குமார் கடைக்கு போய் மண்ணெண்ணை ஒரு போத்தல் வாங்கி வா" அம்மாவின் கட்டளை இது.
கடைக்குப் போய் வாங்கிக் கொடுத்து விட்டு படிப்பத்தற்காக புத்தகத்தை எடுத்தேன்.
"டேய் குமார், கடைக்குப் போய் பவுடர் டப்பா வாங்கி வா"
இது வேலைக்குப் போகும் எனது அக்காவின் அதிகாரக் குரல்.
மறுபடியும் கடைக்குப் போய் பவுடர் வாங்கிக் கொடுத்து விட்டு
படிக்க உட்கார்ந்தேன்.
புத்தகத்தை திறக்கவேயில்லை. அதற்குள் அக்காவின் அடுத்த கட்டளை. "குமார் கமலா ஆன்டி வீட்டுக்குப் போய் தைக்கக் கொடுத்த எனது சட்டையை பிளவுஸ்சை வாங்கிவா"
எரிச்சலாக இருந்தது.
புத்தகத்தை வைத்துவிட்டு மறுபடி கமலா ஆன்டி வீட்டுக்கும் போனேன். அவர்கள் வீட்டுக்குப் போவது எனக்குப் பிடிக்காது.
அவர்கள் மகள்கள் இருவர் இருகிறார்கள். அவர்கள் பார்க்கும் பார்வையும், கிண்டலாக பேசும் விதமும் எனக்குப் பிடிக்காது.
நல்ல நேரம் நான் போன வேளை அவர்கள் இருவரும் வீட்டிலில்லை.பிளவுஸ்சை வாங்கிக் கொண்டு தப்பினேன் பிழைத்தேன் என ஓடி வந்தேன்.
பிளவுஸ்சை அக்காவிடம் கொடுத்து விட்டு அப்பாடா என படிக்க ஆரம்பித்தேன்.
ஒரு பக்கம் கூட படித்திருக்க மாட்டேன், மறுபடி கட்டளை வந்துவிட்டது. இந்த முறை எனது சின்ன அக்கா என்னை விட ஒரு வயது மூத்தவள். எனக்கு வீட்டில் எதிரியே அவள் தான்.
அடிக்கடி அம்மாவிடமும் அண்ணனிடமும் என்னை போட்டுக் கொடுப்பதில் அவளுக்கு அப்படி ஒரு ஆனந்தம்.
"கடைக்குப் போய் லன்ஞ் பேப்பர் வாங்கி வா. அக்காவுக்கு சாப்பாடு சுத்தனும்"
"சே! இந்த வீட்டில் நிம்மதியா படிக்க கூட விடமாட்டாங்க" கோபத்தில் நான் கத்தினேன்.
"நீ படிச்சி கிழிச்ச. தண்டசோறு. வீட்டுல வேலை சொன்னால் மட்டும் வலிக்கும்.ஒன்னுக்கும் உதவாதவன்." இது சின்ன அக்காவின் கிண்டல் வார்த்தைகள்.
எனக்கு கோபம் தலைக்கேறியது. நேரே சமயலறைக்கு சென்றேன். நான் கடைக்கு போகத்தான் வந்ததாக என்னிய சின்ன அக்கா ஏளனச் சிரிப்புடன் பணத்தை நீட்டினாள்.
நான் அவள் கையை தட்டிவிட்டு விட்டு அவள் கன்னத்தில் பளார் என்று அறைந்தேன்.
யாரும் இதை எதிர்பார்க்கவில்லை. நான் கூடத்தான்.
அக்கா அடிபட்ட அதிர்ச்சியில் சிலையானாள். கண்ணில் இருந்து கண்ணீர் கூட வரவில்லை.
"டேய் உனக்கு கொழுப்பு கூடிவிட்டது. உனக்கு வயதுக்கு மூத்தவள். ஒரு வயதுக்கு வந்தவளை கை நீட்டி அடிக்க உனக்கு எத்தனை துணிச்சல்?" அம்மா கோபத்தில் கத்தினாள்.
"வெட்டி சோறு திங்கும் இவனுக்கு கொழுப்பு ஏறாமல் என்ன செய்யும்? இரு அண்ணன் வரட்டும். உன் கையை உடைக்க சொல்கிறேன்". மூத்த அக்கா முகம் சிவக்க கத்தினாள்.
அடித்த பின்தான் எனது தவறு எனக்கு புரிந்தது. ஒரு வயதுக்கு மூத்தவளை அதும் ஒரு பெண்பிள்ளையை கை நீட்டி அடிந்து விட்டோமே என மனதுக்கு உறைத்தது.கோபம் கண்ணை மறைக்கும் என்பது உண்மையாகிட்டது.
" அக்கா, மன்னித்துக் கொள். நான் செய்தது தவறு தான். கோபத்தில் அடித்து விட்டேன்" நான் செய்த பிழைக்காக உண்மையில் மன்னிப்புக் கேட்டேன்.
"அண்ணன் வந்தால் அடிவிழும் என்று பயத்தில் மன்னிப்புக் கேட்கிறான்". சின்ன அக்கா கன்னத்தை பிடித்துக் கொண்டு கிண்டலாக பேசினாள்.
"மூத்தவன் வரட்டும். உனது கையை உடைக்க சொல்லுகிறேன்.
தண்டச்சோறு திங்கும் உன்னை பட்டினி போட்டால் தான் உனக்கு கொழுப்பு அடங்கும்". இது அம்மா.
அம்மா துணி துவைத்துக்கொண்டிருந்தாள். இல்லாவிட்டால் எனக்கு அடி விழுந்திருக்கும். எனது மேல் உள்ள கோபத்தை துணிகளின் மேல் காட்டிக் கொண்டிருந்தாள்.
"வீட்டில் சும்மா இருந்து சாப்பிடும் இவனுக்கு வேலை சொன்னால் வருத்தம் தான். அண்ணனிடம் சொல்லி இவனுக்கு பாடம் படிப்பிக்காமல் நான் இன்னைக்கு வேலைக்குப் போகமாட்டேன்". அக்கா கோபத்தில் குமுறினாள்.
" நான் தண்டச்சோறு தான். வெட்டிசோறு சாப்பிடுபவன் தான்.
நான் மட்டுமல்ல, படித்து முடித்து வேளைக்கு போகும் வரை எல்லோருமே வீட்டில் தண்டச்சோறு சாப்பிட்டவர்கள் தான். நான் என்றும் அப்படி இருக்க விரும்பவில்லை. படித்து முடித்து எல்லோருக்கும் சோறு போடவே விரும்புகிறேன். அதற்காக படிக்க விரும்புகிறேன்."
" என்னை படிக்க விடுகிறீர்களா? ஒரு கடைக்கு பலதடவை அனுப்புகிறீர்கள். பால் வாங்கி வா, மா வாங்கி வா, மண்ணெண்ணை வாங்கி வா என பலதடவை அனுப்புகிறீர்கள். அதையெல்லாம் ஒரே தடவையில் சொல்லலாம் தானே.
ஒவ்வொரு தடவையும் புத்தகத்தை எடுக்கும் போது ஒரு வேலை சொல்கிறீர்கள். இதில் நான் எப்படி பாடத்தில் கவனம் செலுத்துவது? நானும் படித்து நம் குடும்பத்தை பார்த்துக் கொள்ளவே ஆசைப்படுகிறேன்."
" நான் அக்காவை அடித்தது தவறு தான். என்னை விட வயது மூத்தவளை, அதும் ஒரு பெண்பிள்ளையை கை நீட்டி அடித்தது
தவறு தான்.அவளும் என்னை எந்த நேரமும் சீண்டிப்பார்க்கிறாள். அதனால் ஆத்திரத்தில் அறிவிழந்து விட்டேன். அதற்காக உண்மையி மன்னிப்புக் கேட்கிறேன். அண்ணன் அடிப்பார்கள் என்று நான் பயந்து மன்னிப்புக் கேட்கவில்லை."
நான் அடுப்புக்கருகில் சென்று எரிந்து கொண்டிருந்த அடுப்பில் இருந்து ஒரு கொள்ளிக்கட்டையை உருவினேன். சின்ன அக்கா சூடு வைத்துவிடுவேனோ என பயத்தில் பின்னால் துள்ளிப் பாய்ந்தாள்.
"டேய், என்ன பண்ணுற? அவளை ஏதும் பண்ணினால் நானே உன்னை கொன்னுடுவேன்" அம்மா பதற்றமாக துணியை போட்டு விட்டு எழுந்து வந்தாள்.
நான் அமைதியாக கொள்ளிக்கட்டையுடன் நின்றேன்.
" நான் பயத்தில் மன்னிப்புக் கேட்பதாக தானே நினைக்கிறீர்கள்?
அண்ணன் வந்து அடிப்பார் என்று நான் பயப்படுவதாக தானே நினைக்கிறீர்கள். என் தவறுக்கு நானே தண்டனை தந்து கொள்கிறேன்."
கனல் தகிக்கும் கொள்ளிக்கட்டையை வலது கையால் இறுக்கிப் பிடித்தேன்.
என் கை பொசுங்கியது. கொள்ளிக்கட்டையை கீழே போட்டு விட்டு
ஞானம் பெற்ற புத்தனைப் போல அமைதியாக வெளியே நடந்தேன்.
நான் செய்த காரியம் அவர்கள் மனதை சுட்டதா இல்லை நான் சொன்ன வார்த்தைகள் அவர்கள் மனதை சுட்டதா? எல்லோரும் விக்கித்துப்போய் சிலையாக நின்றார்கள்.