நாம் நிகழ்காலத்தில் வாழ்கின்றோம் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை. இப்படி நிகழ்காலத்தில் வாழும் நாம் நமது கண்களாலும் நிகழ்காலத்தைத் தானா பார்க்கின்றோம்? இல்லவே இல்லை! நிகழ்காலத்தில் வாழும் நாங்கள் நமது கண்களால் இறந்தகாலத்தை மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கிறோம்! என்ன குழப்பமாக இருக்கிறதா? இதோ வருகிறது எனது விளக்கம்…
நமது கண்களால் ஒரு பொருளைப் பார்ப்பது என்றால் என்ன? உதாரணத்திற்கு சூரியனில் இருந்து அனுப்பப்பட்ட ஒளி, பூமியில் நமது சுற்றுப்புறத்தில் உள்ள பொருள் ஒன்றில் பட்டுத் தெறித்து நமது கண்களை அடையும்போது, அந்தப் பொருள் நமக்கு தெரிகின்றது என்கிறோம். ஆனால் இதில் கவனிக்கவேண்டிய விடயம் என்னவென்றால், ஒளி ஒரு பொருளில் பட்டுத் தெறித்து நமது கண்களை அடைவதற்கு ஒரு குறிப்பிட்ட நேரம் எடுக்கும்!
ஒளி ஒரு நொடியில் ஏறத்தாழ 300.000 km தூரம் செல்கிறது. ஆகவே, இந்த ஒளி ஒரே ஒரு நொடியில் மட்டுமே பூமியிலிருந்து சந்திரனுக்கு சென்றுவிடும். அதேபோல் ஒளி ஒரே ஒரு நொடியில் நமது புவியை 7 தடவைகளுக்கு மேல் சுற்றிவிடும். ஏன், தற்போது புவியில் காணப்படும் அதிவேக ஏவூர்தி (Rocket) கூட ஒரு நொடியில் 15 km மட்டும் தான் செல்கிறது. உண்மையைச் சொல்லப்போனால் ஐன்ஸ்டைனின் சார்பியல் கோட்பாட்டின் (Theory of Relativity) அடிப்படியில் ஒளியின் வேகம் தான் இந்த பிரபஞ்சத்தின் வேக எல்லையாகும்! ஆகவே, ஒளியின் வேகத்தை நம்மால் கற்பனை கூட பண்ண முடியாது!
இப்படி கற்பனையே பண்ணமுடியாத இந்த ஒளியின் வேகம், பூமியில் இருக்கும் வரை தான் பிரம்மாண்டமாக இருக்கிறது. விண்வெளியிலோ இந்த வேகம் மிகவும் சிறிதாகிவிடும்! உதாரணத்திற்கு சூரியனை எடுத்துகொள்வோம். பூமியில் இருந்து சூரியன் 149.600.000 km தூரத்தில் இருக்கிறது. ஆகவே, சூரியனில் இருந்து புறப்படும் ஒளி நமது பூமியை வந்தடைய ஏறத்தாழ 8 நிமிடங்கள் எடுக்கின்றது! அப்படி என்றால் நீங்கள் மேலே பார்க்கும் அந்த சூரியன் உண்மையில் 8 நிமிடங்களுக்கு முன்பு இருந்த சூரியன் தான்! ஏன், இந்த நொடியில் கூட அந்த சூரியன் அழிந்துவிட்டால் நமக்கு 8 நிமிடங்களுக்கு பின்பு தான் சூரியன் இல்லாமல் போனது என்பது தெரியவரும்!
ஆகவே, மேலே குறித்தது போல் ஒளியின் வேகம் காரணத்தால் ஒளி ஒரு பொருளில் பட்டுத் தெறித்து நமது கண்களை அடைவதற்கு ஒரு குறிப்பிட்ட நேரம் எடுக்கும். இப்போ புரிகிறதா ஏன் நாம் எப்போதுமே இறந்தகாலத்தை மட்டுமே நமது கண்களால் பார்க்கின்றோம் என்று? இல்லையா…?
சரி, இப்படிப் பார்ப்போம். உங்களுக்கு முன்னால் உங்கள் நண்பன் ஒருவன் 1 மீட்டர் தூரத்தில் நிற்கிறார் என்று எடுத்துகொள்வோம். அவரை நாம் நமது கண்களால் பார்க்கவேண்டும் என்றால், ஓளி அவரில் பட்டுத்தெறித்து நமது கண்களை அடையவேண்டும். ஆகவே, அந்த ஓளி அவரில் பட்டுத்தெறித்து சரியாக 1 மீட்டர் சென்று நமது கண்களை அடைந்தால் தான் நமக்கு அவரைத் தெரியும். அப்படியென்றால் ஒரு நொடியில் 300.000 km (அல்லது 300.000.000 மீட்டர்) செல்லும் ஒளி 1 மீட்டர் செல்வதற்கு எவ்வளவு நேரம் எடுக்கும்? ஒளி ஒரு மீட்டர் செல்வதற்கு கிட்டத்தட்ட 0,000000003 நொடி எடுக்கும். சரி சரி, 0,000000003 நொடி என்றால் நம்மால் உணரக்கூட முடியாத ஒரு குறுகிய நேரம் தான், இருந்தாலும் அதுவும் ஒரு நேரம் தானே? ஆகவே, 1 மீட்டர் தூரத்தில் நிற்கும் உங்கள் நண்பனின் உருவத்தை 0,000000003 நொடிக்கு பின்பு தான் உங்களது கண்களுடன் காண்கிறீர்கள். அந்த நண்பனின் உருவம் நிகழ்காலத்தில் இருந்தாலும், நீங்கள் உங்கள் கண்களால் பார்க்கும் அந்த உருவம் இறந்தகாலத்தில் இருந்த உருவமாகத் தான் இருக்கிறது.
எனவே, எந்த ஒரு பொருளை எடுத்துகொண்டாலும், அது எவ்வளவு தூரத்தில் இருந்தாலும், அந்த பொருளில் பட்டுத்தெறித்து வரும் ஒளி நமது கண்களை வந்தடைய, ஓளியின் வேகத்தின் காரணத்தால், ஒரு குறிப்பிட்ட நேரம் எடுக்கும். நிகழ்காலத்தில் நாம் வாழ்ந்தாலும் நமது கண்களால் எப்போதுமே இறந்தகாலத்தை மட்டும் தான் பார்த்துக்கொண்டிருக்கிறோம்!
ஆக மொத்தத்தில், நிகழ்காலத்தையே நம்மால் ஒழுங்காக பார்க்கமுடியவில்லை, அதற்குள் விஞ்ஞானிகள் இறந்தகாலத்திற்கு அல்லது எதிர்காலத்திற்கு எப்படி பயனிப்பது என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார்கள். சிந்த்தித்துப்பார்த்தால் நகைச்சுவையாக இல்லையா?