கண்ணன் என் காதலன்
ஆனந்திற்கும் உமாவிற்கும் திருமணமாகி இரண்டு ஆண்டுகள் முடிந்துவிட்டது, இரண்டு ஆண்டுகள் முடிந்தது போன்று இல்லாமல் மிகவும் நெருக்கத்துடனும் அன்யோன்யத்துடனும் இருந்து வந்தனர், உமாவின் அக்காள் கணவன் சுரேஷ் விற்பனை அதிகாரியாக தனியார் நிறுவனமொன்றில் வேலை பார்த்து வந்தான், அடிக்கடி வெளியூர் சென்று வருவது வழக்கம், ஒரு முறை பெங்களுருவிற்கு சென்றிருந்தபோது ஆனந்தை தற்ச்செயலாக ஒரு இளம் பெண்ணுடன் பார்த்தான், பார்த்தவுடன் சந்தேகம் எழவில்லை, அப்படியே சந்தேகம் ஏற்பட்டிருந்தாலும் அதை உடனடியாக தனது மனைவியிடம் தெரிவிக்கவேண்டாம் என்ற முடிவில் இருந்தான் சுரேஷ், அதற்க்கு காரணம் தனது மாமனார் உடல் மிகவும் மோசமான நிலையில் இருந்ததாலும் ஆனந்திற்கும் உமாவிற்கும் திருமணமாகி ஒருவருடம் மட்டுமே ஆகி இருந்ததால் குடும்பத்தில் கலவரங்களை உண்டாக்க சுரேஷ் விரும்பவில்லை.
ஆனால் இன்னொரு வருடமும் கடந்துவிட்ட நிலையில் மற்றொருநாள் சென்னையில் ஜனத்திரள் நிறைந்து கிடக்கும் ஒரு வீதியில் ஆனந்தையும் அதே இளம் பெண்ணையும் மறுபடியும் சேர்ந்து பார்த்த போது இதைப்பற்றி முதலில் ஆனந்திடம் விசாரிப்பதா தனது மனைவி மூலம் உமாவிற்கு தெரியப்படுத்துவதா என்ற கேள்வி அவனுள் எழுந்தது. சரியான முடிவிற்கு வர இயலாமல் அவர்களை பின் தொடர்வதென முடிவிற்கு வந்தான் சுரேஷ்.
ஆட்டோ ஒன்றில் ஏறிய இருவரையும் மற்றொரு ஆட்டோவில் பின்தொடர்ந்தான், அவர்கள் சென்ற ஆட்டோ அடையாற்றிலுள்ள ஒரு வீதியில் இருந்த அடுக்குமாடி குடியிருப்பின் எதிரில் சென்று நின்றது, வெளியே இறங்கிய இருவரும் ஒன்றாக அடுக்குமாடி குடியிருப்பினுள் சென்று மறைந்தனர். இவர்களை பற்றிய தகவல்களை எப்படி யாரிடம் கேட்டு தெரிந்துகொள்வதென்று தெரியாமல் சற்று நேரம் அங்கேயே நின்றிருந்தவன் அந்த அடுக்குமாடியிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்த சற்று வயதான ஆள் ஒருவர் சற்று தொலைவில் நிருத்தபட்டிருக்கும் நடமாடும் துணிகளை சுருக்கம் நீக்கும் இரும்பு பெட்டியுடன் நின்றிருந்த இரண்டு சக்கர வண்டியை வந்தடைந்தார்.
அவரிடம் சென்று அடுக்குமாடியைப் பற்றிய விவரங்களை கேட்டறிய முற்பட்ட போது அந்த ஆள் சற்று கோபமடைந்தவராக சுரேஷை ஏற இறங்க பார்த்தார், சுரேஷுக்கு ஒரு நிமிடம் தனது அவசரத்தின் மீது வெட்கம் ஏற்ப்பட்டது, மறுபடியும் சில துணிகளை எடுத்துக்கொண்டு அந்த ஆள் வேறு ஒரு வீட்டை நோக்கி நடக்கலானார், அந்த இருசக்கர வண்டியின் அருகே உட்கார்ந்திருந்த வயதான பெண் சுரேஷை கவனிக்காதவள் போல் உட்கார்ந்திருந்தாள் அவள் வயதான ஆசாமியின் மனைவியாக இருக்ககூடும் என்று யோசித்த வண்ணம், அம்மா அந்த அப்பார்ட்மென்ட்ல இப்போ உள்ள போனாங்களே அவங்கள பத்தி ஏதாவது தெரிஞ்சா சொல்லமுடியுமா என்றான்.
கிழவி சிறிது நேரத்திற்குப் பின் சுரேஷை நிமிர்ந்து பார்த்துவிட்டு தெரியாது என்றாள். அடுத்தது என்ன செய்வது என யோசிக்க முடியாமல் அன்றைய அலுவலக பணிகளை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்புவதற்குள் எப்போதும் போல இரவு மணி பத்தை தாண்டிவிட்டிருந்தது. அவனுக்கு இரவு உணவு பரிமாறுவதற்கு வந்த அவன் மனைவியிடம் ஒரு முக்கிய விஷயம் உன்னிடம் சொல்ல வேண்டும் என்றான். முதலில் சாப்பிடுங்கள் பிறகு பேசலாம் என்று சொல்லிவிட்டு தானும் தட்டில் உணவை எடுத்து வைத்துக்கொண்டு சாப்பிடத் துவங்கினாள் சுரேஷின் மனைவி சாரு.
ஒரு வருடத்திற்கு முன்னர் பெங்களுருவில் தான் பார்த்த அதே பெண்ணுடன் இன்றும் ஆனந்தை சேர்த்து பார்த்தவற்றை ஒன்றுவிடாமல் சொல்லி முடித்தான் சுரேஷ், இதை உமாவிடம் எப்படி சொல்லுவது, ஆனந்தும் உமாவும் மிகவும் நெருக்கமாக வாழ்ந்து வருவதைப் பற்றி யாவரும் அறிந்திருக்கும் போது இது எப்படி சாத்தியம் என்பது போன்ற விவாதங்கள் இருவருக்கும் ஏற்ப்பட்டது. சுரேஷும் சாருவும் சேர்ந்து ஒரு முடிவிற்கு வந்தனர்.
அன்று ஞாயிற்று கிழமை மணி காலை ஒன்பது, அடையாற்றிலிருந்த அடுக்குமாடியில் எந்த வீட்டில் அந்த பெண் வசிக்கிறாள் அவள் பெயர் என்ன என்பது போன்ற விவரங்கள் ஏதும் தெரியாத நிலையில் ஒவ்வொரு வீடாகச்சென்று அழைப்புமணியை தட்டிவிட்டு வெளியே காத்திருந்தனர், முதல் மாடியில் மூன்றாவது வீட்டில் அதே பெண் கதவை திறந்தாள், லேசாக சாருவிடம் சமிஞை செய்தான் சுரேஷ். குடும்ப அட்டைகளை சரி பார்க்க வந்திருப்பதாக சொல்லிவிட்டு அவளது பெயர் கணவர் அல்லது பாதுகாப்பவர் பெயர் போன்ற விவரங்களை அவளிடம் விசாரித்த போது அந்த பெண் தனக்கு குடும்ப அட்டை பெங்களூருவில் இருப்பதாகவும் அதை முறைப்படி மாற்றிக்கொள்ள தேவைபட்டால் மாற்றிகொள்வதாகவும் தெரிவித்துவிட அவளது பெயரைக் கூட தெரிந்து கொள்வதற்கு இயலாமல் திரும்பிவிட்டனர் சுரேஷும் சாருவும்.
இத்தனை அழகியப் பெண் இவளுடன் ஆனந்திற்கு மறைவான தொடர்பு இருக்க வாய்ப்புகள் உண்டு என்று ஊகித்து வீடு திரும்பும் வழியில் உமாவின் வீட்டிற்கு சென்றனர். சாருவிற்கு உமாவையும் ஆனந்தையும் பார்த்த போது உள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்த பெண் விவகாரம் அடிக்கடி நினைவில் வந்து இயல்பாக பேச விடாமல் தடுத்து தடுமாறச் செய்தது. உமா கொடுத்த காப்பியைமட்டும் அருந்திவிட்டு ஆனந்தின் எதிரே உமாவிடம் ரகசியத்தை சொல்ல இயலாமல் வீடு திரும்பினர்.
சுரேஷிற்கு மனதில் குழப்பம் இன்று எப்படியாவது அதை தீர்த்து விடுவது என்ற முடிவில் நேரே அடையாற்றிலிருந்த அடுக்குமாடி வீட்டை சென்றடைந்து மணியை அழுத்திவிட்டு காத்திருந்தான், அதே பெண் வந்து கதவைத் திறந்தாள், உங்களிடம் ஒரு முக்கிய விஷயம் விசாரிக்க வேண்டும் என்றான், உள்ளே வாங்களேன் என்றாள், உள்ளேச் சென்றவன் அதிர்ச்சியில் உறைந்து போனான், சுவற்றில் ஆனந்தும் அந்த பெண்ணும் கணவன் மனைவி போன்று நெருங்கி நிற்கும் புகைப்படங்கள்.
உங்கள் பெயரை நான் தெரிந்து கொள்ளலாமா என்றான், எடுத்த எடுப்பிலேயே அவசரம் தொனித்தது சுரேஷின் குரலில், என் பெயர் ஷீலா. திருமணமாகிவிட்டதா, இல்லை, புகைப் படங்களில் உங்களுடன் இருப்பது உங்கள் கணவரா அல்லது, கேட்கிறேன் என்று தவறாக நினைக்க வேண்டாம், அதற்க்கு ஷீலா பரவாயில்லை, அவர் எனது நண்பர் என்றாள், உடனே சுரேஷ் புகைப்படத்தைப்பார்த்தால் அப்படித் தெரியவில்லையே என்றான்.
அவள் சற்றும் தாமதிக்காமல் நீங்கள் நினைப்பது போல்தான், அவர் என் காதலனும் கூட என்றாள், அதற்க்கு சுரேஷ் அவருக்கு திருமணமாகி மனைவி இருப்பது உங்களுக்கு தெரியுமா தெரியாதா என்றான். தெரியுமே என்றாள் ஷீலா. அவர் மனைவிக்குத் தெரிந்தால் என்னவாகும் என்று தெரியுமா உங்களுக்கு என்றான் சுரேஷ். ஷீலா அதற்க்கு பதிலேதும் பேசவில்லை, கோபத்துடன் வீட்டைவிட்டு வெளியே வந்து நேரே ஆனந்தின் அலுவலகம் நோக்கி விரைந்தான்.
ஆனந்தின் அலுவலகத்தை அடைந்த போது ஆனந்த் சுரேஷை வரவேற்க்கதயாராக இருந்ததுபோல் இருந்தான், ஷீலா தொலைபேசியில் ஆனந்திடம் இதைப்பற்றி தெரிவித்திருக்க கூடும் என்று அனுமானித்தான் சுரேஷ். அலுவலகத்தின் வேறு பக்கத்தில் இருந்த விசிட்டர் அறையில் இருவரும் சென்று அமர்ந்தனர், ஷீலாவுடன் ஆனந்தை தான் பார்த்த எல்லா விவரத்தையும் கூறி உமாவின் வாழ்க்கை பிரச்சினையை தட்டி கேட்க தான் இருப்பதாக எச்சரிக்கை செய்தான், ஆனந்த் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான். அலுவலகத்தில் சொந்த பிரச்சினைகளைப் பற்றி பேச தான் விரும்பவில்லை என்று சொல்லி சுரேஷை திருப்பி அனுப்பி விட்டான்.
தனது மனைவி சாருவிடம் கலந்தாலோசித்து, பிரச்சினையை உமாவிடமே விட்டுவிடுவது நல்லது என்று இருவரும் கைபேசியில் உமாவிடம் நடந்தவற்றைப் பற்றி விவரமாக சொல்லி ஆனந்திடம் பொறுமையாக விசாரிக்கச் சொன்னார்கள். உமாவிற்கு ஆச்சரியம், ஷீலா என்ற பெண்ணுடன் ஆனந்திற்கு உறவு இருப்பதற்கு வாய்ப்பே இருக்க முடியாது என்று உறுதியாக நம்பினாள். ஆனந்த் அன்று வீட்டிற்கு வந்து இரவு சாப்பிட்டு முடித்த பின் ஷீலாவைப்பற்றி விசாரித்தாள் உமா. ஆனந்த் உமாவிடம் தன் மீது சந்தேகம் உள்ளதா தான் அப்படியொரு பெண்ணிடம் பழகும் குணம் உள்ளவனா என்று கேட்டான். இதுவரையில் ஆனந்தை தான் முழுமையாக நம்பி வந்ததாகவும் சொன்னாள் உமா, தனது வாழ்க்கையில் எதையும் உமாவிடம் மறைத்ததே கிடையாது என்று சொன்னான் ஆனந்த்.
அப்படியென்றால் தனது அக்காவும் அவளது கணவனும் பார்த்த ஷீலா என்ற பெண் யார் என்று கேட்டாள் உமா. தன்னுடன் ஒன்றாக படித்த தனது பால்ய வயது முதல் தனக்கு மிகவும் நெருங்கிய சிநேகிதன் கண்ணன் என்றான் ஆனந்த்.