சோழர்கள் தமிழர்களா? அல்லது தெலுங்கர்களா? பதிவர் : கலையரசன் (இந்தப் பதிவை வாசித்து விட்டு என்னை திட்டுவதற்கு முன்னர், இங்கே இணைக்கப் பட்டுள்ள பின்னிணைப்புகளை, உசாத்துணை நூல்களை கவனமெடுத்து வாசிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். உலகப் புகழ் பெற்ற ராஜ ராஜ சோழனும் அவனது சோழப் பரம்பரையும், தமிழர்கள் என்பதை விட தெலுங்கர்கள் என்பதற்கான ஆதாரங்கள் நிறைய உள்ளன.)பார்ப்பனர்களும், மதவெறியர்களும், சாதிவெறியர்களும், ராஜ ராஜ சோழனுக்கு ஆதரவாக வக்காலத்து வாங்குவதற்கான காரணம் மிகவும் தெளிவானது:
ராஜராஜன் ஆட்சியில் ஆலயங்கள் அனைத்திலும் மாறுபட்ட பூஜைமுறைகள் தடைசெய்யப் பட்டு, ஆகமமுறை கட்டாயமாக்கப் பட்டது. இந்த ஆதிக்கக் கட்டமைப்புக்கு செவி சாய்க்கவும், செய்து முடிக்கவும் பிராமணர்கள் தேவைப் பட்டார்கள். அரசரின் கட்டளையை ஏற்று நடந்ததால், பிராமணர்களுக்கு நிறைய சலுகைகள் வழங்கப் பட்டன.... மதங்களைக் கொண்டு மக்களைக் கட்டுப்படுத்தவும் ஒற்றுமையோடு செயல்படவும் பிராமணர்களின் பங்களிப்பு அவசியம் என்று ராஜராஜன் நினைத்தார். இதனால் சோழர்கள் காலத்தில் ஆதிக்கத்தின் கருவியாக பிராமணர்கள் செயல்பட்டார்கள்.
ராஜராஜன் காலத்தில் பிராமணர் ஆதிக்கம் மட்டுமில்லாமல், வேளாளர்களின் ஆதிக்கமும் அதற்குச் சமமாக இருந்தது. நில நிர்வாகம் செய்யும் ஆதிக்கம் அவர்களிடம் இருந்தது. வேளாண்மை செய்யும் புதிய நில உரிமையாளர்கள் அனைவரும் வேளாளர்கள் என்று அழைக்கப் பட்டார்கள். பிராமணர்களுக்கும், வேளாளர்களுக்கும் அதிக முக்கியத்துவம் இருந்ததால், ஜாதி ஏற்றத்தாழ்வுகளும் அடிமைமுறைகளும் அக்காலக் கட்டத்தில் நிலவி வந்தன. ஒரு சாரார் கட்டாய உழைப்புக்கு உட்படுத்தப் பட்டார்கள் என்பது மறுக்க முடியாத இன்னொரு உண்மை.
அதிகச் சலுகைகள் அனுபவித்து வந்த பிராமணர்களையும், வேளாளர்களையும் எதிர்த்து நிறைய போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. இவ்விருவரையும் எதிர்ப்பவர்கள், இருபதினாயிரம் காசுகள் தண்டம் செலுத்த வேண்டும் என்றும், தண்டம் செலுத்தத் தவறினால் நில உரிமை பறிக்கப்படும் என்று இது போன்ற கிளர்ச்சிகளுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் இயற்றப் பட்டன. இதனால் சாதிப்பிளவும், உரிமைப் போராட்டங்களும் அக்காலகட்டத்தில் நிலவியது உண்மை தான்.//
- ச. ந. கண்ணன் எழுதிய ராஜராஜ சோழன் நூலில் இருந்து.
இந்தக் கட்டுரை முழுவதும், ராஜ ராஜ சோழன் போன்ற பிற்காலச் சோழர்கள் பற்றியது ஆகும். சோழர்கள் உண்மையிலேயே தமிழர்கள் தானா? அல்லது ஆரிய மயப் பட்ட தெலுங்கர்களா? சோழர்களின் வரலாற்றில் எந்த இடத்திலும், அவர்கள் தமிழர்கள் என்பதற்கான ஆதாரம் எதுவுமில்லை. "தமிழர் திருநாள்" என்று கருதப் படும் தைப் பொங்கலைக் கூட சோழர்கள் கொண்டாடி இருக்கவில்லை.
//தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சையில் உழவர்கள் கொண்டாடிய முதன்மையான ஒரு விழாவாக எது இருந்தது? தைப்பொங்கல்? கிடையாது. .... சோழர் ஆட்சிக் காலத்தில் இந்திர விழாவுக்குத் தான் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. தேவர்களின் தலைவனான இந்திரனுக்கு ஆண்டின் தொடக்கத்தில் விழா எடுக்கிற மரபு பல ஆண்டுகளாக சோழ நாட்டில் இருந்து வந்துள்ளது. கி.பி. 13 ம் நூற்றாண்டுக்குப் பிறகு தான், வேளாளர் சமூகத்தினரால் தைப்பொங்கல் தமிழர்களின் முதன்மையான விழா ஆனது. இதனால் ராஜராஜ சோழன் காலத்தில் மட்டுமல்ல, சோழர் காலம் வரைக்கும் உழவர்களின் விழாவாகப் பொங்கல் இருந்தது கிடையாது.//
- ச. ந. கண்ணன் எழுதிய "ராஜ ராஜ சோழன்" என்ற நூலில் இருந்து. சோழர்கள் தமிழர்கள் என்று நீண்ட காலமாக நம்பப் பட்டது. இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் தேசியவாதிகள் (அவர்களும் உண்மையான தமிழர்களா என்பது சந்தேகம்) அந்தக் கருத்தை மக்கள் மத்தியில் பரப்பி வந்துள்ளனர். ஆனால், வரலாற்றில் எங்கேயும் சோழர்கள் தமிழர்கள் என்று நிரூபிப்பதற்கான ஆதாரம் எதுவும் கிடையாது. மேலும் சோழர்கள் தெலுங்கர்கள் என்பதை, ஆந்திரப் பிரதேச வரலாற்று நூலும் கூறுகின்றது. (The History of Andhra Country, 1000 A.D.-1500 A.D.)
சோழர்கள் ஆண்ட ஆந்திரா மாநிலப் பகுதிகளை, நமது தமிழ் தேசியவாதிகள் யாரும் கவனத்தில் எடுப்பதில்லை. சோழர்கள் தமது தலைநகரத்தை ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டிற்கு மாற்றி இருக்கலாம். தமிழ்ப் பெயர்கள் வைத்துக் கொண்டிருக்கலாம். சோழர்கள் பிராமணர்களை குடியேற்றினார்கள். ஆகம சைவ மதத்தை பின்பற்றினார்கள். சமஸ்கிருதத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள். ஆனால், அவர்களது குடிமக்களும், போர்வீரர்களுமாக தமிழர்களே பெரும்பான்மையாக இருந்துள்ளார்கள்.
ச. ந. கண்ணன் எழுதிய ராஜ ராஜ சோழன் என்ற நூலில், சோழர்களின் பூர்வீகம் பற்றி தெளிவாக குறிப்பிடப் படவில்லை. சோழ அரச பரம்பரையினர் தங்களுக்கு தமிழ்ப் பெயர்களை சூட்டிக் கொண்டிருக்கலாம். அதெல்லாம் சோழர்கள் தமிழர்கள் என்று நிரூபிக்க போதுமானவை அல்ல. சோழர்களுக்கு முன்னர் தஞ்சையை ஆண்ட முத்தரையர்கள் கன்னடர்கள் என்று குறிப்பிடப் படுகின்றது. பல்லவர்கள், முத்தரையர்களை வெளியேற்றுவதற்கு, சோழர்களை பயன்படுத்தி உள்ளனர். அநேகமாக, சோழர்களும் முத்தரையர்களின் இனத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம். ஆனால், வெவ்வேறு இனக் குழுக்களை சேர்ந்தவர்களாக இருக்கலாம். அந்தக் காலங்களில் உறவினர்களே ஒருவரோடு ஒருவர் பங்காளிச் சண்டையில் ஈடுபடுவது சாதாரண விடயம்.
ஆரம்ப கால சோழர்கள், பல்லவர்களின் அடியாட் படையாக இருந்துள்ளனர். சோழ பரம்பரையின் முதலாவது மன்னன் விஜயாலன், பல்லவர்களின் பேரில் முத்தரையர்களுக்கு எதிரான போரை நடத்தியுள்ளான். அதற்கு பிரதியுபகாரமாக, பல்லவர்கள் தஞ்சையை சோழர்களுக்கு பரிசளித்தார்கள். (சோழர்களின் புலிக் கொடி கூட, பல்லவர்களிடம் இருந்து கடன் வாங்கியது தான்.) பிற்காலத்தில் பலமான இராணுவ சக்தியாக வளர்ந்த சோழர்கள், பாண்டியர்களையும், பல்லவர்களையும் போரில் வென்று, ஒரு பெரிய சாம்ராஜ்யத்தை கட்டி ஆண்டார்கள். அதே நேரம், கன்னட சாளுக்கியர்களுடன் திருமண உறவுகள் வைத்துக் கொண்டார்கள்.
சோழர்களின் படைகளில், தமிழ்ப் போர்வீரர்கள் பெரும்பான்மையாக இருந்துள்ளனர். இந்தோனேசியா, மலேசியா, சீனா போன்ற நாடுகளுடனான வணிகத் தொடர்புகள் காரணமாகவும், நிறைய தமிழ் வணிகர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். அதற்காக தமிழர்கள் பெருமைப் பட்டுக் கொள்ளலாம். ஆனால், அதன் அர்த்தம் சோழர்கள் தமிழர்கள் என்பதல்ல. குடிமக்கள் தமிழர்களாக இருந்தாலும், அவர்களை ஆண்டவர்கள் தமிழர்களாக இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. உலகில் உள்ள வரலாறு முழுவதும் மன்னர்களைப் பற்றி மட்டுமே எழுதப் பட்டுள்ளது. அன்று வாழ்ந்த மக்களைப் பற்றி யாரும் கவனத்தில் எடுக்கவில்லை. அதனால் தான் இந்தக் குழப்பம்.
தமிழகத்தில் சோழர்களின் வரலாற்றைக் கூறும் சரித்திர நூல்களில், "சோழர்களின் பூர்வீகம் பற்றி எதுவும் தெரியாது" என்று எழுதி இருக்கிறார்கள். உண்மையிலேயே அவர்களுக்கு எதுவும் தெரியாதா? அல்லது தெரிந்து கொள்ள விருப்பமில்லையா? ஏனென்றால், ஆந்திரா பிரதேச வரலாற்றைக் கூறும் சரித்திர நூல்களில், சோழர்களின் பூர்வீகம் குறித்த தெளிவான தகவல்கள் உள்ளன.
ஆந்திரா வரலாற்றிலும், தமிழக வரலாற்றிலும், சோழர்களின் பூர்வீகம் பற்றிய தகவல் மட்டுமே வித்தியாசம். மற்றும் படி, சோழ மன்னர்களின் பெயர்கள்,வரலாற்றுத் தகவல்கள் இரண்டு இடத்திலும் ஒத்துப் போகின்றன. ஒரு எழுத்துக் கூட வித்தியாசம் இல்லை என்பது தான் ஆச்சரியம்.
ஆந்திரா மாநில வரலாற்றைக் கூறும் நூல்களில் எல்லாம், சோழர்கள் பற்றி நிறைய எழுதி இருக்கிறார்கள். சுருக்கமாக: சோழர்கள் ஆந்திரப் பிரதேச வரலாற்றின் ஓர் அங்கம். ஆந்திராவில் அவர்களை "சாளுக்கிய சோழர்கள்" என்று அழைத்தார்கள். ஏனென்றால், தென்னிந்திய சோழ சாம்ராஜ்யம், சாளுக்கியர்களுடனான ராஜதந்திர உறவுகள் இன்றி சாத்தியப் பட்டிருக்காது. சோழர்களுக்கும், சாளுக்கியர்க்ளுக்கும் இடையில், பரம்பரை பரம்பரையாக நெருக்கமான திருமண உறவுகள் இருந்து வந்துள்ளன.
தமிழக சரித்திர ஆசிரியர்கள், சோழர்களின் தென்னிந்திய சாம்ராஜ்யத்தை சோழர்கள் மட்டுமே ஆண்டதாக கருதுகிறார்கள். அதற்கு மாறாக, அது ஒரு "சாளுக்கியர் - சோழர்களின் கூட்டு சாம்ராஜ்யம்" என்று, தெலுங்கு சரித்திர ஆசிரியர்கள் கூறுகின்றனர். அதனால் தான், ஆந்திராவில் சோழர்களை, "சாளுக்கிய சோழர்கள்" என்று அழைக்கிறார்கள். அது மட்டுமே வித்தியாசம். "ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன், குந்தவை, கங்கை கொண்ட சோழபுரம்....." இது போன்ற வரலாற்றுக் குறிப்புகள், ஆந்திரா சரித்திர நூல்களிலும் அப்படியே எழுதப் பட்டுள்ளன.
அதாவது, சோழ மன்னர்களின் பெயர்களும், வரலாற்றுக் குறிப்புகளும் எந்த மாற்றமும் அடையவில்லை. ஆனால், ஆந்திராவில் தெலுங்கு சோழர்கள் என்றும், தமிழ்நாட்டில் அவர்களை தமிழ்ச் சோழர்கள் என்றும் அழைத்துக் கொள்கிறார்கள். அது மட்டுமே வித்தியாசம். சோழர்களை ஒரு மொழித் தேசியத்திற்குள் திணிக்கும் போக்கு, பிற்காலத்தில் (இருபதாம் நூற்றாண்டில்) தோன்றி இருக்க வேண்டும். ஒரு பக்கம் தெலுங்கு தேசியவாதமும், மறுபக்கம் தமிழ் தேசியவாதமும் அரசியல் சக்திகளாக வளர்ந்து வந்தன. சரித்திர ஆசிரியர்களும் ஏதாவது ஒரு தேசியத்தை சார்ந்து எழுத வேண்டிய நிலை ஏற்பட்டது.மேலதிக தகவல்களுக்கு:
1. ராஜ ராஜ சோழன், ச.ந. கண்ணன்
2. A History of Vijayanagar: The Never to be Forgotten Empire, by Suryanarain Row
3. The History of Andhra Country, 1000 A.D.-1500 A.D., by Yashoda Devi
4. History of the Andhras, by Durga Prasad
பின்னிணைப்புகள்:ராஜ ராஜ சோழன் தனது மகள் குந்தவியை சாளுக்கிய மன்னன் விமலாதித்தனுக்கு மணம் முடித்துக் கொடுத்துள்ளான். சாளுக்கிய, சோழ வம்சாவளியை காட்டும் வரைபடம். (நன்றி: History of the Andhras, by Durga Prasad)
தமிழ்க் காதலன் said... வெறும் எழுத்தாளர்களின் கதைப்புனையும் கற்பனைகளுக்கு இடம் தரும் வகையில் இந்த பதிவின் போக்கு இருக்கிறது. வரலாற்று தடங்களை சரியாக உற்றுநோக்காமல் வெங்கியை பற்றிய வரலாறும் சரிவர புரியாமல், யாரோ ஒரு தெலுங்கை உயர்த்தி பிடிக்க விரும்பிய மனிதனின் அல்லது சமூகத்தின் விருப்பத்தை நிறைவேற்றிக் கொண்டது மட்டுமே புலனாகிறது. தெலுங்கு சோழர்கள் என்று நாம் யாரை குறிப்பிடுகிறோம் என்பதும், சாளுக்கிய, துளுவ தேசியத்தோடான உறவுநிலை பற்றிய சரியான தெளிவில்லாமல், பொதுவாக ஒரு குழப்பத்தை ஏற்படுத்தும் படியாக உள்ளது. இது ஒரு புகழ் தேடல் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.கலையரசன் said...
ஒரு கேள்வி. உங்களது பெற்றோர் காலத்தில் இருந்து சிங்களப் பிரதேசமான கொழும்பு நகரில் வாழ்ந்து வருகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்போது உங்களை சிங்களவர்கள் என்று கருதிக் கொள்ள வேண்டுமா? இந்தக் கேள்வி உங்களுக்கு அபத்ததமாகப் படுவது போன்றது தான், சோழர்கள் பற்றிய உங்களது கருதுகோளும் உள்ளது. ராஜ ராஜ சோழன் தஞ்சாவூரில் இருந்து ஆட்சி செய்தான். இன்றைய தஞ்சாவூர் தமிழ் நாட்டுக்கு சொந்தமானது. ஆகவே சோழர்களும் தமிழர்கள் தான் என்று நிறுவுவது அபத்தமானது.
சோழர்கள் தமிழர்களாக இருக்கலாம், அல்லது இல்லாமல் இருக்கலாம். ஆனால், அவர்கள் தமிழர்கள் தான் என்று அறுதியிட்டு கூற முடியாது. அதற்குப் பல காரணங்களை தந்துள்ளேன். சோழர்களுக்கு முன்பு தஞ்சையை ஆண்ட முத்தரையர்கள் காலத்திலேயே, தஞ்சாவூரில் கன்னடர்கள் குடியேறி விட்டார்கள். இதனை நான் கூறவில்லை. ராஜ ராஜ சோழன் பற்றிய தமிழ் நூலில் எழுதியுள்ளது.
சோழர்கள் போன்று, முத்தரையர்களும் தமிழ்ப் பெயர்களை வைத்திருந்தார்கள். ஆனால் அவர்கள் கன்னடர்கள். தஞ்சையை சுற்றிலும் உள்ள பகுதிகளை ஆட்சி செய்த பல்லவர்கள் தமிழர்கள் அல்ல. அவர்கள் ஈரானிய அரச வம்சத்தை சேர்ந்தவர்கள். தெற்கே இருந்த பாண்டியர்கள் மட்டுமே தமிழ் மன்னர்கள். இந்தப் பின்னணியை கொண்டு பார்க்கும் பொழுது, பல்லவர்களின் கீழ் சிற்றரசர்களாக இருந்த சோழர்கள் தமிழர்கள் ஆக இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறைவு.
"சாளுக்கிய சோழர்கள்" என்பது, குலோத்துங்கனுக்கு பிந்திய சோழர்களை குறிப்பது அல்ல. ராஜ ராஜ சோழன் கூட சாளுக்கிய சோழ பரம்பரை தான். அதற்குக் காரணம், தென்னிந்தியாவில் சாம்ராஜ்யம் ஒன்றை அமைப்பதற்காக, சோழர்கள், கிழக்கு - மேற்கு சாளுக்கியர்களுடன் இராஜ தந்திர உறவுகளை பேணி வந்தனர். இன்று நாங்கள் சாளுக்கிய சோழர்கள் அவர்களை சாளுக்கிய சோழர்கள் என்று பிரித்து ஆராய்ந்து, இலகுவாக புரிந்து கொள்ளலாம். அது, அந்தக் காலத்தில் இருந்த, பிற சோழர் அரச பரம்பரைகளில் இருந்து, அவர்களை தனியாக பிரித்து அறிவதற்கான முயற்சி மட்டுமே. உண்மையில், அன்று எல்லோரும் தம்மைத் தாமே சோழர்கள் என்று தான் அழைத்துக் கொண்டிருப்பார்கள். எந்த சோழர்? என்று கேள்வி எழும் அல்லவா? மேலும், சோழர்கள் தமிழர்களா அல்லது தெலுங்கர்களா என்பது அவர்களது பரம்பரை சம்பந்தமானது.
சோழர்கள் தமிழர்களின் பகுதிகளை ஆண்டார்கள் என்பதை நான் எங்கேயும் மறுக்கவில்லை. தமிழர்களை ஆண்டார்கள் என்ற காரணத்திற்காக, ஆட்சியாளர்களும் தமிழர்களாக இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. அன்று வாழ்ந்த, சாதாரண தமிழர்கள் அதைப் பற்றி எல்லாம் அக்கறைப் படுபவர்கள் அல்ல. இருபதாம் நூற்றாண்டில், ஆங்கிலேயர்கள் அறிமுகப் படுத்திய தேசியவாதக் கண்ணாடி கொண்டு, நாம் பண்டைய காலத்தை பார்க்க முடியாது. அது தவறு. இன்றுள்ள சமுதாய அமைப்பு, அரசியல் கருத்துக்கள், அன்று இருக்கவில்லை. அன்றிருந்த சமுதாய அமைப்பு வேறு. அந்தக் காலத்தில், மன்னரோ, மக்களோ எந்த இனத்தை சேர்ந்தவர், எந்த மொழியை பேசுகிறவர் என்று யாரும் கவலைப் படவில்லை. அன்று யாருக்கும் அந்த உணர்வே இருக்கவில்லை.இரவுப்பறவை said... //ஆரம்ப கால சோழர்கள், பல்லவர்களின் அடியாட் படையாக இருந்துள்ளனர். சோழ பரம்பரையின் முதலாவது மன்னன் விஜயாலன், பல்லவர்களின் பேரில் முத்தரையர்களுக்கு எதிரான போரை நடத்தியுள்ளான்//
EARLY CHOLAS எனப்படும் ஆரம்பகாலச் சோழர்களின் காலம் தொடங்குவது 300 BCE.
ஆனால் பல்லவர்களின் மொத்த காலமே (உங்கள் விக்கியை மூலமாக கொண்டால் கூட) 2-9 CE தான்.
இவர்கள்(சோழர்கள்) அவர்களிடம்(பல்லவர்களிடம்) அடியாட்களாக இருந்தார்கள் என்கிறீர்களே இதற்கு தரவு என்ன?
CE க்கும் BCE க்கும் உங்களுக்கு வித்யாசம் தெரியும்தானே?கலையரசன் said... //EARLY CHOLAS எனப்படும் ஆரம்பகாலச் சோழர்களின் காலம் தொடங்குவது 300 BCE.//
மன்னிக்கவும். இந்தக் குழப்பம் எனது தவறு தான். இந்தக் கட்டுரையின் தொடக்கத்திலேயே, இது பிற்கால சோழர்கள் சம்பந்தமானது என்று குறிப்பிட்டு இருக்கிறேன். எனினும் கொஞ்சம் தெளிவாக எழுதி இருக்க வேண்டும்.
பிற்காலச் சோழர்களின் ஆரம்ப கால சோழர்களை பற்றித் தான் அவ்வாறு குறிப்பிட்டேன். சங்க கால சோழர்களை அல்ல. பிற்கால சோழ பரம்பரையின் ஆரம்ப கால மன்னர்களான விஜயாலன் போன்றோர், பல்லவர்களுக்கு கப்பம் கட்டும் சிற்றரசர்களாக இருந்துள்ளனர். பல்லவர்கள் உத்தரவுக்கு இணங்க போரிட்டு வந்தனர். அதனால் பல்லவர்களின் நம்பிக்கைக்கு உரிய சிற்றரசர்களாக இருந்துள்ளனர்.
இதற்கு ஆதாரம், சோழர்களைப் பற்றிய அனைத்து வரலாற்று நூல்களிலும் எழுதப் பட்டுள்ளதுகாரிகன் said... கலையரசன்,
வழக்கம் போல எழுதுவதைப் போலே (இஸ்லாமிய சார்பாக) இதில் ஆழம் தெரியாமல் காலை விட்டு விட்டீர்களோ என்று தோன்றுகிறது. வரலாற்றை புரட்டிப் போடும் துணிச்சல் அதிகமாகவே இருக்கிறது உங்களிடம். என்ன ஒன்று. உங்கள் விருப்பங்களை எழுதுவதோடு கொஞ்சம் உண்மையையும் சேர்த்து எழுதலாமே.Vijithan said...
ஆரம்ப காலத்திலிருந்தே தமிழ் என்ற ஒரு மொழி தான் தென் இந்தியாவிலே இருந்ததாக வரலாறு சொல்கிறது.ஏனைய மொழிகள் தமிழில் இருந்து தோன்றியதாக சொல்லப் படுகிறது.நீங்கள் ராஜ ராஜ சோழன் மட்டும் தான் சோழர் தொடக்கம் என்பது போல் எழுதியிருக்கிறீர்கள்.1ம் நூற்றாண்டு தொடக்கத்திலேயே கரிகால சோழன் ஆட்சியும் கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே சோழர் ஆட்சி இருந்த்தா வரலாறு கூறுகிறது.தமிழ் சோழர்கள் ஆந்திராவில் ஆட்சி செய்ததாக ஏன் எழுத முடியாது.ஊகிப்பது எல்லாம் சரியென்று எழுதாதீர்கள்.பிழையான தகவல்களை மக்களிடம் சேர்க்காதீர்