தொடர்ந்து சில வாரங்கள் ஜென் கவிதைகளாக வாசித்துக் கொண்டிருந்தேன். அப்போது ஜென் கவிதை குறித்து என் மனதில் தோன்றிய குறிப்புகள் இவை.
இரவெல்லாம் தூங்க முடியவில்லை என்னால்
என் படுக்கையில்
நிலவொளி கிடந்ததால்
நான் கேட்டுக் கொண்டேயிருந்தேன்
ஒரு அழைக்கும் குரலை
எங்கிருந்தோ
ஆம் என பதில் தரவேயில்லை எதுவும்.
கவி : ஸியி. சீனா. நாடோடி பாடல்
இந்த பாடலில் நிலவு முன் காணாத ஒரு நெகிழ்வு தன்மையும் உடனடியும் கொள்கிறது. அதே நேரம் நிலா வெறும் காண்பொருள் அல்ல. அது நம்மோடு கலந்துவிட்ட இயக்கமாக மாறுகிறது. கவிதையின் குரலான நான் நிலவை அனுமதிப்பதின் வழியே அவன் நித்யமான இயக்கத்திற்கு தன்னை மாற்றிக் கொள்கிறான்
இன்னொரு ஜென் கவிதை.
நான் நின்று போகவும் மாட்டேன்
பள்ளத்தாக்கின் சிற்றோடை முன்பாக
என் நிழல்
உலகினுள் பாய்ந்தோடி விடுமோ
என்ற பயத்தில்.
இந்த கவிதையில் நிழல் பாய்ந்தோடி செல்கிறது என்ற குறிப்பு முன்வைக்கபடுகிறது. நிழல் குறித்த நமது பொதுபுத்தி அது நம்மை பின்தொடர்கிறது என்பது மட்டுமே, இந்த கவிதையில் வரும் நிழல் இயற்கையின் ஒரு பகுதி என்று சுட்டப்படுகிறது. அது பள்ளதாக்கின் சிற்றோடையை கண்டதும் ஒன்றிணைய பாய்கிறது,
வாழ்வின் அன்றாடஅனுபவங்களால் சலிப்புற்ற மனது இயற்கையை பிளாஸ்டிக் போல நினைத்து பழகுகிறது. அதிலிருந்து நம்மை விடுவித்து அருவியின் அடியில் ஒண்டி நிற்கும் தவளையின் வியப்பை போல இயற்கையை காண அனுமதிக்கிறது ஜென் கவிதைகள்.
இதற்காகவே அதை பலமுறை வாசிக்க வேண்டியிருக்கிறது.
தவறாக எழுதி இருந்தால் மன்னிக்கவும், தனிமை ஒரு மனிதனை சிந்திக்க வைக்கிறது புத்தரை போல...