மனிதனின் சிறுநீர் ஒரு கழிவுப்பொருள் என்று எண்ணிய நமக்கு, அதுவே விண்வெளிப் பயணத்திற்குக் கிடைத்த ஓர் வரப்பிரசாதம் என அண்மையில் அறிவியலாளர்கள் கூறியுள்ளனர். சிறுநீரின் பெரும்பாலான பகுதி நீரால் ஆனதாலேயே, விண்வெளியில் இது மதிப்பு வாய்ந்த வளமாகக் கருதப்படுகிறது. சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு நீரை அனுப்ப அதிக பணம் தேவைப்படுகிறது. எனவே, விண்வெளி வீரர்கள் தங்கள் சிறுநீரைச் சுயமாகச் சுத்திகரிப்பு செய்வதன் மூலம் பெரும் அளவில் பணத்தை மிச்சப்படுத்தலாம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இது மட்டும் அல்லாமல், முறையாகச் சுத்திகரிக்கப்பட்ட சிறுநீர் மின்சக்தியைத் துவக்கவும் துணை புரியும், எனவே எரிசக்திக்காகப் பயன்படுத்தப்படும் அதிகளவிலான பணத்தில் ஓரு பகுதியையும் சேமிக்கலாம். இன்னும் சில புதிய நுட்பமான முறைகளைத் தற்போதைய அறிவியல் கூடங்களில் இதற்கான ஆராய்ச்சித் துறையில் பயன்படுத்தி வந்தால் எதிர்காலத்தில் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தங்களுடய சிறுநீரைச் சுயமாக மறுசுழற்சி செய்து பயன்படுத்துவதற்கான வாய்ப்பு நிச்சயம் கிட்டும். எனவே, இதன் விளைவாக, அதிகளவிலான விண்வெளி ஆராய்சிகளை மேற்கொள்ளும் வாய்ப்பும் ஏற்படும்!