உப்பு உருண்டை (கிராமத்து சமையல்)
இட்லி அரிசி (அ) புழுங்கல் அரிசி - ஒரு கப்
தேங்காய் - 1/4 கப்
வெங்காயம் - ஒன்று
மிளகாய் வற்றல் - 4
கடுகு - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
உளுந்து - 2 தேக்கரண்டி
கடலை பருப்பு - 2 தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிது (விரும்பினால்)
கறிவேப்பிலை - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
ஒரு பாத்திரத்தில் அரிசியை போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 4 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய அரிசியுடன் உப்பு, தேங்காய் துருவல் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம் போட்டு தாளித்து உளுந்து, கடலை பருப்பு, மிளகாய் வற்றல், பெருங்காயம் போட்டு சிவக்க விடவும்.
அதனுடன் பொடியாக நறுக்கின வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி விடவும்.
இதில் அரைத்த மாவை சேர்த்து கிளறி விடவும். மாவு உருண்டை பிடிக்கும் பதத்திற்கு கெட்டியாக ஆனதும் இறக்கி வைக்கவும்.
இந்த கலவை ஆறியதும் சிறு உருண்டையாக பிடித்து இட்லி தட்டில் வைத்து இட்லியை போல் வேக வைத்து எடுக்கவும். உருண்டைகள் வேக அதன் அளவை பொறுத்து 10 - 15 நிமிடங்கள் ஆகும்.
சுவையான உப்பு உருண்டை தயார். வேர்கடலை சட்னி அல்லது காரமான சட்னியுடன் சாப்பிட ருசியாக இருக்கும். தேங்காய் சேர்க்காமலும் செய்யலாம். கூட்டாஞ்சோறு பகுதியின் மூலம் தனது குறிப்புகளை பகிர்ந்துக் கொண்டுள்ள திருமதி. வனிதாவில்வராணி முருகன் அவர்கள் அறுசுவை நேயர்களுக்காக வழங்கியுள்ள குறிப்பு இது.