எங்கே போனது மனிதம்?
ஒரு தமிழன் தாக்கப் பட்டால் தமிழன் மட்டுமே குரல் கொடுக்க வேண்டுமா?
ஒரு முஸ்லீம் தாக்கப்பட்டால் முஸ்லீம் மட்டுமே குரல் கொடுக்க வேண்டுமா?
ஒரு கிறிஸ்டியன் தாக்கப்பட்டால் கிறிஸ்டியன் மட்டுமே குரல் கொடுக்க வேண்டுமா?
ஒரு இந்து தாக்கப்பட்டால் இந்து மட்டுமே குரல் கொடுக்க வேண்டுமா?
ஒரு ஜாதிக்காரன், ஒரு இனத்துக்காரன், ஒரு மதத்துக்காரன் தாக்கப்பட்டால் அதை சார்ந்தவர்கள் மட்டுமே அதற்கு குரல் கொடுக்க வேண்டுமா? ஏன் மற்றவர்கள் அதற்கு குரல் கொடுப்பதில்லை?
நாம் அனைவரும் நம்மை ஒரு வட்டத்துக்கள் அடைத்துக்கொண்டது தான் காரணம்.
குறைந்த பட்சம் இவர்களாவது ஏதோ ஒரு காரணத்தினால் குரல் கொடுக்கிறார்கள் என்று எண்ணி மகிழ்வதா அல்லது கோபப்படுவதா என்று தெரியவில்லை.
உண்மையில் நாம் இவர்களை நினைத்து பெருமைப்படுவதில் தவறில்லை. ஏன் எனில் இவர்களாவது அவர்களோடு ஏதோ ஒரு முறையில் சம்பந்தம் இருப்பவர்களுக்கு குரல் கொடுக்கிறார்கள். பெரும்பாலானோர் யாருக்கு என்ன நடந்தால் நமக்கென்ன என்று இருக்கிறார்கள். இவர்களை விட அவர்கள் மேல்.
யோசிக்கத் தெரிந்த அனைவரும் முதலில் என் மதம், என் இனம், என் ஜாதி, என் மதம் என்ற வட்டத்திலிருந்து வெளியில் வர வேண்டும்.
அவர்கள் அடுத்த வட்டத்திற்கு செல்ல வேண்டும் அந்த வட்டம் நாம் அனைவரும் மனிதர்கள் என்று நினைக்கும் வட்டம் . முடிந்தால் நாம் அனைவரும் உயிர்கள்,இயற்கையின் அங்கம் என்ற வட்டத்திற்குள்ளும் செல்லலாம்.
இந்த வட்டத்திற்குள் என்று மனிதன் செல்கின்றானோ அன்றே மனதிலும் உலகிலும் அமைதியும் மகிழ்ச்சியும் பொங்கும். அதுவரை மனிதம் எங்கே போனது என எங்கு தேடினும் கிடைக்காது.
ஆமாம் நீங்கள் எந்த வட்டத்திற்குள் இன்று இருக்கின்றீர்கள்?