Author Topic: ஐதராபாதி பாகரா பைங்கன்  (Read 1437 times)

Offline micro diary

ஐதராபாதி பாகரா பைங்கன்
« on: November 17, 2011, 04:34:29 PM »
விருந்து உபசரிப்பில் ஈடில்லாதவர்கள் ஹைதராபாதிகள். உணவு உண்ணும் ஒவ்வொருவரும் நிஜாம்கள் என்ற எண்ணம் தோன்றும் வண்ணம், மரத்தாலான சிறு பலகை, அதன் மீது மெத்தை, சுற்றிலும் குஷன்கள் வைத்து சொகுசாக இருக்கும்படி அமைந்த உணவு அறையினை ஷாஹி தஸ்தர் கானா என்றழைக்கின்றனர். விருந்தினை இங்குதான் வழங்குவர். விருந்து முடிந்த பின் மசாலாக்கள் சேர்த்த வெற்றிலை தருவது இவர்களது முக்கிய வழக்கம். இது இல்லாமல் விருந்து நிறைவு பெறுவதில்லை. இவர்களுடைய பாரம்பரிய உணவுகளில் மிகவும் முக்கியமானது பாகரா பைங்கன்.

தேவையான பொருட்கள்:

கத்தரிக்காய் (சிறியது) - 10
வெங்காயம் - 2
மல்லித்தூள், சீரகத் தூள் - 1 ஸ்பூன்
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
புளி - கோலி அளவு
உப்பு - தேவையான அளவு

வறுத்து அரைப்பதற்கு:

எள் - 1 ஸ்பூன்
வேர்க்கடலை - 50 கிராம்
முந்திரிப்பருப்பு - 5
இஞ்சி - சிறு துண்டு
பூண்டு - 5
தேங்காய் துருவல் - 1 கப்

* எள், வேர்க்கடலையை எண்ணெய் விடாமல் நன்கு பொரியும்படி வறுத்துக்கொண்டு, அதோடு முந்திரிப்பருப்பு, இஞ்சி, பூண்டு, தேங்காய் துருவல் சேர்த்து, தண்­ணீர் விட்டு நன்கு மசிய அரைத்துக் கொள்ளவும்.

தாளிப்பதற்கு:

* கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை, விரும்பினால் சிறிதளவு வெங்காய விதை சேர்க்கவும்.

செய்முறை:

* முழு கத்தரிக்காயை நீள வாக்கில் நான்காக கீறிவிடவும், தனியாக எடுக்க வேண்டாம்.

* கடாயில் 4 ஸ்பூன் எண்ணெய் விட்டு கத்தரிக்காயை வதக்கவும்.

* நன்கு வதங்கியதும் தனியாக வைத்துக் கொண்டு மீதமிருக்கும் எண்ணையில், கடுகு, வெந்தயம், வெங்காய விதை தாளித்து அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

* அதில் அரைத்த விழுது சேர்த்துக் கலந்து விடவும்.

* தேவையானால் சிறிதளவு தண்ணீ­ர் சேர்க்கவும்.

* பச்சை வாசனை போனவுடன் கரைத்து வைத்துள்ள புளியைப் போட்டுக் கொதிக்கவிடவும்.

* அதில் மஞ்சள் தூள், சீரகத்தூள், மல்லித்தூள், மிளகாய் தூள் சேர்த்துக் கலந்து விடவும்.

* கொதித்த பின் வதக்கி வைத்துள்ள கத்தரிக்காய், மல்லித்தழை சேர்த்து மூடி வைத்து 5 நிமிடம் வேக விடவும்.

* கிரேவி போல் கெட்டியானவுடன் இறக்கி விடவும்.

* இது பூரி, சப்பாத்தி, புலாவ் போன்றவற்றிற்கு மேட்சாக இருக்கும்.