Author Topic: எப்போ உயரமாக இருப்பீர்கள்  (Read 767 times)

Offline Little Heart

காலையிலா, சாயங்காலத்திலா நீங்கள் உயரமாக இருப்பீர்கள்? இப்படி உங்களிடம் ஓர் கேள்வி கேட்டால் நீங்கள் என்ன பதில் கூறுவீர்கள்? முதலில் இது என்ன முட்டாள் தனமான கேள்வி என்று கேட்டு விட்டு, „இரு நேரத்திலும் அதே உயரமாகத் தான் இருப்பேன்“ என்று தானே பதில் சொல்வீர்கள்? சரி, உங்களால் நம்ப முடியாத முட்டாள் தனமான இந்த விடயத்தை நீங்களே சோதித்துப் பாருங்கள். காலையிலும், சாயங்காலத்திலும் உங்கள் உயரத்தை ஒரு முறை அளந்து பாருங்கள். வாயைப் பிளந்து கொண்டு நிற்பீர்கள்! ஆம், இந்த விடயம் முற்றிலும் உண்மை தான்! நாம் சாயங்காலத்தில் விட காலையில் சில சென்டி மீட்டர்கள் உயரமாகத் தான் இருப்போம். இந்த அறிவு டோஸில் அதற்கு என்ன காரணம் என்பதை அறியத் தருகின்றேன்.

அது வேறு ஒன்றுமே இல்லை: பொதுவாக நமது முள்ளந்தண்டு, எலும்புகளால் மட்டும் அமைக்கப் படவில்லை. அதில் intervertebral discs என்று அழைக்கப்படும் முள்ளெலும்பிடையான வட்டுகள் காணப்படுகின்றன. இந்த வட்டுகள் எலாஸ்டிக் (elastic) பஞ்சுகள் போன்று வளைந்து நெளிந்து நமது உடல் அசைவுக்கு மிக முக்கிய காரணமாக இருக்கின்றன. நாம் இரவில் தூங்கும் போது பஞ்சு போன்ற இந்த வட்டுகள், நமது உடலில் உள்ள நீர்மத்தை (liquid) உறிஞ்சி எடுத்து விடுகின்றன. பின்னர் காலையில் நாம் தூக்கம் கலைந்து எழுந்ததும், இரு விடயங்கள் நடைபெறுகின்றன: முதலாவதாக நாம் நடந்து திரிந்து, விளையாடி, வேலை செய்யத் தொடங்கி விடுகின்றோம். இரண்டாவதாக நாம் நமது இரு கால்களிலும் நிற்கத் தொடங்கியதும், நமது முள்ளந்தண்டில் புவி ஈர்ப்பு விசை செலுத்தப் படுகிறது. இந்த இரு செயல்பாட்டாலும் அந்த வட்டுகளில் உறிஞ்சி எடுக்கப்பட்ட நீர்மம் நேரம் போகப் போக கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றப் படுகின்றது. அதன் விளைவாக நமது முள்ளந்தண்டின் உயரம் குறைந்து விடுகின்றது. அத்துடன், நமது உடலின் உயரமும் குறைந்து விடுகின்றது. இதை எதிர்பார்த்து இருப்பீர்களா…?

சரி, உங்கள் உயரம் எப்போதுமே ஒரே நிலையில் இருக்க வேண்டும் என்று விருப்பம் இருந்தால், கவலையே வேண்டாம்! பேசாம ஒரு ஏவூர்தியில் (rocket) விண்வெளி சென்றுவிடுங்கள். ஏனென்றால், அங்கே ஒரு ஈர்ப்பு விசையுமே இருக்காது!