கடவுள் ஒருநாள் உலகைக்காண வந்தாராம்
கடவுள் எல்லாவித ஜீவராசிகளையும் மிருகங்களையும் படைத்து முடித்தபின்னர் அதனதன் விருப்பப்படி வாழ்ந்துவந்த சமயத்துல சில காலம் இடைவெளி விட்டு பின்னர் பூமிக்கு வந்து ஜீவராசிகள் செடி கொடி மரம் பூ மனிதன் காய் கனி என்று எல்லாரிடமும் உங்கள் வாழ்க்கையில் ஏதாவது மாற்றங்கள் தேவை இருந்தால் சொல்லுங்கள் அதன்படி மாற்றியமைத்துவிடலாம் என்றாராம், அப்போது நாய் முதலில் வந்து எனக்கு அதிக ஆயுசு வேண்டாம் அதற்க்கு பதில் எல்லோரிடமும் விசுவாசம் நன்றிமறவாமை வேண்டும், மிருகங்களுடனேயே வாழ்ந்து சாகாமல் பிறருக்கு பிரயோஜனமாக வாழும் வாழ்க்கை வேண்டும் என்று கேட்டதாம், அடுத்தது மாடு வந்து நானும் எனது உடல் உயிர் எல்லாம் அடுத்தவருக்குப் பிரயோஜனப்படும்படியாக வாழும் வாழ்க்கை வேண்டும், என்னைப்போன்ற மிருகத்தின் மாமிசம் சாப்பிட்டு உயிர் வாழ்தலில் விருப்பமில்லை என்றதுவாம்.
ஒவ்வொரு மிருகமும் அதனதன் தேவைகளின் படி கேட்டுப் பெற்றுக்கொண்டது, கடைசியாக மரம் செடிக்கொடிகள் காய் கனிகள் பூக்கள் வந்ததாம், அவைகளும் தங்களது விருப்பத்தின் படி கேட்டுப் பெற்றுச்சென்றனவாம் அதில் பூக்கள் மட்டும் சில நிமிஷங்களும் ஒரு சில நாட்களும் எங்களுக்கு உயிர் வாழும் வாழ்க்கையே போதுமானது என்றும் தங்களுக்கு கிடைத்திருக்கும் அழகும் நறுமணமும் எல்லோரையும் கவர்ந்திழுக்கும் குணநலன்களே போதும் ஆனால் எங்களையல்லாமல் ஒரு வைபவமும் நடக்கக்கூடாது என்றதுவாம். அப்போது கடவுள் சொன்னாராம் எனக்கும் உங்கள் அழகும் நறுமணமும் மிகவும் பிடிக்கும் என்பதால் என்னை நினைத்து பூஜிக்கும் பிரதானப் பொருளாவீர்கள் என்றாராம்.
கடைசியாக மனிதன் வந்தானாம் பூமியில் அனுபவிப்பதற்கு ஏராளமான காலம் எங்களுக்கு தேவைப்படுகிறது, அத்தனை இன்பங்கள் பூமியில் நீர் படைத்து இருக்கின்றீகள் அதனால் எங்களுக்கு ஆயுசுகாலம் மற்ற எல்லா உயிரினங்கள் கேட்டதை விட அதிகமாக வேண்டும் என்று கேட்டானாம், அது மட்டுமே போதுமா என்று கடவுள் கேட்டாராம், இப்போதைக்கு இது போதும், எப்போதெல்லாம் தேவை எழுகிறதோ அப்போதெல்லாம் கேட்டு வாங்கிக்கொள்ளுவோம் என்றானாம் மனிதன், அப்படியே ஆகட்டும் என்றாராம் கடவுள்,
அதனால் மனிதனின் தேவைகள் எதுவாக இருந்தாலும் கேட்கும் மனிதர்களுக்கு கொடுக்க தயாராக இருந்தாராம், ஆனால் மனிதர்கள் யாருக்குமே ஒரு தேவையும் ஏற்படவில்லையாம் பல காலம் காத்திருந்தாராம் ஒரு மனிதரிடமிருந்தும் ஒரு தேவையும் கேட்டு குரல் அவருக்கு வரவில்லையாம், அப்போது மனிதனுக்கு முதலில் பசியை ஏற்ப்படுத்தினாராம், பசி எடுத்தபோது மனிதர்கள் அங்குமிங்கும் ஓடி கிழங்கு பழங்கள் காய்களைத் தின்று பசியாற்றிக்கொள்ள அலைந்த போது அவை போதாமல் மிருகங்களையும் வேட்டையாடி அவற்றின் மாமிச உணவைத்தின்று உடலில் பலம் அதிகரித்ததால் எல்லாவகை உணர்வுகளாலும் தூண்டப்பட்டு எல்லாவித நன்மை தீமைகளையும் சந்திக்க நேர்ந்ததாம், அப்போது உடலில் வியாதிகளும் மனதில் விரோதங்களும் தோன்ற ஒருவருடன் ஒருவர் சண்டையிடவும் அதினால் ஒருவரையொருவர் கொன்றும் வந்தனராம்,
இந்நிலையில் ஒரு சிலர் கடவுளை கூப்பிட்டு அங்கு நடக்கும் பிரச்சினைகளைப்பற்றி சொன்னபோது மற்றவர்கள் எங்கே என்று கடவுள் கேட்டாராம், சிலர் கொல்லப்பட்டுவிட்டனர் சிலர் பல தீயஉணர்வுகளுக்கு அடிமையாகி அதில் மூழ்கி கிடக்கின்றனர் என்றனர். அப்போது கடவுளிடம் முதலில் எங்களை காப்பாற்றுங்கள் என்று வேண்டிக் கொண்டார்களாம், அவர்கள் வேண்டிக்கொண்டதுக் கேற்ப அவர்களது தேவைகளை பூர்த்தி செய்து அனுப்பினாராம், மற்றவர்கள் கடவுளை மறந்து போய் அப்படியே வாழ்ந்தனராம்.