Author Topic: முட்டைக்குள் இருக்கும் கோழிக்குஞ்சு சுவாசிப்பது எப்படி  (Read 653 times)

Offline Little Heart

கோழி இட்ட ஒரு முட்டைக்குள் இருக்கும் குஞ்சு எப்படி சுவாசிக்கின்றது என்பதை எப்போதாவது சிந்தித்துப் பார்த்து இருக்கின்றீர்களா? கோழிக்குஞ்சுக்கு முட்டையை விட்டு வெளியே வந்த பின் தான் பிராணவாயு (oxygen) தேவைப் படுவது என்று இல்லை! முட்டைக்குள் இருக்கும் போதும் அதற்கு பிராணவாயு மிகவும் முக்கியம் தான். எனவே, முழுதாக மூடியிருக்கும் முட்டைக்குள் ஒரு கோழிக்குஞ்சு எவ்வாறு சுவாசிக்கின்றது என்பதை இந்த அறிவு டோஸ் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

கோழிமுட்டையின் ஓட்டை உள்ளிருந்து பார்க்கும் போது அதில் ஒன்றிற்கு மேல் ஒன்றாக இருக்கும் புறமென்றோல், உள்மென்றோல் என்று அழைக்கப்படும் இரு மெல்லிய தோல்களை அவதானிக்கலாம். ஒரு கோழி முட்டை இட்டதும், ஆரம்பத்தில் அந்த முட்டை வெப்பமாக இருக்கும். நேரம் போகப் போக அந்த முட்டை குளிர்ச்சி அடைவதால் சற்று சிறிதாகி விடும்போது, உள்ளே காணப்படும் அந்த இரு தோல்களுக்கும் இடையே பிராணவாயு சேர்கின்றது. அவ்வாறு சேரும் அந்த இடத்தை வளி அறை என்று கூறுவார்கள். எனவே, முட்டைக்குள் வளரும் கோழிக்குஞ்சு அந்தத் வளி அறையில் சேர்ந்திருக்கும் பிராணவாயுவை சுவாசிக்கின்றது. சுவாசித்து வெளியே விடும் கரியமிலவாயு முட்டைக் கோதில் காணப்படும் நுண் துளைகள் (ஏறத்தாழ 7000 நுண்துளைகள்) ஊடாக வெளியேறுகின்றது. அதே நுண் துளைகள் ஊடாக மறுபடியும் புதிய பிராணவாயு உள்வருகின்றது.

அவ்வளவும் தான், இப்படியே அந்தக் கோழிக்குஞ்சு ஒரு பிரச்சனையும் இல்லாமல் சுவாசித்து வளர்ந்து வரும். வழக்கம் போல் இயற்கையால் உருவாகும் அனைத்துமே அதிசயம் என்பது மீண்டும் நிரூபிக்கப் பட்டுள்ளது அல்லவா?