Author Topic: சிரி, சிரி, சிரி: சிரிப்பின் நன்மைகள்  (Read 723 times)

Offline Little Heart

மனம் விட்டுச் சிரிப்பது போல் ஓர் சிறந்த விடயம் இல்லவே இல்லை! ஒரு மணி நேரம் சிரிப்பதும், அரை மணி நேரம் பாரம் தூக்குதலும் (weight lifting) ஒன்று என விஞ்ஞானிகள் கூறுகின்றார்கள். அது ஏன் என்றால், இரு வேளைகளிலும் எரிக்கப்படும் கலோரியின் அளவு ஒன்று எனக் கணக்கிட்டுள்ளனர். எனவே, ஒரு ஆண்டிற்கு ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரம் சிரித்து வந்தால், ஐந்து கிலோ வரை எடையைக் குறைக்கலாம் என்கிறது ஆராயச்சி. மனம் விட்டு சிரிப்பது ஒரு விதமான ஏரோபிக் (aerobic) உடற்பயிற்சி ஆக அமையும் என்கிறார் நரம்பணுவியல் மருத்துவர் டாக்டர் ஹெலன் பில்செர் (Helen Pilcher). அவ்வாறு சிரிப்பதின் காரணமாக இதயத் துடிப்பு வேகமாகி, உடல் முழுவதும் உள்ள பாகங்களுக்கு இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. மேலும் சிரிக்கும் போது மார்பு ஏறி இறங்கி, வயிற்றுத் தசைகளும் இறுக்கம் அடைகிறது.

சிரிப்பின் நன்மைகள் இவ்வளவு தான் என்று நினைத்து விடாதீர்கள்! சிரிப்பதற்கு குறைந்தது 15 முக தசைகள் தேவைப் படுகின்றது. இதனால் முகம் மிருதுவாகவும், பிரகாசமாகவும் மிளிரும். மேலும், இது உடலுக்கு நலம் தரும் என்டோர்பின் (endorphine) உற்பத்தியை தூண்டி, மன அழுத்தத்தையும் குறைக்கிறது. இதை விட சிரிப்பது இதயத்திற்கு மிகவும் நன்று என வேறு சில ஆராய்ச்சிகள் சொல்கின்றன. உடற்பயிற்சி மற்றும் கொழுப்பு குறைக்கும் மருந்துகள் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பது போலவே, உரக்கச் சிரிப்பதும் இரத்த சுழற்சியை அதிகரிக்கிறது. இப்படிச் சிரிப்பதால் உடல் மற்றும் மனம் நிம்மதி பெற்று, நோய் எதிர்ப்புச் சக்தியும் அதிகரிக்கும்.

வாய் விட்டுச் சிரித்தால், நோய் விட்டுப் போகும் என்று இதைத்தான் பெரியவர்கள் பல நூற்றாண்டுக்கு முன்பே எழுதிவைத்தார்களோ?