உண்மை இல்லை என்று சொல்லப்பட்ட விடயங்கள் இன்று முற்றிலும் உண்மை என்று நிரூபிக்கப் பட்டுள்ளன, அதே போன்று தான் உண்மை என்று நம்பப்பட்ட எவ்வளவோ விடயங்கள் இன்று உண்மை இல்லை என்று கூறப்பட்டு இருக்கின்றன. இந்த அறிவு டோஸில் கூட, நாம் பொதுவாக உண்மை என ஏற்றுக்கொண்ட விடயம் ஒன்று தவறு என்பதை அறியத் தருகின்றேன்!
சரி, உங்களிடம் உலகில் மிகப் பெரிய மலை எது என்று கேட்டால் என்ன பதில் கூறுவீர்கள்? உடனடியாக உங்கள் பதில் எவரெசுட்டு சிகரம் (Mount Everest) என்று தானே இருக்கும்? 8.848 மீட்டர் கொண்ட இந்த மலை உண்மை சொல்லப்போனால் உலகின் மிகப்பெரிய மலையே இல்லை! இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால்: ஓர் மலையின் உயரத்தை எங்கிருந்து எங்கு வரை அளக்கப்படுகிறது என்பது தான்.
கடல் மட்டத்தில் இருந்து அளந்து பார்க்கும் போது எவரெசுட்டு சிகரம் தான் மிகவும் பெரிதான மலை என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால், இதுவே கடலில் காணப்படும் மலைகளுடன் ஒப்பீட்டுப் பார்க்கும் போது எவரெசுட்டு சிகரம் உயர்ந்த மலையே அல்ல!
ஹவாய் தீவில் காணப்படும் மவுனா கேய் (Mauna Kea) எனப்படும் மலை தான் மிகவும் பெரிதானது ஆகும். இந்த மலையின் சிறிய பகுதி ஒன்று தான் கடல் மட்டத்திற்கு மேலாக தெரிகின்றது. சரியாகச் சொல்லப் போனால் 4.207 மீட்டர் மட்டுமே தான் நமது கண்களால் பார்க்க முடியுமாக இருக்கின்றது. ஆனால், இந்த மலையின் அடி, கடலுக்குள் இருக்கும் காரணத்தால், அதனை கடல் அடியினில் இருந்து அளந்து பார்க்கும் போது அதன் முழுமையான உயரம் 10.205 மீட்டர் ஆகிவிடுகின்றது! எனவே மவுனா கேய் எவரெசுட்டு சிகரத்தை விட 1.357 மீட்டர் பெரிதாக இருக்கின்றது!
எனவே அடுத்த முறை யாராவது உங்களிடம் உயர்ந்த மலை எது என்று கேட்கும் போது, அவரிடம் நீங்கள் கேட்கவேண்டியது இது தான்: கண்ணால் பார்க்கக் கூடிய, கடல் மட்டத்துக்கு மேலே காணப்படும் உயரமா, அல்லது கடல் அடியில் இருந்து அளக்கப்படும் உயரமா?