Author Topic: ரகசியம்  (Read 5743 times)

Offline Global Angel

ரகசியம்
« on: November 22, 2011, 11:14:51 PM »
ரகசியம்

புதிய தனி வீடு என்பது சுகந்திக்கு கனவாகவே இருந்து வந்தது, முப்பது வருட தாம்பத்யத்திற்க்குப் பின் கனவு இல்லம் உண்மையாகியத்தில் அவளுக்கு அளவிட முடியாத மகிழ்ச்சி. ஆனால் அந்த மகிழ்ச்சியை குலைத்து விடுவது போன்ற செயல் ஒன்று நடந்து முடிந்தது, வீட்டை பூட்டிவிட்டு இரண்டு மணிநேரம் கழித்து திரும்பி வந்து பூட்டைத் திறக்க இருந்த போது கதவிலிருந்த பூட்டைக் காணவில்லை தாழ்ப்பாள் உருகுலைந்து காணப்பட்டது, ஏதோ விபரீதம் நடந்திருப்பதை அறிந்து வீட்டினுள்ளே சென்று பார்த்தபோது படுக்கையறையிலிருந்த பீரோ திறந்து கிடக்க அதில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த துணிகள் சிதறிக்கிடந்தது.

காவல்துறையில் உயர்ந்த பதவியிலிருக்கும் அவளது கணவனுக்கு கைபேசியில் அழைத்து நடந்தவற்றை சொன்னபோது, சுகந்தியின் குரலில் நடுக்கம், படபடப்பு. அவள் கணவன், பீரோவில் விலையுயர்ந்த பொருள், பணமும் ஒன்றும் வீட்டில் வைப்பதில்லையே பிறகு ஏன் இத்தனை பதட்டப்படுகிறாய் முதலில் அசுவாசப்படுத்திக்கொள் என்றார். இல்லை உடனே இதை பதிவு செய்து கைரேகை எடுக்கவும் மோப்ப நாய் அனுப்பவும் ஏற்பாடு செய்யுங்கள் என்றாள் சுகந்தி. பீரோவில் என்ன பொருள் காணாமல் போனது என்று கேட்டால் என்ன சொல்ல முடியும், முதலில் நீ உன்னை அசுவாசப்படுத்திக் கொள் என்றார்.

என்னை என்னால் அசுவாசப்படுத்திக் கொள்வதற்கு முடியவில்லை உடனே ஆட்களை அனுப்புங்கள், என் தலையே வெடித்துச் சிதறிவிடும் போல இருக்கிறது என்றாள் சுகந்தி பிடிவாதமாக. ஆட்களை அனுப்புவது என்பதைவிட அவர்களிடம் என்னவென்று புகார் கொடுக்கப் போகிறோம் என்பதையும் நாம் தயாராக வைத்திருக்கவேண்டும் அல்லவா என்றார், என்னோட செயின் அழகிய டாலருடன் வைத்திருந்தது காணவில்லை, அதனுடன் அந்த சிறிய ஆர் என்கிற ஆங்கில எழுத்து போட்டிருந்த மோதிரமும் காணவில்லை. இதற்க்கு போலீசை அங்கே அனுப்பினால் என் மானம் தான் போகும் பேசாமல் இரு, ஒரு புகார் மனு எழுதி கொடுத்து வைக்கிறேன், வேறு இடங்களில் திருடு போன நகைகளை கைப்பற்றும் போது இந்த இரண்டும் கிடைத்தால் அப்போது நமக்குத் திரும்ப கிடைக்க அங்குள்ள காவல்துறையின் அதிகாரியிடம் நான் சொல்லிவைக்கிறேன், முதலில் உன்னை அசுவாசப்படுத்திக்கொள் என்றார் அவள் கணவர்.

நகைத் திருடர்கள் பிடிபடும்போது கிடைக்கும் நகைகளில் அந்த செயினும் மோதிரமும் கிடைக்கவில்லை, வருடங்கள் கடந்தது, சுகந்தி எப்போதும் அவள் கணவனை நச்சரித்துக் கொண்டிருந்தாள், வீட்டிற்கு வந்து செல்கின்ற காவல்துறையைச் சார்ந்த நண்பர்கள் ஒருவர் விடாமல் காணாமல் போன செயினையும் மோதிரத்தையும் பற்றி சொல்லிக்கொண்டிருப்பது வழக்கமாகி போனது, ஒருமுறை விஷச் சாராயம் காய்ச்சி விற்ற கும்பலை பிடித்துவந்து காவலில் வைத்திருந்தனர், காவலில் வைக்கப்பட்டிருந்த ஒருவன் கழுத்தில் அதே சங்கிலி இருப்பதை கவனித்ததாக ஒரு போலீஸ்காரர் சுகந்தியின் கணவருக்கு தகவல் தெரிவிக்க அங்குவந்த சுகந்தியின் கணவருக்கு அந்த செயின் காண்பிக்கப்பட்டது, அதே செயின்,

செயினை அணிந்திருந்தவனை அழைத்து வரச் சொல்லி அந்த செயின் எங்கே எப்படிக் கிடைத்தது என்று விசாரணை செய்தபோது, கள்ளச் சாராயம் விற்றபோது காசு கொடுக்காமல் குடித்துவிட்டு தப்பிக்க முயன்ற ஒருவனிடமிருந்து கிடைத்ததாக சொன்னான், அவனிடமிருந்து செயினை வாங்கிச் சென்று மனைவி சுகந்தியிடம் கொடுத்தபோது அவளுக்கு சந்தோசம் பெருகவில்லை, ஆர் என்ற ஆங்கில எழுத்துப் பதித்த மோதிரம் இன்னும் கிடைக்கவில்லையே என்ற குறைதான். மோதிரத்தை எங்கே போய் தேட என்று அலுத்துக் கொண்டார் அவள் கணவர்.

ஆனால் கோவில் உண்டியலை உடைத்து திருடிய திருடனை பிடித்த போது அந்த உண்டியலில் இருந்த ஆபரணங்களும் கைப்பற்றப்பட்டது அத்துடன் அந்த ஆங்கில ஆர் எழுத்து பொறித்திருந்த மோதிரமும் கிடைத்துவிட்டது, மோதிரத்தை வீட்டிற்கு கொண்டு வந்து கொடுத்துச் சென்றார் காவலாளர். செயினை அடையாளம் காட்டிய போலீஸ்காரர் மோதிரம் கண்டு பிடித்த போலீஸ்காரரிடம் அந்த செயினு தங்கமில்லையாம் அவனுக்கு தெரியாமல் அதை வைக்க மார்வாடி கடைக்கு கொண்டு போனபோதுதான் அந்த செயினு ஐம்பொன்னுல செய்ததுன்னு தெரிஞ்சுச்சாம், அந்த கள்ளச் சாராயம் வித்தவன் சொன்னான் என்றார், மோதிரத்தை கண்டு பிடித்துக் கொடுத்த போலீஸ்காரர் பதிலுக்கு கோவில் உண்டியலத் திருடியவனும் அதத்தான் சொன்னான் என்றார்.
மோதிரமும் செயினும் கிடைத்த மகிழ்ச்சி சுகந்திக்கு, பள்ளியிறுதி ஆண்டில் பள்ளியிலேயே முதல் மாணவியாக வந்த போது பள்ளியில் பணி புரிந்த அவளது கணக்கு வாத்தியார் அவளுக்கு கொடுத்த நினைவுப் பரிசு ஆர் மோதிரம், இளங்கலை படித்தப் பின் காவல்துறையில் பணி செய்ய வேண்டுமென்று விரும்பி பரீட்சை எழுதி வெற்றிபெற்று அதிகாரியாக பணி நியமனம் கிடைத்ததற்கு அதே வாத்தியார் கொடுத்த இரண்டாவது பரிசு செயின், நமது திருமண நிச்சயதார்த்ததிற்க்குதான் உனக்கு தங்கத்தில் போடுவேன் என்று சுகந்தியிடம் சொன்ன அந்த ராசா என்கிற ராஜராஜன் வாத்தியார் இரு சக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த போது விபத்தில் காலமான விவரங்கள் சுகந்தியைத் தவிர வேறு யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
                    

Offline RemO

Re: ரகசியம்
« Reply #1 on: November 23, 2011, 08:20:37 AM »
nice