உங்களில் நிச்சயமாகப் பலர் தினமும் காப்பி குடிக்கும் வழக்கம் உள்ளவர்களாக இருப்பீர்கள். சரி தானே? தினமும் காலையில் குடிக்கும் காப்பி தான் உங்களுக்குப் புத்துணர்வூட்டி உங்களை விறுவிறுப்புடன் உங்கள் வேலையைச் செய்யத் தூண்டுகின்றது. இப்படி உங்களை ஊக்குவிக்கும் இந்தக் காப்பியில் அப்படி என்ன தான் இருக்கின்றது என்று சிந்தித்துப் பார்திருக்கின்றீர்களா? இந்த உணர்ச்சிக்குக் காரணம் காப்பியில் உள்ள காஃபீன் (caffeine) எனப்படும் போதைப்பொருள் தான். இந்தக் காஃபீனை தொடர்ந்து பயன் படுத்தும் மக்கள் அதற்கு அடிமை ஆகிவிடுவதும் உண்டு. ஆனால், இதே காஃபீனை உட்கொள்வதால் சில நன்மைகளும் உண்டு என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
காஃபீனின் பயன்களை அறிய, ஆயிரக்கணக்கான மக்களை மாதிரியாகக் கொண்டு ஹார்வர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஓர் ஆய்வை 2008ல் நடத்தினர். மேலும், 2009ல் பின்லாந்து மற்றும் சுவீடன் நாட்டு ஆய்வாளர்களும் காஃபீனின் நன்மைகளை ஆராய்ந்தனர். இவர்களின் ஆராய்ச்சியின் முடிவில், காப்பி அருந்தாத நடுத்தர வயதினரை விடக் காப்பி அருந்துவதை வழக்கமாகக் கொண்ட நடுத்தர வயதினருக்கு மறதிநோய் (Dementia) வரும் வாய்ப்பு மிகவும் குறைவு என்று அறிந்துள்ளார்கள். அது மட்டும் இல்லை, மேலும் முதுமையில் ஏற்படும் நினைவாற்றல் இழப்பு (Alzheimer disease) எனப்படும் நோய் தாக்கும் வாய்ப்பு கூட மிகக் குறைவாம் என்கிறார்கள். தினமும் மூன்று முதல் ஐந்து தடவை காப்பி அருந்துபவர்களுக்கு, மேற்கூறிய நோய்கள் வரும் வாய்ப்பு 65 சதவீதம் குறைவு எனக் கண்டறியப்பட்டுள்ளது.