Author Topic: ~ அகத்திகீரையின் மகத்துவம்! ~  (Read 472 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226420
  • Total likes: 28830
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
அகத்திகீரையின் மகத்துவம்!



துக்க வீடுகளில் உள்ளவர்களுக்கு அகத்திக் கீரையை ரசம்வைத்துக் கொடுக்கும் வழக்கம் இன்றைக்கும் உண்டு. காரணம், இறப்பின் வருத்தத்தில் சாப்பிடாமல்-கிடப்பவர்களின் உடல் பாதிப்புக்கு ஆளாகிவிடக் கூடாது என்பதால்!
உடலின் உள் காயங்களை ஆற்றுதல், குடற்புழு நீக்கம், மலச்சிக்கலைப் போக்குவது, விஷ முறிவு போன்ற ஏராளமான மருத்துவக் குணங்களை வேர், இலை, பட்டை, பூ என்று பல பாகங்களிலும் தன்னகத்தே வைத்திருக்கும் உன்னதமான மரம் அகத்தி!
அகத்தி மரம் தை முதல் மாசி மாதம் வரையிலும் பூக்கும் இயல்பு உடையது. தஞ்சாவூரைச் சேர்ந்த சித்த மருத்துவர் பி.சரஸ்வதி, அகத்தியின் பலவிதமான மருத்துவக் குணங்களை விவரிக்கிறார்.
''அகத்தி 20 முதல் 30 அடி வரை வளரக்கூடியது. பூவின் நிறத்தைப் பொருத்து செவ்வகத்தி மற்றும் வெள்ளை அகத்தி என்று அகத்தியை இரண்டு வகைகளாகப் பிரிக்கிறார்கள்.

இலை: அகத்தி இலையைக் கீரை என்பார்கள். இதன் சாற்றை எடுத்து, ஒன்று அல்லது இரண்டு துளி மூக்கில்விட்டால் காய்ச்சல் குணமாகும். அகத்தி இலையிலும் பூவிலும் அதிக அளவில் வைட்டமின் ஏ சத்து உள்ளது. நெய்யை நன்றாகக் காய்ச்சி அதில் அகத்தி இலைகளை இட்டு நன்கு வெந்த பிறகு வடிகட்டிப் பருகச் செய்தால், மாலைக்கண் நோய் குணமாகும். இலையை அரைத்துப் பசைபோல் செய்து காயங்களுக்குக் கட்டலாம். புண்கள் விரைவாக ஆறும். சீழ் பிடிக்காது. வயிற்றில் உள்ள புழுக்களை நீக்கும் குணம் அகத்திக் கீரைக்கு உண்டு. செவ்வகத்தி இலை குளிர்ச்சியை உண்டாக்கும். ரத்தத்தைச் சுத்திகரிக்கும் திறன்கொண்டது. தேகம் குளிர்ச்சி அடையும். மலச்சிக்கல் இருக்காது. சிறுநீர் பிரிவது எளிதாக இருக்கும்.
பூ: அகத்திப் பூச்சாற்றைக் கண்ணில் பிழிய, கண் வலி குணமாகும்.
மரப்பட்டை: குடிநீரில் இட்டுக் குடித்துவந்தால், அம்மைக் காய்ச்சல் தீரும்.
வேர்ப் பட்டை: அகத்தி வேர்ப் பட்டையில் சாப்போனின், டானின், ட்ரைடெர்பின் போன்ற பல வேதிப் பொருட்கள் உள்ளன. வேர்ப் பட்டையை நீரில் இட்டுக் குடித்து வந்தால், மேகம், ஆண் குறியில் ஏற்படும் எரிச்சல் மற்றும் ஐம்பொறிகளில் ஏற்படும் அனைத்து வகையான எரிச்சல்களையும் குணமாக்கும்.
அகத்திக் கீரையை நன்கு வேகவைத்து உண்ண வேண்டும். இல்லாவிட்டால், வாயுவை உண்டாக்கிவிடும். மேலும் தினசரி அதிக அளவில் உண்டால், வயிற்றுக் கடுப்பையும் ஏற்படுத்திவிடும். இந்தக் கீரைக்கு மருந்துகளின் செயல்பாடுகளைத் தடுக்கும் இயல்பு உண்டு. எனவே, பிற மருந்துகளை உட்கொள்ளும் நோயாளிகள் அகத்தியைத் தவிர்ப்பது நல்லது.