Author Topic: ~ கொரில்லாக்கள் பற்றிய தகவல்கள்:- ~  (Read 621 times)

Offline MysteRy

கொரில்லாக்கள் பற்றிய தகவல்கள்:-




(Gorilla) பிரிமேட் என வகைப்படுத்தப்பட்ட உயிரினங்களில் மிக அதிக அளவு எடையுடைய உயிரினமாகும். கொரில்லாக்களும், சிம்பன்சியும் மனிதனை ஒத்த உருவ அமைப்பையும் மற்றும் சில பண்புகளையும் பெற்று விளங்குகின்றன.

கொரில்லாக்கள் மிக அடர்ந்த மலைப் பகுதிகளில் வாழக்கூடிய காட்டுவாசியாகும். நிலையான குடும்ப உறுப்பினர்களைக் கொண்ட இவற்றின் ஒரு குழுவில் சில எண்ணிக்கையிலிருந்து 50 வரையிலான எண்ணிக்கைவரை இவை ஒரு கூட்டுக் குடும்ப அமைப்பில் இணைந்து வாழக்கூடியவை. இருப்பினும், பொதுவாக ஒரு குழுவில் ஒன்று முதல் இரண்டு ஆண் கொரில்லாக்களும் (Silver back) நான்கு முதல் ஐந்து பெண் கொரில்லாக்களும்,மற்றும் அவற்றின் குட்டிகளும் (infant) இருக்கும். ஒரு குழுவில் மூத்த ஆண் கொரில்லா தலைமையை வகிக்கும்.

ஆண் கொரில்லாக்கள் பருவ வயதை அடையும்போது அவற்றின் பின்புற முடி சற்றே வெள்ளையாக நிறமாற்றம் அடையும். இந்தத் தருணத்தில்தான் இவை உடல் ரீதியாக இனப்பெருக்கத்திற்குத் தகுதியடைகின்றன. இதன்பிறகு இது தனக்கென ஒரு குடும்பத்தை உருவாக்கிக் கொள்கிறது.

ஆண் கொரில்லாக்கள் பெண் கொரில்லாக்களைவிட இரு மடங்கு எடையுடையதாகும். ஆண் கொரில்லாக்கள் 180 கிலோ எடையும், 1.75 மீட்டர் உயரமும் (சராசரி மனிதனின் உயரம்), பெண் கொரில்லாக்கள் 90 கிலோ எடையுடன் 1.5 மீட்டர் உயரமும், குட்டி பிறக்கும்போது 2 கிலோ எடை வரை இருக்கும். கொரில்லாக்களின் வாழ்நாள் அதிகபட்சமாக 45 வருடங்களாகும்.

கொரில்லாக்கள் குரங்கு இனத்தைச் சேர்ந்ததாக இருப்பினும், அவை பிரதான தரை வாழ் விலங்கினமாகும். இருப்பினும், அவற்றினால் மரங்கள் ஏறவும், பழ வகைகளைப் பறித்து உண்ணவும், கிளை விட்டு கிளை தாவி பாய்ந்து செல்லவும் முடியும். ஆண் கொரில்லாக்களை விட பெண் கொரில்லாக்கள் மற்றும் குட்டிகள் மரங்களில் அதிகம் ஏறக்கூடியதாய் இருக்கின்றன. இவற்றின் தோலின் நிறம் கருமையாகும். இவற்றின் உள்ளங்கை மற்றும் கால் பாதத்தில் அறவே முடிகளற்றும் முகம் மற்றும் மார்பில் சிறிதளவிற்கு முடியும், இதைத் தவிர்த்து உடலின் மற்ற பகுதியில் அடர்ந்த முடிகளையுடையதாயிருக்கும். பரந்த உறுதியான மார்பு இவற்றின் பராக்கிரமத்திற்குச் சான்று பகரக்கூடியவை. இவற்றின் கை மற்றும் கால் அமைப்பு மனிதனை ஒத்திருப்பினும், கை மற்றும் கால்கள் நான்கின் மூலம் நடந்து செல்லக் கூடியவையாகும். இவற்றின் கை அதன் கால்களைக் காட்டிலும் 20 சதவிகிதம் வரை நீளமாகும்.

கொரில்லாக்கள் பொதுவாக தண்ணீரை விரும்புவதில்லை. அவை உண்ணக்கூடிய இலை மற்றும் தழைகளின் நீர்ச் சத்து பெருமளவில் இவற்றின் தண்ணீர் தேவையைப் பூர்த்தியாக்கி விடுகின்றன. கொரில்லாக்கள் சுத்தமான சைவப் பிராணியாகும்.

கொரில்லாக்கள் தங்கள் வாழ்நாளில் பாதிக்கு மேற்பட்ட நேரத்தை உண்டு கழிப்பதிலேயே செலவிடுகின்றன. இவற்றின் பிரதான உணவு இலை,தண்டு, பூ, பழம், விதை, வேர் மற்றும் கிழங்கு போன்றவையாகும். இவை தங்கள் உணவிற்காக ஒரு நாளைக்கு சில நூறு மீட்டர்கள் முதல் ஒரு மைல் தூரம் வரை பயணிக்கும் கொரில்லாக்கள் நடத்தல், விளையாடுதல், ஓய்வெடுத்தல் போன்ற குண இயல்புகளைக் கொண்டுள்ளன. எந்த இடத்தில் இருக்கும்போது சூரியன் அஸ்தமனத்தை அடைகின்றதோ அங்கேயே தங்கள் குழுவுடன் தங்கிக் கொள்கின்றன. கொரில்லாக்கள் ஒவ்வொரு தினமும் இரவில் புதிய தங்கும் கூட்டை வளைந்து கொடுக்கக் கூடிய மரக் குச்சிகள், இலை மற்றும் புற்பூண்டுகளைக் கொண்டு தரையிலோ அல்லது மரத்திலோ அமைத்துக் கொள்கின்றன. பொதுவாக ஆண் கொரில்லாக்கள் மரத்தினடியிலும் பெண் கொரில்லாக்கள் மற்றும் குட்டிகள் மரத்தின் மேலும் இரவில் உறங்குகின்றன. இவற்றில் ஒரு குழு 5 முதல் 30 கிலோ மீட்டர் வரையான பரப்பளவை தங்கள் ஏகபோக எல்லையாகக் கொண்டுள்ளன.

கொரில்லாக்கள் பொதுவாக சண்டை சச்சரவுக்களில் அதிகம் நாட்டம் செலுத்துவதில்லை. அதே சமயம் தலைமை வகிக்கக் கூடிய ஆண் கொரில்லாக்கள் தலைமைக்கேற்ற பண்புடன் இவைகளுக்கு ஏதேனும் ஆபத்து என்ற நிலை ஏற்படும் போது தங்கள் குடும்பத்தைச் சூழ்ந்து கேடயமாக பாதுகாப்பதில் எந்த குறையும் வைப்பதில்லை. மேலும், மற்ற குடும்ப ஆண் கொரில்லாக்களும் பாதுகாப்பில் பின் வாங்குவதில்லை. கொரில்லாக்கள் ஆபத்தான நேரங்களில் தங்கள் மார்பை இரு கரங்களினாலும் ஓங்கி ஓங்கி அடித்துக் கொள்கின்றன.

கொரில்லாக்கள் தங்களுக்கிடையே 15 வகையான வித்தியாசமான ஒலியை எழுப்புவதன் மூலம் பிறவற்றுடன் தகவல் பரிவர்த்தனையில் ஈடுபடுகின்றன. கொரில்லாக்கள் சைகை மொழியை மிக விரைவில் அறிந்துகொள்ளும் திறன் பெற்று விளங்குகின்றன. கொரில்லாவிற்கு 500க்கும் மேற்பட்ட சைகைகளைப் புரிந்துகொள்ளும் திறன் இருப்பதாக தெரிகிறது. கொரில்லாக்கள் சுயமாக சிந்திக்கும் திறன் சிறிது பெற்றிருக்கின்றன.

மனிதர்களை போன்றே இவற்றிற்கும் இனப்பெருக்கத்திற்கென்று குறிப்பிட்ட ஒரு கால வரையறை கிடையாது. பெண் கொரில்லாக்களின் மாத விலக்கு சுழற்சி மனித இனத்தைப் போன்றே 28 நாட்களாகும். தன்னுடைய 9வயதில் பெண் கொரில்லாக்கள் பருவத்தை எட்டி இனப்பெருக்கத்திற்கு தகுதியடைகின்றன. இவற்றின் கர்ப்ப காலம் 8.5 முதல் 9 மாதம் வரையிலான கால அளவாகும். தன் வாழ்நாளில் 3 முதல் 6 முறை நான்கு வருட இடைவெளியில் குட்டி போடுகின்றன. இவற்றின் குட்டிகள் தங்கள் வழிமுறைகளை விரைவில் கற்றுத் தேர்ச்சியடைகின்றன. பிறந்த குட்டிகள் 4முதல் 5 ஆண்டுகள்வரை தன் தாயைச் சார்ந்தே வாழுகின்றன. பொதுவாக,பெண் கொரில்லாக்கள் பருவமடைந்தபின் பிறந்த வீட்டை விடுத்து புதிய வீட்டில் புகுந்து கொள்கின்றன. அதாவது வேறு குழுவில் சென்று இணைந்து கொள்கின்றன