கோழி - கால் கிலோ
ஃப்ரெஷ் மஞ்சள் - ஒரு அங்குலத் துண்டு
தனியா விதை - 2 தேக்கரண்டி
பூண்டு - 3 பல்
இஞ்சி - ஒரு அங்குலத் துண்டு
லெங்குவாஸ் (ஃப்ரெஷ் சித்தரத்தை) - 2 அங்குலத் துண்டு
எலுமிச்சை இலை - 2
சலாம் இலை - ஒன்று (கிடைக்கவில்லையெனில் தவிர்க்கலாம்)
எண்ணெய் - பொரிப்பதற்கு
சர்க்கரை (சீனி) - கால் தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
சம்பால் செய்ய:
பழுத்த மிளகாய் - 10
பச்சை மிளகாய் - 5
பூண்டு - ஒரு பல்
தக்காளி - ஒன்று
சர்க்கரை (சீனி) - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
பூண்டு, மஞ்சள் மற்றும் தனியா விதையை அரைத்துக் கொள்ளவும். (மையாக அரைக்க வேண்டிய அவசியம் இல்லை).
அரைத்த கலவையுடன் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி, லெங்குவாஸ், இஞ்சி, எலுமிச்சை இலை, சலாம் இலை, உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து கொதிக்கவிடவும். கொதி வந்ததும் கோழித் துண்டுகளைச் சேர்த்து வேகவிடவும். (லெங்குவாஸ், இஞ்சி ஆகியவற்றை லேசாக இடித்தும், எலுமிச்சை, சலாம் இலைகளை கையால் கசக்கியும் சேர்க்கவும்).
வெந்த கோழித் துண்டுகளை தனியாக எடுத்து, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்துக் கொள்ளவும்.
சம்பால் செய்ய கொடுத்துள்ள பொருட்களை கொரகொரப்பாக அரைக்கவும்.
கோழி பொரித்த எண்ணெயில் அரைத்த மிளகாய் கலவையைச் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். (ஒரு மேசைக்கரண்டி எண்ணெயே போதுமானது).
பொரித்தெடுத்த கோழித்துண்டுகள் மீது சம்பாலை வைத்து வெள்ளரித் துண்டுகள் மற்றும் சாதத்துடன் பரிமாறவும். கோழி வேகவைத்த தண்ணீரை வடிகட்டி சூப்பாக பருகலாம்.
அயாம் பெஞ்ஞெத் (Ayam Penyet) இந்தோனேஷியாவில் மிகவும் பிரபலமான உணவு வகை. சம்பாலின் காரம் தான் இதற்குச் சுவையே. மிக்ஸியில் அரைப்பதைவிட, கல்லில் அரைப்பதே அதிக ருசியுடன் இருக்கும். சம்பால் செய்யும் போது சிறிதளவு பெலாச்சான் எனப்படும் ஷ்ரிம்ப் பேஸ்ட் சேர்ப்பார்கள்.
நறுக்கிய முட்டைக்கோஸ் மற்றும் டாவுன் கெமாங்கி (Daun Kemangi) என்னும் ஒரு வகை துளசி இலைகளையும் இதனுடன் சேர்த்து பரிமாறுவார்கள். உடல் துர்நாற்றத்தை அகற்றும் தன்மை அதற்கு உண்டு எனச் சொல்வார்கள். நம் ஊரிலும் கிடைக்கும். சரியான பெயர் தெரியவில்லை. Lemon Basil என கூகுளில் தேடினால் இதன் படங்கள் கிடைக்கும்.