருப்பது ஓர்
உழவனின் செளகரியம்.

வடநாட்டுக் குளிரில் ஓர்
உழவன் சட்டையும்
தலைப்பாகையும்
அணிந்தே ஆக வேண்டும்.. அது
அவன் தேவை.

எனவே, சட்டை அணிவது -
அணியாதிருப்பது என்பதை
வானிலை தீர்மானிக்கிறது.

மனிதனின் ஆணைகள்,
மீறுவதற்காகவே
பிறப்பிக்கப்படுகின்றன.
இயற்கையின் ஆணைகள்
தேவைக்காகவே
படைக்கப்படுகின்றன.

ஆமைரத்தம் சைவமா
அசைவமா என்று
வாதாடுவதற்கான வாய்ப்பை,
தமிழ்ரோஜாவின் தாகம்
அவளுக்குத் தரவில்லை.

அவளைப் பொறுத்தவரை
அப்போது அவளுக்கு அது
திடதிரவம்.

குடித்தாள்.

குடித்துவிட்டுப் பால்குடித்த
குழந்தைபோல் இதழ்க்கடை
துடைத்தாள்.

அடுத்தொரு கேள்வியும் அவளே
கேட்டாள்.

அந்த ஆமைக்கறியைச்
சமைக்க முடியுமா?

மீனவர் நிமிர்ந்தனர்.

அதைப் பச்சையாகவே
சாப்பிடுவது என்று அவர்கள்
நெஞ்சுக்குள் நிறைவேற்றிக்
கொண்ட மெளனத் தீர்மானம்
சற்றே ஒத்தி வைக்கப்பட்டது.

இதைச் சமைக்கத்தான்
வேண்டுமா?

பச்சையாய் உண்டாலும்
அடிவயிற்றில் எரியும் அக்கினியில்
இது வெந்து போகாதா?

நெருப்பு என்பது அந்த
நிமிடத்தில் அவர்களுக்கு
ஆடம்பரம்.

அவர்களின் அந்த நேரத்து
அகராதியில் சமைத்தல் என்ற
சொல்லுக்கு நேரே,
காலவிரயம் அல்லது
படாடோ பம் என்று பொருள்
போட்டிருந்தது.

ஆனாலும், ஒரு சைவப்
பெண்ணின் அசைவத்
தேவைக்காக அவர்கள்
சமைக்க ஆயத்தமானார்கள்.

முன்று வருடங்கடந்து மழை
பெய்த ஒரு திருநாளில், தன்
பழைய கலப்பையைத் தேடுகிற
ஓர் ஏழை விவசாயியைப்போல
அவர்கள் திசைக்கொருவராய்ப்
பறந்து தீப்பெட்டி
தேடினார்கள்.

ஒரு குடியானவன் வீட்டு
உண்டியலின் கடைசிக்
காசைப்போல அது ஏதோ
ஓர் ஆழத்தில் அகப்பட்டது.

அது சற்றே ஈரம்பூத்திருந்தது.

உள்ளே- ரஷயப்
படையெடுப்பில் தோற்றுத்
திரும்பிய நெப்போலியனின்
படைவீரர்களைப் போல
எண்ணிக்கையில் குறைவாகவே
இருந்தன தீக்குச்சிகள்.

பற்றவைக்க முயன்றான்
பாண்டி.

முதலாம் தீக்குச்சி -
உடைந்தது.

இரண்டாம் தீக்குச்சி -
பட்டையில் ஒரு பாதி கிழித்துத்
தானும் தேய்ந்தது.

முன்றாம் தீக்குச்சி - சற்றே
பற்றிச் சட்டென்று அணைந்தது.

தீக்குச்சி நாலாவது -
பற்றியது. ஏமாற்றாமல்
எரிந்தது.

அடுப்பும் முகங்களும் ஒரே
நேரத்தில் ஒளிகொண்டன.

தண்ணீர் இல்லாததால் அதன்
ரத்தம் ஊற்றப்பட்டு
அவசரமாய்ச் சமைக்கப்பட்டது
ஆமைக்கறி.

தட்டேந்தி நிற்கவோ
பங்கிட்டுக் கொள்ளவோ
பொறுமையின்றி, ஆளுக்கொரு
துண்டாய் அவர்கள் அவசரமாய்
உண்ட பிறகுதான்
தெரிந்தது... வெந்திருப்பது
கறி அல்ல - அவர்களின்
நாக்குகள் என்று.

அவர்களின் உடம்பின் ஆழத்தில்
வற்றி வண்டலாகிப் போன
உயிர் ஒவ்வொரு சொட்டாய்
ஊறத் தொடங்கியது.

கரை.

மீனவர் சங்கம் மிதந்தது
சத்தத்தில்.

காணவில்லை என் மகனை.
கண்டுபிடிக்க மாட்டீர்களா?
- அந்தக் கோடையிலும்
நடுங்கியது ஒரு முதாட்டியின்
குரல்.

காணவில்லை என் கணவனை.
செத்தாரா இருக்கிறாரா...
செய்தி
சொல்லமாட்டீர்களா? -
இது ஒரு
கைக்குழந்தைக்காரியின்
கதறல்.

பதறாதீர்கள், ஒன்றும்
ஆகாது அவர்கள் உயிர்களுக்கு.
இன்றைக்கே தேட ஏற்பாடு
செய்வோம். எப்படியும்
கிடைப்பார்கள் - ஒரு
பிசிறில்லாத ஆண்குரல்
பேசியது.

அவனுக்கு மட்டும்
ஏதாவதானால் நான்
கடலாத்தா மடியில்
விழுந்துதான் செத்துப்
போவேன்.
தரையில் செத்தால் எனக்குக்
கொள்ளிவைக்கத்தான் வேறு
பிள்ளை இல்லையே.

பாவம். கிழவியின் பீளைக்
கண்களில் ஏழைக்கண்ணீர்.

கடல்.

நேற்றுச் சொன்னேனே..
அது நிஜமாகிவிட்டது தமிழ்.

என்ன சொன்னீர்கள்?

இயற்கை அளவற்ற
கருணையுடையது என்றேன்.
இயற்கை தன் கருணையை ஆமை
வடிவில் அனுப்பி வைத்ததா
இல்லையா?

ஒரு பட்டமரத்தில்
புறப்படும் முதல் தளிரைப்
போல எனக்குள் புதிய
நம்பிக்கை பூத்திருக்கிறது.

பூமியைப் பற்றிக்கொள்ளும்
வேர்களைப்போல நீ
நம்பிக்கையைப் பற்றிக்கொள்.
ஒரு பறவை உன் தலைக்கு
மேலே பறப்பதை உன்னால்
தடுக்க முடியாது. ஆனால்,
அது உன் தலையில்
கூடுகட்டாமல் உன்னால் தடுக்க
முடியும்.

அவள் பாதி உதட்டில்
புன்னகைத்தாள்.
அதில் தேவையான சதவிகிதம்
சிருங்காரம் இருந்தது.

அதுவரைக்கும் பசியில் உலர்ந்து
கிடந்த காதல், சின்னதாய்ச்
சிலிர்த்துச் சிறகு விரித்தது.

அவன் நெருங்கி வந்தான்.
பட்டாம்பூச்சி பிடிக்கும்
சிறுவனைப் போல அசையாமல்
அவளையே பார்த்தான்.

சட்டென்று குனிந்தான்.
அவள் அசைவ உதடுகளில்
அவசரமாய் முத்தமிட்டான்.

உதடுகளின் ஓப்பந்தம் சில
நிமிடங்கள் நீடித்தது.
கடைசியில் பார்த்தால்
கரித்தது முத்தம்.

அவனுக்குத் தெரியாமல் அவளும்
அவளுக்குத் தெரியாமல் அவனும்
அழுத துளிகள் பரஸபரம்
உதடுகளில்
பரிமாறப்பட்டிருந்தன.

ஆனந்தக் கண்ணீர் மட்டும்
இனிக்குமா என்ன?

மேகமற்ற ராத்திரி.

மெல்லிய பிறை. ஒற்றை
உதட்டால் சிரித்தது மேற்கு
வானத்தில்.

கலங்காதிரு பிறையே.
உனக்குள்தான்
பூரணச்சந்திரன்
புதைந்திருக்கிறான்
- மகாகவி இக்பாலின் இந்தக்
கவிதை சலீமுக்குத் தெரியாது.

தெரிந்திருந்தால் பிறையை
அவன் முழுமையாய்
ரசித்திருப்பான்.

வயிற்றுக்குள் ஆமையை
நிரப்பிக்கொண்ட ஆனந்தக்
களிப்பில் - ஒரு மயக்க
போதை போன்ற பாதி
உறக்கத்தில் தளத்தில் அவர்கள்
சுதந்திரமாய்ச் சிதறி,
உருண்டும் நெளிந்தும் புரண்டும்
கொண்டிருந்தபொழுதில்
தூரத்தில் தெரிந்தது ஓர் ஒளி
ஊர்வலம்.

தன் உள்ளங்கைகளால் கண்களை
உரக்கத் தேய்த்துக்கொண்டு
மீண்டும் மீண்டும் பார்த்தான்
பாண்டி.

தன்னை மறந்து கத்தினான்.
கப்பல். கப்பல்.

தீப்பிடித்த வீடாய் அந்த
ஒரே சத்தத்தில்
விழித்துக்கொண்டது படகு.

கப்பல்தான். அது
கப்பல்தான். மென்மையாய்
மிதந்துபோகும் ஒரு
வெளிச்சத்தீவு.

அவர்கள் காத்துக்கிடந்த
நம்பிக்கை அதோ
கண்படுதூரத்தில்.

அதோ. அவர்களை உரசாமல்
போகிறது அவர்களின்
ஒளிமயமான எதிர்காலம்.

எப்படி அதை எட்டுவது?

ஒன்று - கப்பலை, அவர்கள்
சென்றுசேர வேண்டும்.
அல்லது -
கப்பல் அவர்களிடம்
வரவேண்டும்.

கப்பலை அவர்கள் சென்று
அடைய முடியாது.

அவர்களின் இருப்பையோ
கப்பல் அறியாது.

அது கெட்டிச்சாயம்
போட்டுக்கொண்ட ராத்திரி.

அவர்களின் இருப்பை
அவர்கள்தான் அறிவிக்க
வேண்டும்.

அவர்களாய் அறிவிப்பதற்கு
இரண்டே வழிகள்.

ஒன்று - ஒலி.
இன்னொன்று - ஒளி.

கப்பல் செல்வதோ ஒலி
எட்டாத தூரம்.
அப்படியே உயிரைத் திரட்டி
ஒலி செய்தாலும் கப்பலின்
எந்திர ஓசைகிழித்து அவர்களை
எட்டுமோ? எட்டாதோ?

அடுத்துள்ள ஒரே வழி - ஒளி.

வெளிச்சம் காட்டுவோம்-
அவர்கள் வேகமான,
விவேகமான முடிவுக்கு
வந்தார்கள்.

படகின் மின்கலம் சில
நாட்களுக்கு முன்பே
செத்துவிட்டது.

ஒரு தீப்பந்தம்
தயாரிக்கலாம் அவசரத்
தீர்மானம் நிறைவேறியது.

அடுத்த விநாடியே
பாய்மரக்கழி ஒன்று
உருவப்பட்டது.

துணி. துணி.

பாய்மரம் பிரிக்கப்பட்டது.

துண்டுகள் - துணிகள் -
லுங்கிகள்
கழியில் சுற்றப்பட்டன.

சற்று நேரத்தில் கழிக்குத்
தலை முளைத்தது.

சரி... சரி.
கொளுத்து.

இரு... இரு. டீசலில்
நனை.

நனைத்தார்கள்.

கொளுத்து.

நிறுத்து.

ஏன் தடுக்கிறாய்?

ஒருவேளை பந்தம்
பற்றாமல் போனால்..?

முதலில் அடுப்பைப்
பற்றவைப்போம். அதிலிருந்து
நெருப்பெடுப்போம்.

அதுதான் சரி.

அவசரமாய் அடுப்படியில்
கூடினார்கள்.

தீப்பெட்டி திறந்தார்கள்.
உள்ளே-
இரண்டே குச்சிகள் இருந்தன.

ஒருவர் முகத்தை ஒருவர்
பார்த்துக் கொண்டார்கள்.

சுற்றி அடிக்கும் காற்று
சுழற்றியது படகை.

தீக்குச்சிகளின் இரண்டு
நுனிகளிலும் அவர்களின்
எதிர்காலம்
திரண்டிருந்தது

ஏ தீக்குச்சிகளே. எங்கள் எதிர்காலத்தின்
மந்திரக்கோல்களே. கைகூப்புகிறோம்
உங்களை, கைவிட்டு விடாதீர்கள்.

நெருப்பை ஒரு சின்னக்குச்சியின் உச்சியில்
சேமித்து வைத்தவனே. உனக்கு எங்கள்
நன்றி.

இந்த நெருப்பை அடைவதற்கு எமக்கு
முன்னிருந்த மனிதஜாதி என்னென்ன
பாடுபட்டிருக்கும்?

ஒரு முங்கில்காடு பற்றுகிறவரைக்கும்
நெருப்புக்குக் காத்திருந்த
ஆதிமனிதர்களைப் போல் -சிக்கிமுக்கிக்
கல்லுக்குள்ளும் தீக்கடைகோலுக்குள்ளும்
நெருப்பைப் பிரசிவிக்கப் பாடுபட்ட
மனிதர்களைப் போல் - உரசியும் - தேய்த்தும்
-கடைந்தும் - குடைந்தும் தீயைத்தேடி
அடைந்த மனிதர்களைப்போல் - இதோ
நாங்களும் எங்கள் உயிரைக் கையில்
பிடித்துக் கொண்டு, எங்கள் ஜீவநெருப்பின்
ஜனனத்துக்குக் காத்திருக்கிறோம்.

தீக்குச்சியே பற்றிக்கொள்.
காற்றே அணைத்துவிடாதே.
தீப்பந்தமே எரி.
கப்பலே நில்.

பாண்டி முதல் குச்சியை எடுத்தான்,
அவனுக்குக் கை நடுங்கியது.
எல்லோரும் வட்டமாய் நின்று காற்றை
மறைத்து வீடு கட்டினார்கள்.

கப்பல் கடந்துவிடப்போகிறது..
உரசு பாண்டி. உரசு.

மென்மையாய் உரசினான்.

அது பற்றவில்லை.

சற்றே அழுத்தினான், ஒரு பாதி மருந்து
உராய்ந்து தேய்ந்தது,

மறுபக்கம் உரசினான்,

அவ்வளவுதான், அது சிரச்சேதமானது.
எல்லோரும் பதறினார்கள்.
இன்னும் ஒரே ஒரு குச்சி..
அவர்களின் உயிர்க்குச்சி.

ஒதுங்கு. என்னிடம் கொடு
தீப்பெட்டியைப் பரதன் வாங்கினான்.

அம்பின் நுனியில் மனம் குவிக்கும் ஒரு
வில்வீரனைப்போல முழு கவனத்தோடு
முனைந்தான்.

தன் உள்ளங்கை உஷணத்தைப்
பட்டைக்கும் தீக்குச்சிக்கும் பரிமாறித்
தீப்பெட்டியை இடக்கையில் இறுக்கிப் பற்றி,
வலக்கையில் தீக்குச்சி ஏந்தித் தன் ஒரு
விரலால் அதற்குப் பக்கபலம் சேர்த்துத்
தன் உள்ளத்தையெல்லாம் தீக்குச்சியில்
வைத்து உரசியபோது முன்றாவது உரசலில்
பொசுக்கென்று பூத்தது நெருப்பு.

ஆகா. உயிரின் ஒளிவடிவம்.

அந்தப் பரவசத்தோடு அதை அடுப்புத்
திரியில் பற்றவைக்கப் போன அந்த
விநாடியின் இரண்டாம் பாகத்தில், சந்துவழி
வந்த சுழற்காற்று அந்த உயிரின் சுடரைப்
பொசுக்கென்று அணைத்துவிட்டுப்
போய்விட்டது.

ஆ. அய்யோ. அய்யய்யோ.

எல்லோரும் பரபரவென்று ஒடிவந்து
விளிம்பில் நின்று பார்த்தபோது கப்பல்
கடந்துவிட்டது.

அவர்கள் நம்பிக்கையின் இறுதி
ஊர்வலமாய் அது தூரத்தில்
மறைந்துகொண்டிருந்தது.

Offline Maran

18

ஏ பகலே.
நாங்கள் என்ன தவறு
செய்தோம்?
பூமிக்கே வெளிச்சம்
கொண்டுவரும் நீ,
எங்களை மட்டும்
ஏன் விட்டுவிட்டு விடிகிறாய்?

எங்கள் ஒவ்வொரு
நம்பிக்கையையும் நீரில்
விழுந்த நிலவின் பிம்பமாய்க்
காட்டுவதுபோல் காட்டி
ஏன் கலைத்துவிடுகிறாய்?

ஏ கடலே.
கருணை காட்டி எங்களைக்
கரைசேர்...
அல்லது உன் வயிற்றுக்குள்
எங்களை உள்ளிழுத்துக்கொள்.
எங்களுக்கு
ஏதாவது ஒன்றுதான் வேண்டும்-
வாழ்வு அல்லது சாவு.

ஆனால் ஒன்று -
இரண்டில் எதுவென்றாலும்,
எமக்கு முழுமையாய் வேண்டும்.

ஒன்று - பூரண வாழ்வு
அல்லது பூரணச் சாவு.

வாழ்வென்றால் -
எதிலும் மிச்சம் வைக்காத
முழுவாழ்வு.

சாவென்றால் -
தவணை முறையில் இல்லாத
முழுச்சாவு.

கொஞ்சம் வாழ்வு -
கொஞ்சம் சாவு...
இந்த விளையாட்டெல்லாம்
வேண்டாம்.

மனித வாழ்வின் பெருந்துன்பம்
எது தெரியுமா?

மரணத்தைவிட வாழ்க்கை
பயமானது என்று தெரிந்த
பின்பும், வாழ்க்கையோடு
ஒட்டிக்கொண்டிருப்பதுதான்.

உடம்பு மெல்ல மெல்ல
உலர்ந்து கொண்டிருக்கிறது.
உயிர் மட்டும் எந்த வழியாக
வெளியேறுவது என்ற
தீர்மானத்துக்குப் பக்கத்தில்
திணறிக் கொண்டிருக்கிறது.

மிக ஆர்வமாய் - ஆனால்,
தீர்க்கமாய்க் கேட்டாள்
தமிழ்ரோஜா.
பேசாமல்
இறந்துவிடலாமா?

முகமெங்கும் முள்முள்ளாய்ப்
பூத்திருந்த தாடியைத்
தடவிக்கொண்டே
ஜீவன் இல்லாமல் சிரித்தான்
கலைவண்ணன்.

இதோ பார். தட்டுப்பட்ட
ஒரே ஒரு கப்பலையும்
தவறவிட்டதற்குத்தானே உன்
கண்கள் மரணக்கண்ணீர்
வடிக்கின்றன? ஓர்
அஸதமனத்துக்காக அழுது,
பூமிக்கு இனிமேல் பகலே
இல்லை என்று புலம்பினால்
எப்படி?

நாம் வாழ வேண்டுமென்று
நம்மைப் போலவே
இயற்கையும் ஆசைப்படுகிறது.
அந்த ஆசையின்
அடையாளங்களே ஆமையும் -
கப்பலும். நீ இடையில்
அடைந்த தைரியத்தை
இழந்துவிடாதே.
சந்தோஷத்தின் தேதி குறிப்பது
மட்டும்தான் மனிதகுலத்தின்
வேலை. சாவின் தேதி
குறிப்பது காலத்தின்
வேலை...

சாவதற்குக்கூட எனக்கு
உரிமையில்லையா?

சாவது என்பது உன்
உரிமையன்று. அது நியதி. நீ
உயிரோடு பூமியில் வந்து
விழுந்ததை எப்படி நீ முடிவு
செய்யவில்லையோ, அப்படியே
- இந்த உடம்பைப் பூமியில்
போட்டுவிட்டுப் போவதையும்
நீ முடிவு செய்ய முடியாது.
கொஞ்சம் போராடு...

போராடும் தெம்பு
போய்விட்டது. என் வாழ்க்கை
முடிந்துவிட்டது...

இல்லை - இனிமேல்தான்
உன் வாழ்க்கை
தொடங்கப்போகிறது.
நிச்சயம் நாம்
கரைமீள்வோம். பிறகு பார்.
மரணத்தின் வாசல்வரை சென்று
மீண்டவர்களுக்கே வாழ்வின்
பெருமை விளங்கும்.

நீ வாழ்க்கையைத்
துளித்துளியாய் ரசிப்பாய்.
வாழ்வின் ஒவ்வொரு கணமும்
உனக்குப் பெருமை
உடையதாகும். ஒவ்வொரு
புல்லிலும் பூவிலும் தீராத
வாழ்க்கை தேங்கி நிற்பது
தெரியும். தான் உதிரும் முதல்
நிமிஷம் வரைக்கும் - ஏன்...
உதிர்ந்து பூமியில்
விழும்வரைக்கும், இந்தப்
பிரபஞ்சத்தின் சந்தோஷத்தை
மட்டுமே காற்றோடு
பேசிக்கொண்டிருக்கும் ஒரு
தென்னங்கீற்றைப் போல -
இனி இன்பமன்றி உனக்கு வேறு
இராது.

முதன்முதலாக மலேசியா
வந்திறங்கிய ஓர் அரபி,
மழைத்துளிகளை நேசிப்பது
போல்- நீ நிமிஷங்களை
நேசிப்பாய். டிசம்பர்
மாதத்தின் இந்திய வெயிலை
நேசிக்கும் ஓர் எஸகிமோவைப்
போல் - நீ வாழ்க்கையை
ரசிப்பாய்.

ஒரு சிறைக்கைதிக்குத்தான்
தெரியும் - சுதந்திரத்தின்
பெருமை. நம்மைப் போன்ற
அலைக்கைதிகளுக்குத்தான்
தெரியும் - பூமியின் அருமை.
பொறு தமிழ். பொறு...
இரவில் நம்மைக் கடந்த
கப்பல், ஒரு பகலில்
கடவாதா?

அவளை அள்ளித் தழுவி ஆதரவு
செய்தான். காமமில்லாமல்
அவள் கழுத்தில் முத்தமிட்டான்.
அவள், அவன் மடியில் முகம்
புதைத்துப் பாதுகாப்பாய்
அழுதாள்.

ஓடிவாருங்கள்...
எல்லாரும் ஓடிவாருங்கள்.
பரதன் தலை சுற்றி
விழுந்துவிட்டான். பயமாக
இருக்கிறது. அவன் கண்ணில்
கருப்புமணிகள் காணவில்லை.
வெள்ளைவிழி தெரிகிறது.
கண்கள் செருகிவிட்டன.
ஓடிவாருங்கள்... எல்லாரும்
ஓடிவாருங்கள்...
- உடம்பும் சொல்லும்
நடுங்க நடுங்கத் துடித்துக்
கத்தினான் இசக்கி.

எல்லோரும் சோர்வு மறந்து
அவனைச் சூழ்ந்தார்கள்.

அசைவற்ற கட்டையாய்க்
கிடந்தவன் முகத்தில், கடல்நீர்
பிழியவும் முனகினான்.

பிறகு சற்றே கண்விழித்தவன் -
பிசாசு, பிசாசு. படகு
பத்திரம். என்று கூறியது
கூறினான்.

உண்மை சொல் பரதன்,
என்ன கண்டாய்? என்ன
உளறுகிறாய்?
- கலைவண்ணன் அவனை
உலுக்கினான்.

அவன் தன் முகத்தைக்
கைகளால் முடிக்கொண்டே
குனிந்து பேசினான்.

நேற்றிரவு நீங்களெல்லாம்
தூங்கிவிட்டீர்கள். நான்
தூங்கவில்லை.
நள்ளிரவுக்குமேல் யாரோ
படகை உள்ளே பிடித்து
இழுப்பதாய்த் தோன்றியது.
படகு விட்டுவிட்டு
இழுக்கப்பட்டது.
படகு முழுக்க இழுக்கப்பட்டு
நாம் முழ்கிப் போவோம்
என்றே நினைத்தேன்.
சந்தேகமே இல்லை
- அது கடல் பிசாசுதான்.
கரையில் கதை கதையாய்ச்
சொல்வார்கள்.
முத்தாண்டிக் கிழவனும் அவன்
பேரனும் அப்படித்தான் இறந்து
போனார்கள். இரவெல்லாம்
பயத்தில் என்னால் பேச
முடியவில்லை. கடல் பிசாசு
நம்மைக் கரையேற விடாது
பேனாக்காரரே.

அவன் மெல்ல நடுங்கினான்.
குலுங்கி அழுதது குன்று.
கண்ணீர் அருவிகள் சிதறின.

கலைவண்ணன், அவன் கைகளை
வாரித் தன் தோள்களில்
இட்டுக்கொண்டான்.

ஒவ்வொரு விரலாய்ச்
சொடுக்கெடுத்துக்கொண்டே
சொன்னான்.

பயம் வேண்டாம் பரதன்.
இப்படிக் கடல் பிசாசு கண்டு
கலங்கும் பயம் உங்களுக்குமட்டுமல்ல, உலகம்
முழுவதுமிருக்கிறது. சற்றே
செவி கொடுங்கள், ஒரு
சரித்திரம் சொல்கிறேன்.
அட்லாண்டிக் சமுத்திரத்தில்
பெர்முடாஸ முக்கோணம்
என்றொரு மர்ம முக்கோணம்
இருக்கிறது. அதற்குள் நுழைந்த
கப்பல்கள் காணாமல்
போயின. காணாமல் போன
கப்பல்களைத் தேடப்போன
விமானங்கள், அந்த
எல்லைக்குள் நுழைந்தவுடன்
வெடித்துச் சிதறின.
அறுபத்திரண்டு கப்பல்களும்
பதினெட்டு விமானங்களும்
இரண்டாயிரம் மனிதர்களும்
அதற்குள் தொலைந்து
போனதாய்ச் சொன்னார்கள்.

தப்பிப் பிழைத்த ஒரு விமானி
சொன்னார்.
விமானத்தை ஏதோ ஒரு
சக்தி இழுத்தது. விமானமே
வேலைநிறுத்தம் செய்தது.
சற்று நேரத்தில்
வெடித்துவிட்டது...

பெர்முடாஸ முக்கோணத்துக்கு
மேலே பல மைல்
தூரத்துக்குப் பரவியிருக்கும்
காந்த சக்திதான் அதற்குக்
காரணம் என்ற ஒரு கற்பனை
முடிவுக்கு வந்தவர்கள்,
அதற்குள் பிளாஸடிக்
படகுகளைச் செலுத்தினார்கள்.
பிளாஸடிக் படகுகளையும்
பெர்முடாஸ சிதறுதேங்காய்
போட்டது. பிறகுதான்
பிசாசுகள் வாழும்
பெர்முடாஸ என்று உலகம்
பேசத் தொடங்கியது.

ஆனால், ரஷயர்கள் மட்டும்
அதை நம்பவில்லை. 1982-ல்
விட்யாஸ என்ற கப்பலில்
புறப்பட்டு, முக்கோண
எல்லைக்குச் சற்றே தூரத்தில்
நிறுத்தித் துப்பறிந்தார்கள்.
கொஞ்சம் முன்னேறவும்,
கப்பலில் இருந்தவர்களுக்குக்
கை-கால் விளங்கவில்லை.
புயலின் சின்னம்
எதுவுமில்லாமலே, புயல்
வீசுவதாய்க் கருவி காட்டியது.
அதன்பிறகுதான் உண்மை
அறியப்பட்டது.

பெர்முடாஸில் ராட்சச
நீர்ச்சுழிகள் உண்டாகி,
நிரந்தரமாய்ச் சுழல்கின்றன.
அதன்மேல் அசுரச் சூறாவளி
ஒன்று அமைதியாய்
வீசிக்கொண்டிருக்கிறது. அதுவே
கப்பல்களும் விமானங்களும்
கவிழக் காரணம். இந்த
விஞ்ஞான நெருப்பு
வீசப்பட்டவுடன், அதுவரை
நம்பப்பட்டு வந்த பிசாசு
இறந்துவிட்டது.

அதைப்போலத்தான் இதுவும்.
கடல்நீரின் ஏற்றவற்றத்தில்
படகு அமிழலாம்.
எழும்பலாம்.

அது பிசாசு அல்ல பரதன்.
பேசாமலிரு.
மனப்பேய்களையும்
மனிதப்பேய்களையும் தவிர,
மனிதப் பிரபஞ்சத்தில் வேறு
பேய்கள் இல்லை. எழுந்திரு
பரதன். எழுந்திரு.

தூங்குமுஞ்சி மரத்தின் இலைகள்
அதிகாலையில் மெல்ல மெல்ல
விரிவதுபோல், பரதன் மெல்ல
மெல்லப் பயம் தெளிந்தான்.
அவனுக்கு முன்னால் அவன்
நம்பிக்கை எழுந்து கொண்டது.

இந்தக் காதுமடல்
இருக்கிறதே. அது உடம்பின்
ஓர் உணர்ச்சிமயமான
பிரதேசம். மெல்லிய
குருத்தெலும்புகளாலான
மென்மையான பாகம்.

அந்தக் காலத்தில் பல
ஜமீன்தார்களுக்குக்
காதுமடல்களை யாராவது
வருடிக்கொடுத்தால்தான்
தூக்கம் வருமாம்.

பாலியல் பொழுதுகளிலும்
அதற்கொரு மன்மதப் பங்கு
உண்டு.

இமைகள் என்னும் முடி
கண்களுக்குண்டு.
இதழ்கள் என்னும் முடி
வாய்க்குண்டு.

முக்கையும்கூடக் கைகளின்
உதவியின்றியே முடிக்கொள்ள
முடியும்.
உடம்பின் பிற வாசல்களும்
அப்படித்தான். ஆனால், இந்த
உடம்பில் காதுகளுக்கு
மட்டும்தான் கதவுகளில்லை.

காதுகளை மட்டும்தான் முயற்சி
இல்லாமல் முட முடியாது.

கண்களையும் வாயையும்
காதுகளையும் தனித்தனியே
பொத்திக் கொண்டிருக்கும்
குரங்குச் சிலைகள் முன்று
தேவையில்லை.
கண்களை இமைகளாலும் வாயை
உதடுகளாலும் சுயமாக
முடிக்கொண்டு, காதுகளை
மட்டும் கைகளால்
பொத்திக்கொள்ளும் ஒரே ஒரு
குரங்குச் சிலை போதும்.

தொழிலாளிகளுக்குக் காதுமடல்
என்பது சேமிப்பு வங்கி.

பீடி, பென்சில், காது
குடையும் குச்சி - இவற்றைக்
காதுமடல்களில்
வைத்துக்கொள்வது அவர்களுக்கு
வசதி.

இசக்கியின் காதுமடலில்
தற்செயலாய்ப் பார்வை
ஓட்டிய சலீம், அண்ணே.
அது என்ன? என்று
ஆச்சரியம் காட்டினான்.

அதில் ஒரே ஒரு குச்சி -
காது குடைய வைத்திருந்த தீக்குச்சி
- காணப்பட்டது.

எப்போதோ எடுத்து வைத்த
அந்தத் தீக்குச்சியும் அதன்
நுனியில் மருந்திருப்பதும்
அவனுக்கு மறந்து
போயிருந்தது.

அதைப் பாய்ந்துசென்று
பறித்துப் பரவசத்தில்
கூத்தாடினான் சலீம்.
தீக்குச்சி. தீக்குச்சி.
என்று கத்தினான்.

வேர்வைச் சொட்டுகளில்
நனைந்திருந்த அந்தத்
தீக்குச்சியை அந்திவெயிலில்
காயவைத்தார்கள்.
அதில் மட்டும் தீப்பந்தம்
பற்றிக்கொண்டால் ஒரு தீர்வு
கிடைக்கும் என்று
நம்பினார்கள்.

ஒரு தாய் தன் குழந்தைக்கு
மைதீட்டும் கவனத்தோடும்,
ஒரு காதலன் தன் காதலிக்கு
முதல் கடிதம் எழுதும்
ஆர்வத்தோடும் அவர்கள்
அதைப் பத்திரமாகப்
பற்றவைக்க, பற்றிக்கொண்டது
தீப்பந்தம்.

ஆகா. ஆகா.
இது நம்பிக்கைச் சுடர்.
வாழ்வின் ஜுவாலை.

இதை அணைய விடக்கூடாது.
இதை அணையவிட்டால், நம்
உயிர்த்தீயை அணையவிட்டோ ம்
என்று அர்த்தம்.

நெருப்பு ஓர் அபூர்வமாகவும்
அதிசயமாகவும் இருந்த
ஆதிகாலத்தில், பழைய
எகிப்திலும் கிரேக்கத்திலும்
ரோமிலும் ஊருக்கு மத்தியில்
ஒரே ஓர் இடத்தில்,
எப்போதும் நெருப்பு
எரிந்து கொண்டேயிருக்குமாம்.
எவர் தேவைக்கும் எடுத்துச்
செல்லலாமாம். அவர்கள்
அதை அணையவிட்டதில்லையாம்.

அப்படித்தான் இதுவும் -
பொதுநெருப்பு.
அணையாமல் காப்போம்.
அனைவரும் காப்போம்.

இரவு...
வானமங்கை தன் அடர்த்தியான
கூந்தலைப் பூமியில்
அவிழ்த்துவிட்டாள்.
நட்சத்திரங்களைக்
காணவில்லை.

ஆனால், அவர்கள்
நம்பிக்கையைப் போலவே,
பிறையும் சில மில்லிமீட்டர்
வளர்ந்திருந்தது.

அங்கங்கே கனத்த மேகங்கள்
வானத்தை மறைத்திருந்தன.

ஏ காலமே. எமக்குக்
கருணை காட்டு. நேற்று
எங்கள் கையில்
தீப்பந்தமில்லை.
எங்கள் பாதையில் ஒரு கப்பல்
கடக்கவிட்டாய். இன்று எங்கள் கையில்
தீப்பந்தமிருக்கிறது, தயவுசெய்து இன்னொரு
கப்பலைக் கடக்கவிடு.

இரவு முழுவதும் தீப்பந்தத்தை
ஒருவரையெருவர் மாற்றி மாற்றி உயர்த்திப்
பிடிப்பதாய் முடிவானது.

பாண்டியின் கையிலிருந்து பரதனுக்கும்,
பரதன் கையிலிருந்து இசக்கிக்கும் வந்த
தீப்பந்தம் நள்ளிரவுக்குப் பிறகு சலீம் கைக்கு
இடம் பெயர்ந்தது.

அவன் உறக்கத்தை உதறிவிட்டுத்
தீப்பந்தத்தை உயர்த்திப் பிடித்தான்,
மற்றவர்கள் உறங்கிவிட்டார்கள்.

நள்ளிரவு கடந்தபோது,
அந்த அதிசயம் நிகழ்ந்தது.

ஒரு கஞ்சனின் பையிலிருந்து அவனுக்குத்
தெரியாமல் விழுந்துவிட்ட வெள்ளிக்
காசைப்போல, மேகத்திலிருந்து அவிழ்ந்து
விழுந்தது ஒரு துளி.

பிறகு, ஒன்றிரண்டு முன்றென்று துளிகளின்
எண்ணிக்கை தொடர்ந்தது.

மழை. மழை.
என்று கத்தினான் சலீம்.

எல்லோரும் அலறியடித்து எழுந்தோடி
வரவும் வானம் கிழிந்து கொண்டது
கொட்டோ கொட்டேன்று கொட்டத்
தொடங்கியது.

ஆனந்தம் - அதிர்ச்சி - பரவசம் -
பதற்றம்.... அவர்களுக்கு ஒன்றுமே
தோன்றவில்லை.

படபடவென்று ஆளுக்கொரு பாத்திரம்
எடுத்தார்கள், பிடித்தார்கள்.

பீப்பாய் கொண்டுவந்து தளத்தில் வைத்தார்கள்
மழை. மழை.
விட்டுவிடக்கூடாது இந்த மழையை
எடுங்கள் தார்ப்பாயை.
நான்கு முனையை நான்கு பேர் ஏந்துங்கள்
சற்றே தார்ப்பாயைத் தளரவிட்டுக்
குழி செய்யுங்கள்,
தார்ப்பாயில் நிரம்பட்டும் தண்ணீர்.

அப்படியே செய்தார்கள்,
அதுவும் வழிந்தது.

ஒதுங்காதே தமிழ்.
வா, வெளியே வா.
கொட்டும் மழையில் முழுக்க முழுக்க
நனைந்துவிடு.
உன் ஆடைகளை நனைத்துத் தண்ணீரைச்
சேமி, பிறகு பிழிந்து கொள்ளலாம்,

அவளும் அப்படியே செய்தாள்.

அவர்கள் குதித்தார்கள் குளித்தார்கள்
கைதட்டினார்கள், கத்தினார்கள்.

மழை நின்றபோது, ஏறத்தாழ அவர்களின்
எல்லாப் பாத்திரங்களும் நிரம்பியிருந்தன.

ஆனால் அவசரத்தில் சலீம் ஓர் ஓரத்தில்
சாய்ந்து நிறுத்திய தீப்பந்தம் மட்டும் மழையில்
அணைந்து கிடந்தது.

Offline Maran

19

அழுவதா? ஆனந்தப்படுவதா?

கைவசம் இருந்த
கடைசிநெருப்பு அணைந்து
போனதற்காக அழுவதா?

அவர்களின் உயிரை ஊறவைக்கும்
தண்ணீரால் பாத்திரங்கள்
நிறைந்து வழிவது பார்த்து
ஆனந்தப்படுவதா?

ஒன்றை இழந்துதான்
இன்னொன்றா?
இயற்கை இட்ட சட்டம்
இதுதானா?

அனுபவம் வேண்டுமா -
இளமையை இழ...
ஆயுள் வேண்டுமா - போகம்
இழ...

கவிதை வேண்டுமா-உன்னை
இழ...
காதல் வேண்டுமா -
இதயத்தை இழ...

வளர்ச்சி வேண்டுமா -
தூக்கத்தை இழ...
வரவு வேண்டுமா -
வியர்வையை இழ.

ஒன்றை இழந்துதான்
இன்னொன்று.

அவர்கள் அணைந்துபோன
தீப்பந்தத்துக்காக
அழுவதாயில்லை.

மழை - உடம்பிலிருந்த உப்புப்
பிசுக்கையும் உள்ளத்திலிருந்த
கண்ணீர்ப் பிசுக்கையும்
ஒருசேரக் கழுவி விட்டதில்
அவர்கள் ஆனந்தமே
அடைந்தார்கள்.

ஆகா.
உடம்பில் தண்ணீர் விழுந்தால்
உயிர் நனைந்து போகுமோ?
பீப்பாய்த் தண்ணீரை
அவர்கள் வாரிவாரிக்
குடித்ததில் வயிறு முட்டியது.

மழை நின்றுவிட்டது.
நனைந்த ஆடையைப் போலவே
உடம்பும் வாடைக்காற்றில்
வெடவெடவென்று ஆடத்
தொடங்கியது.

அய்யோ. என்னை
நனையவைத்து நடுங்கவைத்து
விட்டீர்களே.

கலைவண்ணன் சிரித்தான்.

கண்ணை முடாமல் தும்ம
முடியுமா? தண்ணீர் படாமல்
குளிக்க முடியுமா? எங்கே உன்
ஆடை கொடு. நான் பிழிந்து
விடுகிறேன். ஒரு மிச்சப்
பாத்திரத்தில் அதையும்
பிடித்துக் கொள்கிறேன்.
பிறகு, நானே அதைக்
குடித்துக் கொள்கிறேன்.
முலிகைகளை மோதிவரும்
தண்ணீருக்கே நோய்தீர்க்கும்
குணமுண்டாமே. உன்னைத் தடவி
வந்த தண்ணீருக்கு
என்னை உயிர்ப்பிக்கும் சக்தி
இருக்காதா?

வாடைக் காற்றில் நனைந்து
நடுங்கியவளைச் சிறிதும்
சிந்திவிடாமல் சேர்த்தணைத்துத்
தன் உடம்பின் உஷணத்தை
ஊட்டினான் கலைவண்ணன்.

மீனவர்கள் ஆடை கழற்றிப்
பிழிந்து ஒருவரையொருவர்
துவட்டிவிட்டார்கள்.

விடிந்தது.

மழையில் நனைந்த இரவை
சூரியன் வந்து துவட்டி விட்டது.

தமிழ்ரோஜாவின் கைப்பை
திறந்துபார்த்ததில் பளிச்சென்று
மின்னலிட்டன கலைவண்ணன்
கண்கள்.

நாம் ஒரு கடிதம் எழுதிக்
கடலில் வீசினாலென்ன?

எப்படி எழுதுவது?

இதோ உன் கைப்பையில்
பேனாவும் குறிப்பேடும்...

இரண்டையும் வெளியில்
எடுத்தான்.

தமிழ்ரோஜா என்று எழுதிப்
பார்த்தான். எழுதியது.

சிறந்த யோசனை.
ஆனால், எப்படி
அனுப்புவது?

நம்மிடமிருக்கும் ஒரு
காலிப்புட்டியில்... கடிதத்தை
வைத்து நீர்புகாமல் இறுக
முடியிட்டுக் கடலில் அஞ்சல்
செய்வோம். கரைசென்று
சேர்ந்தாலும் சரி அல்லது ஒரு
கப்பலையோ
கட்டுமரத்தையோ
அடைந்தாலும் சரி

எல்லோரும் கூடிவிட்டார்கள்.
சரி... என்ன
எழுதுவது?

சென்னைக்
கடற்கரையிலிருந்து
வங்காளவிரிகுடாவின்
தென்கிழக்கே 40 முதல் 50
கிலோ மீட்டருக்குள் பதின்முன்று
நாட்களாய்ப் பழுதான படகில்
சிறையிருக்கும் தண்ணீர்க்
கைதிகள் நாங்கள். இது
கடற்பயணிகளின் கையில்
சேர்ந்தால் தயவுசெய்து
எங்களைக் காப்பாற்ற
வாருங்கள்.
கரையிலுள்ளவர்களின் கையில்
சேர்ந்தால் கருணைகொண்டு
காவல்துறை இயக்குநருக்குச்
சேர்த்துவிடுங்கள்.

எதற்கும் தமிழில் எழுதிவிட்டு
ஆங்கிலத்திலும் எழுதுவோம்.

சரியாகச் சொன்னாய்...
நன்றி தமிழ். நன்றி.

ஈரச்சட்டையை உயர்த்திப்
பிடித்துக் காற்றிலும் வெயிலிலும்
உலர்த்திக் கொண்டிருந்த
இசக்கி, பேனாக்காரரே.
எனக்கு ஒரு சகாயம்
செய்வீர்களா? என்றான்.

எல்லோர் பார்வையும்
அவன்பக்கம் திரும்பி
என்னவென்றது.

தாய்-என் தாய்-வாழ்வு,
வைத்துக்கொள்ள முடியாமலும்
சாவு, வாங்கிக் கொள்ள
முடியாமலும் தள்ளாடும் வயதில்
இருக்கும் என் தாய் -
அவளுக்கு ஒரே ஒரு சேதியை
இத்தோடு சேர்த்து
அனுப்பமுடியுமா?

பரதன் படபடப்பானான்.
உனக்கு மட்டும்தான்
சொந்தமா? நாங்களெல்லாம்
அநாதைகளா? எங்களுக்காக
அழுவதற்குக் கரையில் ஆளே
இல்லையா? பேனாக்காரரே.
நானும் சேதி சொல்ல
வேண்டும். எனக்கும் சேர்த்து
எழுதுங்கள்.

கலைவண்ணன் சற்றே மெளனம்
காத்தான். கண்களால் கண்கள்
படித்தான்.
பிறகு பேசினான்.
கடிதம் அனுப்பும் உரிமையும்
உறவும் நம் ஒவ்வொருவருக்கும்
உண்டு. ஆளுக்கொரு கடிதம்
எழுதுவோம். எல்லாவற்றையும்
மொத்தமாக அனுப்புவோம்.
இசக்கி இப்போது உனக்காக
எழுதுகிறேன். என்ன எழுத
வேண்டும் சொல்.

இசக்கியின் உணர்ச்சி -
கலைவண்ணன் வார்த்தைகளில்
கடிதமானது.

அன்புள்ள அம்மா
மேரி செல்லத்தாயி
அவர்களுக்கு. உன் மகன்
கடலுக்குள் இருந்து எழுதும்
கடிதம் இது. நடுக்கடலில்
படகு பழுதாகி உயிருக்குப்
போராடிக்
கொண்டிருக்கிறேன். உன்
வயதான முகத்தை எண்ணி எண்ணி
யாருக்கும் தெரியாமல் அழுது
கொள்கிறேன். விற்பனைக்குக்
கூறுகட்டி வைத்த மீன்களில்
ஒட்டும் ஈக்களை ஓட்டி ஓட்டி
ஓய்ந்துபோன அந்தக்
கைகளுக்கு மீண்டும் முத்தமிடும்
வாய்ப்பைக் கர்த்தர்
எனக்கருள்வாரா? ஒருவேளை,
நான் செத்துவிட்டால்,
தாயே... மீனவர் சங்கம்
வழங்கும் என் மிச்சச்
சேமிப்பில் நம் கூரைவீட்டுக்கு
ஓடு மாற்றிக் கொள்.

இப்படிக்கு,
இசக்கி

இசக்கி கண்ணீரைத் துடைத்துக்
கொண்டான். கலைவண்ணன் தன்
கண்ணீரை மறைத்துக்
கொண்டான்.

இப்போது பாண்டியின் கடிதம்
எழுதப்பட்டது.

என் அன்பு மனைவி
வரலட்சுமி. நீயும்
குழந்தைகளும் சுகமா?
என்னைப் பற்றிக்
கேட்கிறாயா? இந்தக் கடிதம்
எழுதப்படும் இந்த நிமிஷம்
வரை நான்
உயிரோடுதானிருக்கிறேன்.
கரைமீது எங்களுக்கு ஆசை.
எங்கள்மீது கடலுக்கு ஆசை.
எப்படியும் மீள்வோம் என்ற
நம்பிக்கையோடுதான்
இருக்கிறோம். எனக்காக அழ
வேண்டாம். ஒருவேளை, நான்
இறந்துவிட்டால் வளரும்
பிள்ளைகள் வளரும் வரை
அவர்களுக்கு நான் செத்த
செய்தி சொல்லாதே.
கடைசியில், ஒரே ஒரு
உண்மையை மட்டும் உனக்குச்
சொல்லிவிட்டுப் போகிறேன்.
என்னை மன்னிப்பாயா? எனக்கு
வரும் நஷட ஈட்டுத் தொகையில்
ஒரு பகுதியை நம் வீட்டில்
வாழாவெட்டியாக வாழ்ந்து
கொண்டிருக்கிறாளே உன்
தங்கை கலா - அவளுக்கும்
பிரித்துக்கொடு. ஏனென்றால்
எனக்கும்... அவளுக்கும்...
அவ்வளவுதான் சொல்வேன்.
நான் சாவதற்காக
அஞ்சவில்லை. நான் செத்தால்
ஒரே வீடு இரண்டு
விதவைகளைத் தாங்குமா
என்றுதான் வருந்துகிறேன்.
என்னை மன்னிப்பாயா
வரலட்சுமி? மன்னிப்பாயா?

இப்படிக்கு,
பாண்டி

எல்லோரும் ஒருவரை ஒருவர்
பார்த்துக் கொண்டார்கள்.

இப்போது பரதனின்
உணர்ச்சிகள் தமிழாயின.

அன்புள்ள மீனா. என் ஆசை
மகளே. நீ பிறந்தது முதல்
உன்னைப் பத்து
நாட்களுக்குமேல்
பார்க்காமலிருந்தது
இப்போதுதான். ஒருவேளை,
உன்னை இனிமேல் பார்க்கவே
மாட்டேனோ என்று
பயமாகவும் இருக்கிறது. உன்
பிரசவத்திலேயே உன் தாயைப்
பறிகொடுத்த நான்
அப்போதே செத்திருப்பேன்.
ஆனால், உன் பிஞ்சுக்கைகளின்
உத்தரவுக்குத்தான் நான்
பிழைத்துக் கிடந்தேன்.

எனக்கு ஒரே ஓர் ஆசை
இருந்தது தாயே. அந்தத்
தகரப்பெட்டியில் நாப்தலின்
உருண்டைகளுக்கு மேலே மடித்து
வைக்கப்பட்டிருக்கும் உன்தாயின்
பழைய பட்டுப் புடவையை, நீ
வளர்ந்த பிறகு உனக்குக் கட்டி
அழகு பார்த்து.. உன்னில் உன்
தாயைப் பார்க்க
ஆசைப்பட்டேன். என்
நியாயமான ஆசை
அநியாயமான கனவாகவே
அழிந்துவிடுமா? உன் தாயின்
பிரிவை நான் தாங்காதது
போலவே என் பிரிவை அவளும்
தாங்கவில்லைபோலும்.
கண்ணுக்குத் தெரியாத கைநீட்டி
என்னை அழைத்துக்
கொண்டேயிருக்கிறாள். கரை
வந்தால் உன்னோடு
வாழ்வேன். என்னைக்
கடல்கொண்டால் உன்
தாயோடு சேர்வேன். படி
மகளே. படி. நம் இனத்தைப்
பரம்பரைத் துயரிலிருந்து
மீனவர்மகளே... மீட்கப்
படி. ஒரு விதையைப் பூமி
பாதுகாப்பதைப் போல
உன்னை
உன் தாத்தா பாதுகாப்பார்
என்று நம்புகிறேன்.
ஜென்மங்களில் எனக்கு
நம்பிக்கை இல்லை மகளே.
இருந்தால் - எவ்வளவு
வசதியாக இருக்கும்.

உன் அன்பு அப்பா,
பரதன்

கடிதத்தின் கடைசி வரியைச்
சொல்லமுடியாமல் விசும்பி
விசும்பி அழுத பரதனைக்
கட்டிக்கொண்டு ஆறுதல்
சொல்லவந்த பாண்டியும்
ஓவென்று அழுதுவிட்டான்.

சலீம். இப்போது உன்
முறை. என்ன எழுத
விரும்புகிறாய்? யாருக்கு எழுத
விரும்புகிறாய்?

அவன் விரக்தியாய்ச்
சிரித்தான்.

காற்று யாருக்குக் கடிதம்
எழுதப் போகிறது? நான்
அநாதை. எனக்கிருந்த ஒரே
ஓர் உறவு என் மனைவி.
அவளும் ஓடிப் போய்விட்டாள்.
இப்போது நான் எழுத
வேண்டுமென்றால் ஒரே
ஒருத்திக்குத்தான்.
தேநீர்க்கடை
சுப்பம்மாவுக்குத்தான்
எழுதமுடியும்.

எல்லோரும் நிமிர்ந்து
பார்த்தார்கள்.
சொல்கிறேன்
எழுதுங்கள். சலீமுக்காகக்
கலைவண்ணன் பேனா ஒரு
காதல் கடிதத்தை முத்தமிடக்
குனிந்தது.

அன்புள்ள சுப்பம்மா.
செளக்கியமா? சாவுக்குப்
பக்கத்தில் நானும்
செளக்கியமாயிருக்கிறேன்.
ஒரே ஒரு நம்பிக்கை - உன்
நினைவுதான். ஊருக்குத்
தெரியாத நம் சிநேகம்தான்
என்னை உயிர்வாழச்
சொன்னது. ஆனால், நான்
காதலிப்பது கடலுக்குப்
பொறுக்கவில்லை
போலிருக்கிறது. ஒரு
கோப்பைத் தேநீரை உன்னைப்
பார்த்துக் கொண்டே ஒரு மணி
நேரம் குடிக்கும் சுகம் இனி
வாய்க்குமா? உன் கணவனைப்
போலவே உன் காதலனும்
அகால மரணமடைய
வேண்டியதுதானா? இந்த
அலைகடலுக்கு மத்தியில் நான்
அழிய நேரும்போதும் என்
கடைசிச் சக்திகளையெல்லாம்
திரட்டி உன் பெயரை மட்டுமே
உச்சரிக்கப் பயன்படுத்துவேன்.
உன் பெயரை அலைகள்
கற்றுக்கொள்ளும். கரையில்
நின்று கேட்டுப்பார். ஓடிவந்து
மோதும் ஒவ்வோர் அலையும்
சலீமின் சார்பாக உன் பெயர்
சொல்லும். எனக்கான
துக்கத்தை ஒருவாரத்துக்கு
மேல் நீட்டிக்காதே.

காதல் என்பது எனக்கும்
புதிதல்ல. உனக்கும் புதிதல்ல.
என் ஞாபகத்தை எங்காவது
ஒரு முலையில் முடிந்துவிட்டு நீ
இன்னொரு வாழ்க்கை
தொடங்கு.

இப்படிக்கு,
உன் சலீம்.

சலீம். அழக்கூடத் தெரியாத
அப்பாவியே. உனக்குள் இப்படி
ஒரு வாழ்க்கையா?

அவன் உள்ளங்கைகளை
உறவோடு பற்றித் தாடி
முளைத்த கன்னம் தடவினார்கள்
மீனவர்கள்.

முடிந்தது கடிதம்.
இந்தக் கடிதத்துக்குக்
காலிபுட்டிதான் உறை.

எல்லாம் சரி.. இந்தத்
தபாலுக்குக் கட்டணம் கட்ட
வேண்டுமே...

கடல் தபாலுக்குக்
கட்டணமா?

இது யார் கையில்
சேர்ந்தாலும் அவர்கள் அதை
அலட்சியப்படுத்திவிடக்
கூடாதல்லவா.
கொண்டு சேர்ப்பவர்களுக்குக்
கூலிவேண்டாமா?

கூலியா? கூலிக்கு எங்கு
போவது?

எல்லாரின் சில்லறைகளையும்
திரட்டத் தொடங்கினார்கள்.
தொகுத்தபிறகும் ருபாய்
நூற்றுப்பதினேழு ஐம்பதுதான்
தேறியது.

இது போதாது என்று
உதடு பிதுக்கினான் கலைவண்ணன்.

யோசித்துத் தாழ்ந்த கண்கள்,
தமிழ்ரோஜாவின் விரலிலிருந்த
தங்கமோதிரத்தில் பட்டுத்
தெறித்தன.

காணாமல்போன குழந்தையை
மீண்டும் கண்டெடுத்த ஒரு
தாயைப் போலப்
பரபரவென்று அவள் கைபற்றிய
கலைவண்ணன் கழற்று.
உடனே கழற்று என்றான்.

அய்யோ. இது நீங்கள் என்
பிறந்த நாளுக்குப்
பரிசளித்தது -அவள்
வெடுக்கென்று கையிழுத்தாள்.

இன்னொரு பிறந்த நாள்
உனக்கு வேண்டுமா வேண்டாமா
- கழற்று அவன் கடிந்து
சொன்னான்.

மாட்டேன்...
மாட்டேன்...

அவள் முரண்டுபிடித்தாள்.
அவன் முயன்று பறித்தான்.

அந்த மோதிரத்தைப்
புட்டியிலிட்டுப் பூட்டினார்கள்.

அதில் நீர்புகாமல் இருக்க
உப்புத்தூள் கொண்டு வந்த
பாலிதீன் பை சுற்றிக் கயிறு
கட்டினார்கள்.
அதில் ஒவ்வொருவராக உதடு
பதித்து முத்தமிட்டார்கள்.

தமிழ்ரோஜா மட்டும் தன்
விரலைத் தொட்டுத் தொட்டுப்
பார்த்து விசும்பிக்
கொண்டிருந்தாள்.

அந்தக் கடிதத்தைக் கலைவண்ணன்,
பலம் கொண்ட மட்டும் கடலில் வீசினான்.
நீரலைகளில் அது மிதந்தது - மிதந்தது,
சற்று நேரத்தில் அவர்கள் பார்வையிலிருந்து
மறைந்தது.

Offline Maran

20

நாவுக்கு மட்டும் என்பதில்லை
உடம்பின் ஒவ்வோர்
உறுப்புக்கும் கேட்கத்
தெரியும்.

உடம்பில் நீர் குறைந்தால்
தாகத்தின் வழியே அது தண்ணீர்
கேட்கும்.

உடம்பு களைத்துப் போனால்
கண்கள் உறக்கம் கேட்கும்.

புறத்தோலில் அரிப்பென்றால்
உறக்கத்திலும் சொறியக்
கேட்கும்.

உயிர் துடித்தால் கலவி கேட்கும்.
உடல் துடித்தால் உணவு கேட்கும்.

அன்றென்னவோ பாண்டியின்
மனசுக்குப் பாட்டுக்
கேட்கத் தோன்றியது.

ஏதோ ஒரு நெகிழ்ச்சி -
ஏதோ ஒரு கிளர்ச்சி...
கடலில் வீசிய புட்டி வெடித்துப்
பூதம் கிளம்பி நாம்
காப்பாற்றப்படுவோம்
என்றதொரு நம்பிக்கையின்
மலர்ச்சி.

எனக்கு இப்போது
பாட்டுப்பாட வேண்டும் அல்லது
கேட்க வேண்டும்
போலிருக்கிறது. என்றான்
பாண்டி.

நீ தண்டிக்க வேண்டாம்.
நானே தண்டிக்கிறேன்
என்றான் சலீம்.

நீ பாடப்போகிறாயா?
என்றான் இசக்கி.

பாடக்கூடாதா?
என்றான் சலீம்.

ஆயுள் தண்டனைக் கைதி
நான். கசையடி என்ன
செய்யும்... பாடு.

இசக்கி தண்டனைக்குத் தன்னைத்
தயாரித்துக் கொண்டான்.

சலீம் தன் சொந்த
சோகத்தில் சுதி சேர்த்தான்.

இக்கரையில் நானிருக்க
அக்கரையில் அவளிருக்க
அக்கறை இல்லாததென்ன
கடலலையே.

அந்தக் கடைசி சுரத்தின்
ஏகாரசங்கதியில் ஏறி
உட்கார்ந்தவன்
இறங்கவேயில்லை.

நிறுத்து. இல்லையென்றால்
நான் பாட
வேண்டியிருக்கும். இசையைக்
கசக்கிப் பிழிந்தவனை நோக்கி
இசக்கி கத்தினான்.

இசக்கியின் கத்தலுக்காக அல்ல
- அதற்கு மேல் பாட்டு
வரிகள் தெரியாததால் சலீம்
தன்னைத் துண்டித்துக்
கொண்டான்.

வாடிக்கிடந்த தமிழ்ரோஜாவை
மார்பில் அணிந்த வண்ணம்,
அவள் அழுத கண்ணீரில் தான்
நனைந்த கலைவண்ணன்,
மீனவர்களின் பாமர
நாடகத்தையும் பக்கவாட்டில்
ரசித்துக் கொண்டான்
பாதிக்கண்களால்.

நீ பாடு பரதன்.
எனக்கொரு நல்ல பாட்டுக்
கேட்க வேண்டும்

பரதன் சுற்றும்முற்றும்
பார்த்தான்.
நீங்கள் தப்பிக்க
வேறுவழியே இல்லை என்பதால்
பாடுகிறேன்.

கானம் பாடுவதற்கு முன்னால்
அவன் கனைத்தபோது ஒரு
குதிரை சங்கீதத்துக்குத்
தயாராவது போலிருந்தது.

தோணி வருகுதுன்னு
துறைமுகமே காத்திருந்தேன்
தோணி கவுந்திருச்சே
துறைமுகமே ஆசையில்ல

கப்பல் வருகுதுன்னு
கடற்கரையே காத்திருந்தேன்
கப்பல் கவுந்திருச்சே
கடற்கரையே ஆசையில்ல.

அவன் பாடியதில் பாவமில்லை.
ஆனால், உணர்ச்சி இருந்தது-
வெயிலில் சருகானாலும் வீரியம்
போகாத முலிகை மாதிரி.

ஆனால், புன்னகையில்
தொடங்கிய பாட்டு கண்ணீரில்
முடிந்து போனது -
ஈரங்காயப் போட்ட துணி
மழையில் நனைந்தது மாதிரி.

அந்தப் படகில் மெல்லியதாய்
விழுந்த ஒரு சந்தோஷ
நிழல் விசுக்கென்று மறைய
மீண்டும் வெயில் சுட்டது.

மீனவர் நால்வரும் அவரவர்
சோகத்தில் அமிழ்ந்து
கண்ணீர் குடித்த வேளையில் -
தமிழ்ரோஜாவைச் சற்றே
தளர்த்தித் தளத்தில் கிடத்தி
வந்த கலைவண்ணன்
ஒவ்வொருவர்
தோளையும் உரிமையாய்த்
தொட்டான்.

என் தோழர்களே.
மீன் பிடிக்க வந்து சந்தர்ப்பம்
பின்னிய சதிவலையில் சிக்கிக்
கொண்டவர்களே.
இப்போது நீங்கள்
பாடவேண்டிய
பாடல் இதுவல்லவே.

முத்துக் குளிக்கும் சக்தி
கொண்ட நீங்கள்... உங்கள்
கண்களில் உப்புக்
காய்ச்சக்கூடாது.
உங்களுக்காக நான்
பாடுவேன். உங்கள் நம்பிக்கை
நரம்பு தேடி எடுத்து அதில்
சந்தோஷ ஊசி போடுவேன்.
சிரிப்பவனைப் பார்த்து மரணம்
தூரத்தில் நிற்கிறது. அழுபவன்
வீட்டுக் கதவைத்தான் அது
அவசரமாய்த் தட்டுகிறது.

இப்போது நாம் நம்பிக்கை
பேசுவோம். நம் உடம்பும்
மனசும் உலராதிருக்க
உற்சாகத்தில் கொஞ்சம்
நனைத்து வைப்போம்.
உங்களுக்கு நான் ஒரு பாடல்
கொண்டு வந்தேன். என்
தமிழை உங்கள் இதயப்
பலகையில் எழுதிக்
கொள்ளுங்கள்.

காதுவழிப்புகும் என்
கானவரிகளை ரத்தத்தில்
கரைத்துக் கொள்ளுங்கள்.

என் பாடலால் உங்கள்
நம்பிக்கையும் கனவுகளும்
ஒருநாள் நீட்டிக்கப்பட்டாலும்
நான் பிரம்மனின் வேலை
செய்தேன் என்ற பெருமை
பெறுவேன். எங்கே, உங்கள்
கண்ணிமைகள் மெள்ளக் கவிழ்ந்து
கொள்ளட்டும்.
உங்கள் செவிகள் எனக்காகத்
திறந்திருக்கட்டும்.

அவன் மெல்லிய குரலில்
பாடத்தொடங்கினான்.
மீனவர்களின் இதய இறுக்கம்
மெள்ள மெள்ள அவிழத்
தொடங்கியது.

நீர்மட்டத்துக்கு மேலே
தலைதூக்கும்
தண்ணீர்ப்பாம்பாய்த் தளத்தில்
கவிழ்ந்து கிடந்த
தமிழ்ரோஜாகூட மெள்ளத்
தலை தூக்கினாள்.

காற்றோசையே சுருதி.
அலைகளே தாளம்.
அரங்கேறியது பாட்டு

மனிதன் நினைத்தால்
வழி பிறக்கும்.
மனதிலிருந்தே
ஒளி பிறக்கும்

புதைக்கின்ற விதையும்
முயற்சி கொண்டால்தான்
பூமியும்கூடத் தாழ் திறக்கும்


கண்களிலிருந்தே
காட்சிகள் தோன்றும்
களங்களிலிருந்தே
தேசங்கள் தோன்றும்

துயரத்திலிருந்தே
காவியம் தோன்றும்
தோல்வியிலிருந்தே
ஞானங்கள் தோன்றும்

சூரியன் மறைந்தால்
விளக்கொன்று சிரிக்கும்
தோணிகள் கவிழ்ந்தால்
கிளை ஒன்று கிடைக்கும்

மரமொன்று விழுந்தால்
மறுபடி தழைக்கும்.
மனம் இன்று விழுந்தால்
யார் சொல்லி நடக்கும்?

பூமியைத் திறந்தால்
புதையலும் இருக்கும்.
பூக்களைத் திறந்தால்
தேன்துளி இருக்கும்

நதிகளைத் திறந்தால்
கழனிகள் செழிக்கும்
நாளையைத் திறந்தால்
நம்பிக்கை சிரிக்கும்.

குஞ்சுகளைத் தன் அலகால்
கோதிவிடும் தாய்ப்பறவை
போல - கலைவண்ணன் பாடல்
அவர்கள் மனசு கோதியது.

மீண்டும் புன்னகை
வெயிலடிக்கவும் காய்ந்தது
கண்ணீர்.

பாட்டு முடிந்ததும் அவன்
தாவிப்பாய்ந்து தமிழை அள்ளித்
தன் மடி கிடத்தியபோது அவள்
தேகம் லேசாய்த் தகித்தது.

நெற்றி தொட்டான். சுட்டது.

கடலுக்கு என்ன தெரியும்-
அந்த புட்டியின் ஜாதகம்.
அதனுள் ஆறு ஆருயிர்கள்
அடக்கம் என்று அறியாமல்
அலைகள் அதை
உதைபந்தாடின.

ஏ உயிர்த்தூதுவனே.
கரை சேர்வதற்குள் நீ
கரைந்து போவாயா?

போ. போ.
அலைகளோடு யுத்தம் நடத்து.
காற்றை எதிர்த்துப்
போராடு. முட்டவரும்
மீன்களை எதிர்த்து முன்னேறு.
எப்போதாவது ஒரு சிப்பிக்குள்
விழும் மழைத்துளியைப் போல
ஏதாவதொரு மனிதக்கரத்தில்
சேர்ந்து விடு.
போ. போ.
வாழ்க்கை இன்னும் சில
கிலோ மீட்டர்தான். எட்டி
உதைத்து எதிர்நீச்சல் போடு.


சமுகம் வரவர
இறுகிக்கொண்டே வருகிறது.
மனிதன் கெட்டிப்பட்டுப்
போனான்.
நான்கு அறைகள் கொண்ட
இதயம் இறுகி இறுகி ஒரே
அறையில் இயங்கப்
பழகிவிட்டது.

அந்தி வெயிலில் விழும்
நிழலைப்போல சுயநலம் நீண்டு
கொண்டே போகிறது.

மனிதன் தன் சொந்தச்
செலவுக்கு மட்டுமே கண்ணீரைச்
சேமித்து வைக்கிறான்.

பொதுநலம் இறந்து
கொண்டிருக்கும் சமுகப்
போக்கில், போராட்டம்
இல்லாமல் எதுவுமே
கிடைப்பதில்லை.

பாலையில் நீர் காணப்
போராடலாம், பாறையில்
பயிர் வளர்க்கப்
போராடலாம், ஆனால்,
சுத்தம் அழிந்த இந்தச் சமுக
அமைப்பில் சுவாசிக்கக்கூடப்
போராட வேண்டியிருக்கிறது.

சந்திரோதயத்துக்காக -
சத்தியாக்கிரகம்.
மொட்டுகளுக்கு முன்னால் -
மலரச்சொல்லி மறியல்.

உணவு கிடைக்கும்வரை
உண்ணாவிரதம்.

இயல்பான சங்கதிகள்கூட
இங்கே இறுக்கமாகிவிட்டன.

முறைகெட்டுப்போன வாழ்க்கை
முறையில் சரியாகச்
சாப்பிடுகிறவன்கூடச்
சாதனையாளனாகி விட்டான்.

காணாமல் போன மீனவர்களை
மீட்கப் போராடாமல் தீராது
என்ற முடிவுக்கு வந்த மீனவர்
சங்கம் அடுத்த நாளே அதை
அமல்படுத்தியது.

முவர்ணக்கொடிகள்
கோட்டைக்கு
முன்னேறும் நேரம் அது.

ஆண்களும் பெண்களுமாய்ச்
சாலையின் இருமருங்கும்
அறிவிப்பில்லாமல்
அணிவகுத்தார்கள்.

குறிப்பிட்ட அமைச்சரின் கார்
தூரத்தில் வருகையில் பத்து
வயதுக்குட்பட்ட குழந்தைகளைத்
தார்ச்சாலைத்
தாமரைகளாய்த் தரையில்
பரப்பினார்கள்.

மனிதச் செங்கற்களால்
கட்டப்பட்ட வேகத்தடை.

கண்ணிமைக்கும் நேரத்தில்
நடந்துபோன இந்த அதிர்ச்சி
கண்டு கார்கள் மாரடைத்து
நின்றன.

என்ன? என்னவாயிற்று?
அமைச்சர்கள் இறங்க,
பாதுகாப்பு அதிகாரிகள்
படபடக்க நேர்முக
உதவியாளர்கள் கோப்புகளால்
தங்கள் மார்புக்குக்
கவசமிட்டுக் குதிக்க,
வாகனங்கள் வரிசைகட்ட,
கூட்டம் கூச்சலிட அமைதி
இழந்தது அந்த இடம்.

என்ன? என்ன கோரிக்கை
உங்களுக்கு? ஏனிந்தப்
போராட்டம்?
ஒலிபெருக்கி தேவையில்லாத
கட்டைக்குரல் அமைச்சர்
கத்தினார்.

மீன் பிடிக்கப் போன
எங்கள் மீனவர்களை இரண்டு
வாரங்களாய்க் காணவில்லை.
மீட்பதற்கு எந்த முயற்சியும்
நடக்கவில்லை.

மனுக்கொடுத்தீர்களா?

சங்கத்தின் முலமாய்க்
கொடுத்துப்
பார்த்தோம். ஆனால்,
மந்திரிக்கும் மழைக்கும்
மனுச்செய்து புண்ணியமில்லை
என்று புரிந்துதான் போராட
வந்திருக்கிறோம்.

அமைச்சர் சற்றே
சிந்தித்தார்.
தன் கோபத்தைத் தோளில்
ஆடும் துண்டால் துடைத்தார்.

இதற்குத்தான் இந்த
அதிகாரிகளை நம்பி ஆட்சி
நடத்தக்கூடாது என்பது.
என்னிடமல்லவா கொடுத்திருக்க
வேண்டும். கொடுங்கள்.

நகல் அவரிடம் நீட்டப்பட்டது.

படித்தார்.

முதல் பக்கத்தை
எழுத்துக்கூட்டவே முன்று
நிமிடமாயிற்று.

சரி. சரி. இன்றைக்கே
ஏற்பாடு செய்கிறேன்
என்றவர்,
சாலையில் படுத்திருக்கும்
அத்தனை பிள்ளைகளுக்கும்
ஆளுக்கு நூறு ருபாய்
கொடுத்து எழுப்பு என்று
உதவியாளருக்கு
உத்தரவிட்டார்.

மன்னிக்க வேண்டும் நாங்கள்
உங்களுக்குக் கொடுத்தாலும்
நீங்கள் எங்களுக்குக்
கொடுத்தாலும் அதற்கு பெயர்
லஞ்சம்தான். இது
போராட்டம்.
படப்பிடிப்பல்ல. என்ற
மீனவர் சங்கத்தலைவன்,
எல்லோரும் கலைந்து
செல்லுங்கள் என்று உரத்த
குரலில் உத்தரவிட்டான்.

தாமரை மொட்டுக்கள்
மொத்தமாய் மலர்ந்து
குளத்தைக் கடந்து கரைக்குப்
போவது போல் அத்தனை
குழந்தைகளும் எழுந்து
அமைதியாய்க் கலைந்து
கூட்டத்தில் கரைந்தார்கள்.

சற்று நேரத்தில் அந்தக்கூட்டம்
வழுக்கைத் தலையில் விழுந்த
மழைத்துளியாய் வழிந்து
போனது.

அகத்தியர் தொலைபேசியைக்
கையிலெடுத்து அவரே
பொத்தான்களை அழுத்தினார்.

தொலைபேசியை அவரே
அழுத்துவது அபூர்வம்.
அப்போதெல்லாம் அவர்
ஆவேசத்திலிருக்கிறாரென்று
அர்த்தம்.

அந்தத் தொலைபேசியின்
பொத்தான்களுக்கு மெல்லிய
இறகின் ஸபரிசம் போதும்.
ஆனால், அவர் அழுத்திய
அழுத்தலில் தொலைபேசி
துளைபேசியாகிவிடும்
போலிருந்தது.

ஐ.ஜி அவர்களே.
இன்று மாலைக்குள், என் மகள்
எங்கிருக்கிறாள் என்று தெரிய
வேண்டும். இன்று அல்லது
நாளைக்குள்
தெரியவில்லையென்றால்...
அதற்குமேல் சொல்ல வந்த
கெட்டவார்த்தைகளைத்
தொலைபேசியை வைத்துவிட்டுப்
பேசினார்.

ஏ.ஸி. அறையில் உடம்பு
சுட்டது.

கடல் -

அதோ. அதோ.
என்றான் கட்டுமரக்கிழவன்.

என்ன? எங்கே?
என்றான் இளையவன்.

அவன் விரல் காட்டிய திசையில்
பாய்ந்து குதித்துப் புட்டியை

கைப்பற்றினான் இளைஞன்
பாவம். இருவருமே படிக்காதவர்கள்

Offline Maran

21

மனிதர்களில் குதிரைகள் உண்டு.
தம் நிழல் கண்டு தாமே
அஞ்சும் குதிரை மனிதர்கள்.

மனிதர்களில் விட்டில்கள் உண்டு.
பூத்துக் குலுங்கும் பூக்கள்
அழைத்தாலும் பூக்களில்
வாயூன்றித் தேன்குடிக்கத்
தெரியாமல் இலைகள் தின்னும்
விட்டில் மனிதர்கள்.

மனிதர்களில் குரங்குகள் உண்டு.
தங்கக் கிண்ணத்தோடு அப்பம்
கிடைத்தாலும் அப்பம்
கவர்ந்துகொண்டு
தங்கக்கிண்ணத்தைத் தரையில்
எறிந்துவிடும் குரங்குமனிதர்கள்.

கட்டுமரக் கிழவனையும்
இளைஞனையும் அப்படித்தான்
பீடித்தது அறியாமை அச்சம்.

புட்டியின் முடி திறக்க இளைஞன்
தவித்தான். கிழவன்
தடுத்தான்.

இது கடத்தல் புட்டியோ.
வெடிகுண்டுப் புட்டியோ.
வேண்டாம் விளையாட்டு. வீசி
எறிந்துவிடு.

கிழவன் சொன்னதை இளைஞன்
செய்தான். மீண்டும் அலைகளின்
கால்களில் அது
உதைபந்தானது.

கலைவண்ணன் இன்னும்
கண்திறக்கவில்லை.
ஆனால், கைகளும் செவிகளும்
மட்டும் விழித்துக்கொண்டன.

ஏதோ சுடுகிறது - கைகள்
சொல்லின.
ஏதோ ஒரு முனகல் -
செவிகள் உணர்ந்தன.

புணர்ந்து கிடக்கும்
காதலர்களை முயன்று பிரிப்பது
மாதிரி தூக்கத்திலிருந்து
இமைகளைத் துண்டித்துப்
பிரித்தான்.

என்னவாயிற்று தமிழுக்கு?

ஒரு புழுவைத் தொட்டவுடன்,
உடம்பின் இரு துருவங்களையும்
அது ஒன்றாகச் சுருட்டிக்
கொள்வது மாதிரி
குமரித்தாமரை ஏனிப்படிக்
குறுகிக்கிடக்கிறாள்.

அந்த அழுக்குப்
போர்வைக்குமேலே
அனலடித்தது.

போர்வையைப் புறந்தள்ளி
அவள் நெற்றி தொட்டான்.

தொடர்ந்து தொட
முடியவில்லை - அவ்வளவு
வெப்பம்.

எந்த மொழியிலும் சேராத,
ஆனால் எந்த மொழிக்காரனும்
புரிந்துகொள்கிற ஒலிகளை
அவள் முனகினாள்.

இது மழைக்காய்ச்சல்.
அய்யோ இவளை நனையச்
சொன்னவன் நான்தானே.
தமிழ். தமிழ்.

அவன் கூப்பிட்ட குரலுக்குப்
பதிலில்லை.

என்ன இது? நேற்று ஒத்தடச்
சூட்டைப்போல் இருந்த
காய்ச்சல், இன்று
உலைச்சூட்டைப் போல்
ஏறிவிட்டதே. சித்திரை
மாதத்துக் கத்திரிவெயிலாய்த்
தேக வெப்பம்
அதிகமாகிறதே. பசியாலும்
தாகத்தாலும் தேய்ந்தும்,
நைந்தும், தொய்ந்தும்
கிடக்கிற தேகம் - இந்தக்
கடுங்காய்ச்சல் எப்படித்
தாங்கும்?
ஏ, பாலைவனப் பஞ்சே.
உன்னைப் பற்ற வைத்தது
யார்?

தண்ணீரில் தன் கைக்குட்டை
நனைத்தான்.
அதைப் பிழிந்தும் பிழியாமல்
அவள் நெற்றியில் பரப்பினான்.

அசோகவனத்தில் கண்ணீரில்
நனைந்த சீதையின் மேலாடை
அவள் பெருமுச்சில்
உலர்ந்ததுபோல், அடுத்த சில
நிமிடங்களில் காய்ந்துபோனது
கைக்குட்டை.

வெயில் ஏறஏற அவளுக்குக்
குளிரெடுத்தது.

மீனவர்களின் துணிகளையும்
போர்வைகளையும் சேர்த்துப்
போர்த்திப் பார்த்தபோதும்
காய்ச்சல் இறங்கவில்லை.
நடுக்கம் அடங்கவில்லை.

இமை திறக்க முடியவில்லை.

கண்கள் அவள்
கட்டுப்பாட்டைவிட்டுப்
போய்விட்டன.

அவள் கைகள் மட்டும்
அனிச்சைச் செயலாய்
அசைந்தசைந்து எதையோ
தேடின.

கலைவண்ணனின் கைகள்
தொட்டதும் தேடல் நின்றது.

உயிரின் பாசமெல்லாம் அந்த
ஸபரிசத்தில் குவிந்தது.

நோய் என்பதொரு கொடை.

தறிகெட்டோ டும் வாழ்க்கையில்
அது ஒரு மெல்லிய
வேகத்தடை.

வாழ்வின் பெருமையை
உயர்த்துவதும் - உறுப்புகளின்
அருமையை உணர்த்துவதும் -
நேற்றையும் இன்றையும்
நேசிக்க வைப்பதும் -
தன்னைச் சார்ந்தவர்பற்றி
யோசிக்க வைப்பதும் - ஒரு
நிமிஷச்சொட்டின் விலை என்ன
என்று நிறுத்துச் சொல்வதும் -
செலுத்தப்படாத அன்பைச்
செலுத்தச் செய்வதும் - திமிர்
கொண்டோ டும் தேகத்தை
ஞானப்பாதைக்கு அழைத்து
வருவதும் -
மனிதனுக்குள்ளிருக்கும்
சிங்கம்புலிகளைத்
துரத்தியடிப்பதும் -
கடந்தகாலத் தவறுகளை
எண்ணிக் கடைவிழியில் நீரொழுக
வைப்பதும் - நோய்தான்.

ஆகவே உடம்பே.
அவ்வப்போது கொஞ்சம்
நோய் பெறுக.

நோயற்ற வாழ்வுதான்
குறைவற்ற செல்வம்.

ஆனால் நோயும் ஒரு
செல்வமென்று பட்டுத்தெளி,
மனமே.

தன்மடியில் தமிழ்ரோஜாவின்
தலைதாங்கிக் கிடந்தவன்,
அவள் ஒரக்கண்ணில் சொட்டும்
சுடுகண்ணீர் துடைத்தான்.

தமிழ். தமிழ்.
என்றான்.

அவள், தண்ணீர்.
தண்ணீர். என்றாள்.

அவன் தண்ணீர் கொண்டுவந்து
தாய்ப்பாலாய் ஊட்டினான்.
குலுங்கும் வாகனத்தில்
தாயைக்கட்டிக் கொள்ளும்
குழந்தைமாதிரி - அவனைச்
சேர்த்துக் கட்டி, அவன்
மடியில் புதைந்து போனாள்.

அவன் இடுப்பைச் சுற்றி
நெருப்பெரிந்தது.

ஏதோ முனகினாள்.

அவன் சப்தங்களுக்குப்
பக்கத்தில் செவிகளை
வைத்தான்.

அவள் முனகியது கேட்டது.

எனக்குத் தெரியும், நான்
இறந்துபோவேன்.

அவன் துடித்துப் போனான்.

அடியே. என் ஆருயிரே.
என்ன சொன்னாய்? நீ இறந்து
விடுவாயா? உன்னை
இறக்கவிடுவேனா? என்
உயிரை உறைபோட்டல்லவா
உன் உயிரை வைத்திருக்கிறேன்.
மரணம் என் உயிர் கிழிக்காமல்
உன் உயிர் தொடுவது எப்படி?
உன்மீது நான் கொண்டிருப்பது
வெறும் தசைநேசமன்று.
அது - காதலும் தாய்மையும்
கலந்தஅபூர்வ அனுபவம்.
என் உயிரின் பெண்வடிவம் நீ.
உன் உயிரின் ஆண்வடிவம் நான்.
இதில் யாருக்குத் தனியாகச்
சாவு வரும்? நீ மரித்தால்
என் மரணம். நான் மரித்தால்
உன் மரணம். நாம்
மரிக்கமாட்டோ ம். யார்
உயிர் யாருடையதென்று
மரணத்துக்குக் குழப்பம் வரும்.
நாம் மரிக்கமாட்டோ ம்.

அவள் உதடுகள் சிரமப்பட்டுச்
சிரித்தன.

இது ஆறுதல். உங்கள்
உணர்ச்சி உண்மை. ஆனால்,
அது உயிர்காக்கப்
போவதில்லை. என் உடம்பில்
இப்போது எதுவுமில்லை. நான்
ஏறக்குறைய இறந்துவிட்டேன்.
உயிரின் கடைசித் துளிகளை
ஆவியாக்கத்தான் என் உடம்பில்
காய்ச்சல்
உலைமுட்டியிருக்கிறது.

கண்களைத் திறக்க முடியாதவள்
கைகளால் அவன் முகம்
துழாவினாள்.

அவன் நெற்றியை, முக்கை,
கண்களை, தாடி முளைத்த
கன்னத்தைத் தடவித் தடவிப்
பார்த்தாள்.

அந்தக் கடுஞ்சூட்டிலும் முகத்தின்
ஒரு முலையில் பரவசம்
காட்டியவள் -
நான் சாவதில் எத்தனை
சந்தோஷப்படுகிறேன்
தெரியுமா? என்றாள் மிக
உண்மையாய்.
அவள் உதடுகளைத் தன்
உள்ளங்கையால் பொத்தியவன்,
உளறாதே. என்று
பதறினான்.

இல்லை. என் சாவையும்,
சந்தோஷத்தையும் உங்களால்
தடுக்க முடியாது. பூ உதிர்ந்து
ஒரு புல்வெளியில் விழுவது
மாதிரி உங்கள் பாதுகாப்பான
மடியில் நான் பத்திரமாகச்
சாகிறேன்.

அவன் ஒரு கையில் அவள்
உள்ளங்கை அழுத்தி மறுகையால்
நெற்றி தடவினான்.

ரோஜா சுடுமா? சுட்டது.

வாழ்வின் முதல்
வார்த்தையைக்கூட
உச்சரிக்காத நீயா மரணத்தின்
கடைசி வார்த்தை
பேசுகிறாய்?

இல்லை. நீளமான
வாழ்க்கையில் நிம்மதி இல்லை.
இங்கு எல்லா
மனிதர்களும் முதல் பாகத்தின்
இனிப்பை இழந்து,
இரண்டாம் பாகத்தின்
கசப்போடுதான்
சாகிறார்கள்.

இதுவரைக்கும்
என் வாழ்க்கை இனிமைகளால்
நிறைந்தது. இப்படியே
இறந்துவிடுவது இதமானது. ஒரு
வெற்றியோடு போரை
நிறுத்திக்கொண்ட அசோகச்
சக்கரவர்த்தி மாதிரி காதலின்
இனிய நினைவுகளோடு என்
முச்சை நிறுத்திக்
கொள்கிறேன்.

முடியாது. உன்னைச்
சாகவிடமாட்டேன்
-கலைவண்ணன் உணர்ச்சியில்
உடைந்தான்.

ஆமாம் தங்கையே.
உன்னைச்
சாகவிடமாட்டோ ம் -
மீனவர் வயிற்றிலிருந்து வந்தன
வார்த்தைகள்.

எப்படித் தடுப்பீர்கள்?
உங்கள் பத்துக்கரங்களும் என்
உடம்பை மொத்தமாகப்
பொத்தினாலும், மரணம்
உங்கள் விரல்களின் இடுக்கில்
புகுந்து என் உயிரை
வெளியேற்றிவிடும். உயிரைத்
தரமாட்டோ ம் என்று
சொல்வதற்கு நீங்கள் யார்?
மரணம் யாரையும்
யாசிப்பதில்லை.
கவர்ந்துகொள்கிறது.

ஏ, பேதைப் பெண்ணே.
உனக்குள் எப்படி இத்தனை
ஒளிவீச்சுகள். மரணத்தைச்
சிந்திக்க ஆரம்பித்தால்
ஞானக்கதவு திறந்து
கொள்கிறதா? ஞானத்துக்குப்
பக்கத்தில் மரணமா? அல்லது
மரணத்துக்குப் பக்கத்தில்
ஞானமா?

புலம்பாதே தமிழ்.
புலம்பாதே. மரணத்துக்குக்
கண்தெரியும். உன் அரும்புமுகம்
பார்த்தால் அது உன் உயிரைப்
பறிக்காது.

இல்லை - மரணம் ஒரு
புயல். அரும்புக்கும் சருகுக்கும்
அதற்கு வித்தியாசம்
தெரியாது.

அதற்குப் பிறகு அங்கே
மெளனம் நிலவியது.

கண்ணீர் என்ற வீட்டுச்
சொந்தக்காரன்
வந்துவிட்டால்,
வாடகைக்கிருந்த வார்த்தைகள்
வெளியேற வேண்டியதுதானே.

அவள் விழிப்பதற்கு
முயன்றுமுயன்று தோற்றாள்.

பிறகு மெல்ல மெல்ல
இமைகளை மேலெழுப்பினாள்.
எல்லாக் கண்களிலும் ஈரம்
பார்த்தாள்.

உணவு, மருந்து
இரண்டுமில்லாமல் அவள் உயிர்
காப்பது எப்படி என்று
அவர்கள் உறைந்து
நின்றார்கள்.

தனக்கு அவள் தனிமை
வேண்டுமென்றாள்.

சற்றே தள்ளி இருங்களென்று
சைகை செய்தாள்.

நால்வரும் பேசவில்லை.
நகர்ந்தனர்.

அவள் உணர்ச்சிவசமானாள்.

மிச்சமிருந்த உயிரையெல்லாம்
உதட்டில் திரட்டி அவன்
மார்பில் முத்தமிட்டாள்.

நான் சொல்வதைக்
கவனமாய்க் கேளுங்கள். நான்
இங்கேயே இறந்துவிட்டால்,
என் உடலைக் கரைக்குக்
கொண்டுசென்று பூமியில்
புதைக்காதீர்கள். பூமியில்
இன்னும் எத்தனையோ
உடல்களுக்கு இடம்
வேண்டியிருக்கிறது. ஒருவருக்கு
என் பிணக்குழியை விட்டுக்
கொடுத்தேன் என்ற பெருமை
எனக்கிருக்கட்டும்.

உடம்பை எரித்துத்தானே
கடலில் கரைப்பார்கள்.. என்
உடம்பையே கடலில்
கரைத்துவிடுங்கள். பசியால்
சாகப்போகும் என் உடம்பு,
மீன்களின் பசிக்கு
உணவாகட்டும்.

நம் காதலுக்கு
மடிதந்த கடற்கரையைக்
கேட்டதாய்ச் சொல்லுங்கள்.
அந்தப் பூங்காவில், நம்
காதலைக்
கவனித்துக்கொண்டிருந்த
அசோக மரங்களைக்
கேட்டதாய்ச் சொல்லுங்கள்.
பூமிக்குள் பதுங்கியிருந்து
செப்டம்பரில் தலைகாட்டும்
புல்வெளிகளைக் கேட்டதாய்ச்
சொல்லுங்கள். அந்தத்
தூங்குமுஞ்சி மரத்தின்
சாயங்காலப் பறவைகளின்
செளக்கியம் கேட்டதாய்ச்
சொல்லுங்கள். சென்னை
நகரத்தின் நடைபாதைத்
தேநீர்க்கடைகளைக்
கடைசியாய் நலம் கேட்டேன்
என்று கண்டிப்பாய்ச்
சொல்லுங்கள்.

எனக்கு நல்லவர் என் தந்தை.
என் கண்கள் வடிக்கும் கடைசி
இரண்டு துளிகளில் ஒரு துளி
அவருக்கு, ஒரு துளி உங்களுக்கு
என்பதையும் நான் சொன்ன
இதே வார்த்தைகளின்
வரிசையில் அவருக்குச்
சொல்லுங்கள்.

அதற்குமேல் பேசமுடியாமல்
அவள் இமைகளும் உதடுகளும்
முடிக்கொண்டன.

தன் இருகைகளிலும் அந்தச்
சிதைந்த ரோஜாவைச்
சிந்தாமல் சிதறாமல் அள்ளி,
நம் காதல்மீது ஆணை.
உன்னை உயிரோடு
கரைசேர்ப்பேன்.
இல்லையென்றால் நம் இரண்டு
உடல்களும் கரைசேரும்
என்று அவள் காதில் குனிந்து
உறுதிமொழிந்தான்.

அவள் கண்ணில் வழிந்த சுடுகண்ணீர்
அவன் உதட்டில் விழுந்தது.

கறுத்த மேகங்கள் வானத்தை வளைத்து
முற்றுகையிட்டிருந்தன.

சூரியனுக்கும் பூமிக்குமுள்ள தொடர்பு
துண்டிக்கப்பட்டிருந்தது.

பகல் இருட்டை அணியத் தொடங்கியிருந்தது.

மேகம் சில துளிகளை, விட்டுவிட்டுச் சொட்டியது.

சுங்கத்துறைப் படகொன்று வேட்டையில்
எதுவும் சிக்காமல் வெறுங்கையோடு கரை
திரும்பிக் கொண்டிருந்த நேரம் -

கடலில் மிதக்கும் ஊசியைக்கூடக் கண்டறியும்
ஒரு கழுகுக்கண் அதிகாரியின் கண்களில்
அது தட்டுப்பட்டுவிட்டது.

அதோ பாருங்கள். படகை அங்கே செலுத்துங்கள்.

தண்ணீரை உழுது விரைந்தது படகு.

ராமனின் கால்களுக்காக காத்துகிடந்த
அகலிகைக் கல்லைப்போல தக்கவர்களின்
கைகளுக்காகத் தண்ணீர்த்தவம் புரிந்த புட்டி
கடைசியில் சேரவேண்டியவர்களின் கைகளில்
சேர்ந்துவிட்டது.

கண்டுபிடித்துவிட்டோ ம். கண்டுபிடித்து
விட்டோ ம். ராயபுரம் கடற்கரையிலிருந்து
தென்கிழக்கே நாற்பது முதல்
நாற்பத்தைந்தாவது கிலோமீட்டரில்,
பழுதுபட்டு நிற்கும் விசைப்படகில் காணாமல்
போனவர்கள் கட்டுண்டு கிடக்கிறார்கள்
இரண்டு விசைப்படகுகள் தயாராகட்டும்.
உணவோடும் மருந்துகளோடும் ஒரு
மருத்துவரும் உடன் செல்லட்டும் அவர்களை
இன்றே மீட்டு இரவுக்குள் கரைசேரட்டும்

கட்டளைகள் பறந்தன.

டீசல் குடித்து வயிறு புடைத்த விசைப்படகுகள்
கடல் கிழக்கத் தயாராயின.

இருள் கவிந்த வானம் சின்னத்தூறல்களை
முணுமுணுத்தது.

அடிவானம் வரைக்கும் அப்பிக்கிடந்த
மேகங்கள் வானமெங்கும் தார்ச்சாலை
போட்டதுபோல் அடர்த்தியாயிருந்தன.

ஓநாயின் பாஷை கற்றுக்கொண்ட காற்று
லேசாய் ஊளையிடத் தொடங்கியது.

இப்போதோ பிறகோ வானம் திறந்து
கொள்ளலாம் என்று தெரிந்தது.

மீட்புப் பணிகளுக்குப் படகுகள்
தயாரானபோது அகில இந்திய வானொலியின்
அறிவிப்பொன்றைத் தொண்டை கட்டிய
வானொலிப் பெட்டியொன்று துருப்பிடித்த
குரலில் பேசியது.

ஓர் அறிவிப்பு. வங்கக்கடலில்
சென்னைக்குத் தென்கிழக்கே 240 கிலோமீட்டர்
தூரத்தில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு
மண்டலம் ஒன்று உருவாகியிருக்கிறது.
அது புயலாக வலுவடைந்து மேற்கு
வடமேற்குத் திசையில் நகரக்கூடும். அடுத்த
48 மணிநேரத்தில் கடலோரப் பகுதிகளில்
இடியுடன் கூடிய மழை பெய்யலாம்.
மணிக்கு 100 முதல் 120 கிலோமீட்டர்
வேகத்தில் புயல்காற்று வீசக்கூடும்
கடல் கொந்தளிப்பு ஏற்படலாம். மீனவர்கள்
கடலுக்குள் செல்லவேண்டாம் என்று
எச்சரிக்கப்படுகிறார்கள்.

எங்கோ ஒரு மேகம் இருமியது.

விரையத் தயாரான விசைப்படகுகள்
விறைத்து நின்றன.

Offline Maran

22

மடியில் தமிழையும் வயிற்றில்
நெருப்பையும் கட்டிக்கொண்டு
கிடந்த கலைவண்ணன் வானிலை
மாற்றம்கண்டு மனநிலை
மாறிப்போனான்.

ஏ. என்னவாயிற்று கடலுக்கு?
பகல் ஏன் இருட்டை உடுத்தப்
பார்க்கிறது. வானம் ஏன்
காணாமல் போனது? சூரியனை
மேகம் தின்றுவிட்டதா?

என் கண்மணியின் வெப்பம்
அதிகமாகும் வேளையில்
காற்றின் வெப்பம் ஏன்
குறைந்துகொண்டே போகிறது?

அலைகள் ஏன் பேசுவதை
நிறுத்திக்கொண்டன? கடல் ஏன்
மெளனம் சாதிக்கிறது?
மரணத்துக்கு முன்பே
மெளனாஞ்சலியா?

எங்கள்
திசைகளைத் திருடிக்கொண்டது
யார்? திசைகளைத்
தெரிந்துகொள்ள இதுவரை
சூரிய அடையாளம் இருந்தது.
இப்போது அந்த அடையாளமும்
அழிந்துவிட்டதே.

அதுவும்
சரிதான். பயணம்
போகாதவர்களுக்குத் திசை
எதற்கு?

மீனவர்கள் படகின்
விளிம்புகளுக்கு ஓடியோடி
வானம் பார்த்தார்கள்.
வானிலை போலவே முகம்
இருண்டார்கள்.

தமிழ். தமிழ். - அவன்
கூப்பிட்ட அழைப்புக்குக் குரல்
இல்லை.

செடிக்குத் தெரியாமல்
உதிர்ந்த சிறுமலரைப்போல
நினைவுகள் அவளைவிட்டு
நீங்கிவிட்டன.

ஆனால், அவள் உதடுகள்
மட்டும் முளையின்
கட்டுப்பாட்டிலிருந்து
விடுபட்டு முனகிக்
கொண்டேயிருந்தன.

எங்களோடு என்ன ஊடல்
கடலே. ஏனிந்த இறுக்கம்?

எங்கள் காற்றை எங்கே
கடத்திவிட்டாய்?

ஒன்று மட்டும் புரிகிறது.

இப்போது நீ அடைந்திருப்பது
அமைதி அல்ல. கோபமான
மெளனம் அல்லது மெளனமான
கோபம்.

இதுவரை நாங்கள் பட்டதும்
படுவதும் போதாதா?

எங்கள் படகையே மரணத்தின்
தொட்டிலாக்கி,
தாலாட்டுக்கும் ஒப்பாரிக்கும்
மத்தியில் ஒரு சங்கீதம்
பாடிக்கொண்டிருந்தாயே.