சென்னையில் சுகாதாரம் ?
பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருக்கும் சென்னையின் முக்கியமான பல இடங்களைப் பற்றி யாவரும் நன்கு அறிவர், பல முன்னேற்றங்களை உள் வாங்கி புதுமையை நோக்கி ஒவ்வொரு நாளும் முன்னே போய்கொண்டிருக்கும் தொழில் நுட்ப நிறுவனங்களும் பழைய கட்டிடங்களை இடித்து புதிய அடுக்குமாடி கட்டிடங்களும் சென்னையை ஆக்கிரமிக்கத் துவங்கியுள்ளது,
சென்னை இந்தியாவின் மிகப்பெரிய தொழில் மற்றும் அறிவியல் நகரங்களில் ஒன்றாக உருமாற்றிக் கொண்டு வருவதும், இதனால் பல மாநிலங்களிலிருந்தும் பல நாடுகளிலிருந்தும் தமிழ்நாட்டின் பல பகுதியிலிருந்தும் தினம் தினம் வருகின்ற மக்கள் தங்களின் பலவித தேவைகளை பூர்த்தி செய்துகொள்வதற்கு சென்னை தன்னை தகுதியுடையதாக மாற்றிக்கொள்வதை யாரும் மறுப்பதற்கில்லை.
இப்படி தன் தகுதிகளை உயர்த்தி வரும் இதே சென்னையில் பல ஆண்டுகள் பின்னோக்கினாலும் காண முடியாத கேவலமான மனித கழிவுகளுக்கு புகலிடமாக விளங்கும் மிகப்பெரிய மைதானங்களும் காலி இடங்களும், குப்பைகள் நிறைந்து சாலைகளையும் கழிவு நீர் செல்லும் கால்வைகளையும் மூடிக்கொண்டு கிடப்பதையும் பார்க்காமல் இருக்க முடியாது,
கழிப்பறைகள் இல்லாத குடிசைகள் நிறைந்திருக்கும் பகுதிகளின் அருகே இருக்கும் காலி மனைகளும் மைதானங்களும் குடிசைவாழ் மக்களின் கழிப்பிடமாக உபயோகப்படுத்தும் அவலம், இதனால் அடுத்து வசிக்கும் மக்களின் சுகாதார பாதிப்பை காணும்போது இந்த நூற்றாண்டில்தான் நாம் வாழுகின்றோமா என்ற ஆச்சரியமும் எப்போதுதான் நாம் முன்னேரபோகிறோம் என்கிற வேதனையும் தான் மிஞ்சுகிறது.
சென்னையின் பல பகுதிகளை இத்தகைய அசிங்கம் நிறைத்துள்ளது, சென்னையின் ஒவ்வொரு பகுதியிலும் பல தெருக்கள் பல ஆண்டுகளாய் பராமரிப்பின்றி குண்டும் குழியுமாய் கிடப்பதையும் யாரும் மறுக்க முடியாது, மழைகாலம் வந்துவிட்டால் கழிவுகள் செல்லும் நீரில் மழை நீரும் சேர்ந்து தெருக்களில் இருக்கும் குழிகளில் குளமாக தேங்கி நிற்பதும் அதில் பல பாதசாரிகள் நடந்து செல்வதும் எத்தகைய நோய்களை பரப்பும் என்பதை பற்றி யாரும் கவலைப்படுவதாகவோ சீர்திருத்த முயல்வதாகவோ தெரியவில்லை.
பன்றி காய்ச்சல், சிக்குன்குன்யா டெங்குக்காயச்சல் இன்னும் என்னவேண்டுமானாலும் வருவதற்கு இத்தகைய சுகாதாரமற்ற சூழல் போதும், இதில் இநதியா வல்லரசாகும் என்கின்ற பெருமிதம் அடைவதில் என்ன சுகமிருக்க முடியும் என்பது விளங்கவில்லை. குடிசைகளில் வசிப்போர் கழிப்பிடமாக உபயோகிக்கும் காலி மைதானாங்களிலிருந்து வரும் கழிவின் நாற்றம் அதை சுற்றியுள்ள மக்களை சுத்த காற்றை சுவாசிக்க முடியாமல் ஜன்னல்களை திருடனுக்கும் தூசிக்கும் பயந்து திறக்காமல் இருப்பதை விட இந்த கழிவின் நாற்றத்திற்கு பயந்து திறக்காமல் இருக்கும் அவல நிலையை என்னவென்று சொல்வது.
சென்னையில் வந்திருக்கும் பல புதிய வெளி மற்றும் உள்நாட்டு நிறுவனங்களையும் இதற்காக கட்டப்பட்டுள்ள புதிய பளபளக்கும் கட்டிடங்களையும் காண்பதற்கு மிக அழகாக இருந்தாலும் சென்னையின் பல முக்கிய இடங்களிலிருக்கும் கழிவரையற்ற குடிசை பகுதிகளும், செப்பனிடப்படாத தெருக்களும், சுத்தம் செய்யப்படாத குப்பைகளும் குப்பைதொட்டிகளுக்கும் குறைவே இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை.