குண்டக்கா மண்டக்கா
பரம்பரை சொத்து ஓடு வேய்ந்த நாலுகட்டு வீடு, தோட்டத்தில் தென்னை மரங்கள் சுமார் பத்து தேறும், முருங்கைமரம் கொய்யாமரம் மாமரம் என்று மனிதனுக்குத் தேவையான அத்தனை மரம் செடி கொடிகளும் அவர்கள் வீட்டுத் தோட்டத்தில் உண்டு, தினம் சமையலுக்குத் தேவையான காய்கறிகளை பயிரிட்டுகொள்வதுடன் விவசாயம் செய்து வயிற்றுப் பிழைப்பு நடத்தத் தேவையான பத்து ஏக்கர் விளைநிலமும் நீர் பாய்ச்சலுக்கு குறைவில்லாத கிணறும் மாடசாமிக்கு உண்டு. மாடசாமியுடன் பிறந்த சகோதரி ஒருத்தியை அடுத்திருந்த கிராமத்தில் பள்ளிக்கூட வாத்தியாருக்கு சிறிய வயதிலேயே திருமணம் செய்வித்தனர் அவரது பெற்றோர், திருமணமாகிய அடுத்த வருடத்தில் பதினான்கே வயதான மாடசாமியின் தமக்கை ஒரு பெண் குழந்தையை பெற்ற பின் போதிய மருத்துவ வசதிகள் இல்லாத கிராமம் என்பதால் ஜன்னி ஏற்ப்பட்டு இறந்து போனாள். தமக்கை இறந்த பின்னர் அவள் பெற்றெடுத்தப் பெண் குழந்தை அவர்களது வீட்டிலேயே வளர்ந்து வந்தது, அவளது பெயர் துளசி.
துளசி வயதிற்கு வந்தவுடன் மாடசாமிக்கு திருமணம் செய்து தங்கள் வீட்டோடு வைத்துக் கொண்டனர் மாடசாமியின் பெற்றோர். சிறிய வயதிலேயே திருமணம் நடந்தி வைத்ததால் மாடசாமிக்கும் துளசிக்கும் வருடம் ஒரு பெண் குழந்தை பிறந்தது, ஒவ்வொரு பிரசவத்தின் போதும் நகரத்திலிருந்த தனியார் பிரசவ மருத்துவமனைக்கு கூட்டிச் சென்று பிரசவம் பார்த்துவந்தனர், ஆறாவது வருடமும் துளசிக்கு பெண் குழந்தையே பிறந்த போது மருத்துவர் இனிமேல் துளசியின் உடல் நிலை பிரசவத்தை தாங்காது என்று கூறிவிட்டனர். ஒரே ஒரு ஆண் குழந்தை வேண்டும் பிறகு குழந்தை வேண்டாம் என்று நினைத்து பல தெய்வங்களை வேண்டிக் கொண்ட பின் ஏழாவது பிரசவத்தில் ஒரு மகன் பிறந்தது ஆனால் துளசியை பறி கொடுக்க வேண்டியதாகிவிட்டது.
குழந்தைகளை வளர்க்கும் பொருப்பு மாடசாமியின் பெற்றோருக்கு இருந்து வந்தது, சில வருடங்களில் மாடசாமியின் முதல் பெண் பனிரெண்டு வயதுடையவளான போது மற்ற குழந்தைகளின் சில வேலைகளை கவனித்துக் கொள்ளும் பொறுப்பை அவளிடம் கொடுத்தனர், மாடசாமியின் மகனுக்கு அவனது மனைவியின் நினைவாக துளசிராம் என்று பெயரிட்டனர். துளசிராமிற்கு ஓரளவு கருத்து தெரிய ஆரம்பித்த போது அவனது ஆறு அக்காள்களும் அவனை மிகவும் அன்புடனும் ஆசையுடனும் பாதுகாத்து வந்தனர்,
தனது அக்காள்களை அக்காள் என்று ஒருவரைக் கூப்பிட்டால் எல்லோரும் ஓடி வருவார்கள், இதை கவனித்த துளசியின் தாத்தா ஒவ்வொருவரது பெயரிலிருக்கும் முதல் எழுத்தைச் சொல்லி அதனுடன் அக்காவையும் சேர்த்து கூப்பிடச் சொல்லி கொடுத்தார், அதன்படி ஒவ்வொரு அக்காளையும் அவர்களது பெயரில் வருகின்ற முதல் எழுத்துடன் அக்காவை சேர்த்து கூப்பிட்டு வந்தனர். துளசியும் அவனது அக்காள்களும் பள்ளிக்குச் செல்லும் போதும் விளையாடுமிடங்களிலும் கூட அதே போன்று சொல்லி கூப்பிடுவது வழக்கமாகியது.
'கு'னாக்கா, 'மா'னாக்கா என்று குழந்தைகள் ஒருவரையொருவர் அழைத்ததை கண்ட அந்த கிராமத்து மக்கள் இதென்ன 'குனாக்கா' மானாக்கா' என்று கூப்பிடுகின்றீர்களே என்று சொல்லி கேலி செய்தனர். இச்சொல்லானது அந்த கிராமத்தில் குறிப்பிட்ட ஒரு வார்த்தையை சொல்லுமிடத்தில் வேறு வார்த்தைகளை மாற்றி குறிப்பிட்டு பேசும் போது அதைச் சுட்டி காண்பிப்பதற்கு 'குனக்க மானக்க என்று பேசாதே' என்று சொல்லி வந்தனர், பிறகு அச்சொல் மருவி நாளடைவில் 'குண்டக்க' மண்டக்க' என்று மாற்றி சொல்லப்பட்டது. இதன் உண்மை காரணத்தை அறியாவர்களும் இந்த சொல்லை உபயோகிக்க ஆரம்பித்த போது 'குண்டக்கா மண்டக்கா' என்று மாறிபோயிற்று. [/b]