கடல் மட்டத்திலிருந்து உயரமான பகுதிகள் வாழ்ந்த திபெத்தியர்கள் மற்ற மக்களைக் காட்டிலும் 40 சதவீதம் குறைவான ஆக்ஸிஜனில் உயிர்வாழ்ந்துள்ளனர். 87 சதவீத திபெத் மக்களிடம் காணப்படும் EPAS1 எனப்படும் ஜீன் அமைப்பினால், கடல்மட்டத்திலிருந்து அதிக உயரமான இடங்களில் கூட சாதாரணமாக வாழமுடியும் என்று தற்போதைய ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஸ்மஸ் நீல்சன் இது பற்றி பின்வருமாறு கூறினார்: இது போன்ற ஜீன் அமைப்பு திபெத்திய மக்களின் உடலில் பொதுவாகக் காணப்படுகிறது, ஆனால் கடல்மட்டத்திலிருந்து குறைந்த உயரத்தில் வாழும் மக்களிடையே இத்தகைய ஜீன் அமைப்பு குறைவாகவே காணப்படுகிறது. மேலும் இந்த வகை ஜீன் பிறழ்ச்சி மிக வேகமாக நடந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
கடல் மட்டத்திலிருந்து உயர்வான இடங்களில் வாழும் மக்களிடம் வழக்கமாக, உடலின் திசுக்களுக்குத் தேவையான ஆக்ஸிஜனை வழங்கும் இரத்த சிவப்பு செல்கள் அதிகமாகக் காணப்படும், ஆனால் திபெத் மக்களிடம் அவ்வாறு காணப்படவில்லை. இதற்கும் அவர்களின் EPAS1 எனப்படும் ஜீன் அமைப்புதான் காரணம். இந்த அமைப்பினால் தான் அவர்கள் காற்று குறைவான, அதாவது ஆக்ஸிஜன் குறைவான பீடபூமிப் பகுதிகளிலும் வாழமுடிகிறது. இப்படி ஜீன் அமைப்பு மாற்றமடைந்து வெறும் 2750 ஆண்டுகள் தான் ஆகிறதாம். மற்ற ஜீன் மாற்றங்களுடன் ஒப்பிடும்போது இது மிகவும் குறைவான கால அளவு ஆகும்.