Author Topic: ~ 30 வகை தோசை! செய்முறை ~  (Read 2386 times)

Online MysteRy

Re: ~ 30 வகை தோசை! செய்முறை ~
« Reply #15 on: August 03, 2013, 02:40:12 PM »
ஸ்பெஷல் தோசை



தேவையானவை:புழுங்கலரிசி - 1 கப், பச்சரிசி - 1 கப், தோல் உளுந்து அல்லது வெள்ளை உளுத்தம்பருப்பு - 1 கப், காய்ந்த மிளகாய் - 4, மிளகு - 1 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, எண்ணெய் + நெய் - தேவையான அளவு.


செய்முறை: புழுங்கலரிசியையும், பருப்பையும் தனித்தனியாக கழுவி ஊறவைத்து தோசை மாவு போல் ஆட்டி எடுக்கவும். பச்சரிசியை கழுவி நீர் வடியவிட்டு மிக்ஸியில் திரித்து சலிக்கவும். மிளகு, உப்பு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை விழுதாக அரைக்கவும். எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து வைத்து மறுநாள் தோசைகளாக ஊற்றி எடுக்கவும். தனியாக சாப்பிடுவதற்கு மிகவும் ருசியானது.

Online MysteRy

Re: ~ 30 வகை தோசை! செய்முறை ~
« Reply #16 on: August 03, 2013, 02:41:52 PM »
வெற்றிலை தோசை



தேவையானவை:ஆலு தோசைக்கான மாவு - 1 கப், வெற்றிலை - சற்று அகலமானது - 4, எலுமிச்சம்பழச் சாறு - 2 டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு.


செய்முறை: எலுமிச்சம்பழச் சாற்றை, கால் கப் நீரில் கலந்துகொள்ளவும். வெற்றிலையை எலுமிச்சம்பழச் சாறு கலந்த நீரில் நனைத்துக் கொள்ளவும். (இது, வெற்றிலையின் நிறம் மாறாமல் இருக்க உதவும்). பின்னர் மாவில் நனைத்து வைத்துக் கொள்ளவும். தோசைக்கல்லில் மாவை மெல்லிய தோசைகளாக ஊற்றி, அதன் நடுவில் மாவில் நனைத்த வெற்றிலையை வைத்து சுற்றிவர எண்ணெய்விட்டு வெந்ததும் திருப்பிவிட்டு எடுத்து விடவும்.
சளி, இருமல் இருப்பவர்களுக்கு ஊற்றித் தரலாம். விருந்துகளில் பரிமாறுவதற்கும் இது வித்தியாசமான தோசை.

Online MysteRy

Re: ~ 30 வகை தோசை! செய்முறை ~
« Reply #17 on: August 03, 2013, 02:43:30 PM »
பாசிப்பருப்பு தோசை



தேவையானவை:பாசிப்பருப்பு - 1 கப், பச்சரிசி - கால் கப், தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, சின்ன வெங்காயம் - 10, பெருங்காயம் - 1 சிட்டிகை.


செய்முறை: அரிசி + பருப்பை கழுவி 2 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு மிளகாய், பெருங்காயம், உப்பை சேர்த்து அரைக்கவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். அத்துடன் ஊறிய பருப்பையும், அரிசியையும் பெருபெருவென ஆட்டி எடுத்து அத்துடன் தேங்காய், வெங்காயம் சேர்த்து கலக்கி மெல்லிய தோசைகளாக ஊற்றி திருப்பிவிட்டு எடுக்கவும்.

Online MysteRy

Re: ~ 30 வகை தோசை! செய்முறை ~
« Reply #18 on: August 03, 2013, 02:45:41 PM »
வெஜிடபுள் தோசை



தேவையானவை:ஆலு தோசைக்கான மாவு - 2 கப், கேரட் - 1, பீன்ஸ் - 2, பட்டாணி (உரித்தது) - 2 டேபிள்ஸ்பூன், பெரிய வெங்காயம் - 1, பச்சை மிளகாய் - 2, குடமிளகாய் - 1, தக்காளி - 1, எண்ணெய் - தேவையான அளவு.


தாளிக்க:கடுகு - கால் டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், மல்லித்தழை (பொடியாக நறுக்கியது) அல்லது பொடியாக நறுக்கிய வெங்காயத் தாள் - கால் கப்.


செய்முறை: கேரட்டைக் கழுவி துருவிக் கொள்ளவும். வெங்காயம், பீன்ஸைப் பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். குடமிளகாயையும் தக்காளியையும் மெல்லிய அரை வட்டங்களாக நறுக்கவும். வாணலியில் 4 டீஸ்பூன் எண்ணெய் விட்டு, சூடானதும் தாளிப்பவற்றை தாளித்து சிவந்ததும், கேரட், பீன்ஸ், பட்டாணி, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி தோசை மாவுடன் சேர்த்து கலக்கவும். பின்னர் தோசைக்கல்லில் ஊத்தப்பம் போல் ஊற்றி (சற்று கனமாக), அதன் மேல் நறுக்கிய அரை வளையங்களான தக்காளி குடமிளகாயை பதித்து, மேலே மல்லித்தழை அல்லது வெங்காயத் தாள் தூவவும். சுற்றிவர எண்ணெய்விட்டு மூடி ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி விட்டு எண்ணெய் ஊற்றி, வெந்ததும் எடுத்துவிடவும். பார்ப்பதற்கு இது வெஜிடபுள் பீட்ஸா போல இருக்கும். தொட்டுக்கொள்ள தக்காளி சாஸ் வெகு ஜோர்!

Online MysteRy

Re: ~ 30 வகை தோசை! செய்முறை ~
« Reply #19 on: August 03, 2013, 02:47:18 PM »
பீட்ரூட் ராகி தோசை



தேவையானவை:கேழ்வரகு மாவு - 1 கப், உப்பு - தேவைக்கேற்ப, ஆட்டிய உளுத்தம்பருப்பு மாவு - கால் கப், துருவிய பீட்ரூட் - கால் கப், பச்சை மிளகாய் - 3, எண்ணெய் - தாளிக்க + தோசை சுடுவதற்கு தேவையான அளவு


செய்முறை: ஆட்டிய உளுத்தம்பருப்பு மாவு, உப்பு, ராகி மாவு சேர்த்து கலந்து, 10 மணி நேரம் கழித்து தோசை மாவு பக்குவத்தில் கரைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, அதில் பச்சை மிளகாய், பீட்ரூட் சேர்த்து நன்கு வதக்கவும். வதக்கிய பீட்ரூட்டை மாவில் சேர்த்து கலக்கி, மெல்லிய தோசைகளாக ஊற்றி எண்ணெய் விட்டு, வெந்ததும் திருப்பி விட்டு மீண்டும் சிறிது எண்ணெய் விட்டு வேக வைத்து எடுக்கவும். சத்து மிகுந்த தோசை இது.

Online MysteRy

Re: ~ 30 வகை தோசை! செய்முறை ~
« Reply #20 on: August 03, 2013, 02:48:55 PM »
செட் தோசை



தேவையானவை:பச்சரிசி - 1 கப், புழுங்கலரிசி - 1 கப், உளுத்தம்பருப்பு - அரை கப், வடித்த பச்சரிசி சாதம் - 1 கைப்பிடி, உப்பு - தேவைக்கேற்ப, மஞ்சள்தூள் அல்லது கேசரி பவுடர் - 1 சிட்டிகை, எண்ணெய் - தேவையான அளவு.


செய்முறை: அரிசி + பருப்பை கழுவி ஒன்றாக ஊற வைத்து (3 மணி நேரம்), சாதத்துடன் சேர்த்து மைய ஆட்டவும். பின் உப்பு கலந்துவைத்து, பொங்கிய பின் (10 மணி நேரம் கழித்து) மறுநாள் காலையில் அத்துடன் மஞ்சள்தூள் அல்லது கேசரி பவுடர் சேர்த்துக் கலக்கவும். தோசைக்கல்லில் ஊத்தப்பமாக ஊற்றி இருபுறமும் எண்ணெய் ஊற்றி வேகவிட்டு எடுக்கவும். இதற்கு காரச் சட்னி மிகவும் சுவை கொடுக்கும். சென்னை போன்ற நகர்களில், ‘செட்தோசை-வடகறி’ என்பது டிபன்களில் மிகவும் பிரபலமான ஜோடி.

Online MysteRy

Re: ~ 30 வகை தோசை! செய்முறை ~
« Reply #21 on: August 03, 2013, 02:50:40 PM »
முள்ளுமுருங்கை இலை தோசை



தேவையானவை:பச்சரிசி - 1 கப், முள்ளுமுருங்கை இலை - 6, பச்சை மிளகாய் - 2, மிளகு - 10, சீரகம் - அரை டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, எண்ணெய் + நெய் - தேவையான அளவு, சின்ன வெங்காயம் - 10.


செய்முறை: அரிசியைக் கழுவி, 2 மணி நேரம் ஊற வைக்கவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். முள்ளுமுருங்கை இலையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாய், உப்பு, மிளகு, சீரகம், இலை, அரிசி ஆகியவற்றை நன்கு ஆட்டவும். பின் அத்துடன் வெங்காயத்தை போட்டு கலக்கவும். பின் மெல்லிய ஊத்தப்பம் போல் ஊற்றி, சுற்றிவர நெய் விட்டு வேகவைத்து பின் திருப்பிவிட்டு அதே மாதிரி எண்ணெய் + நெய் ஊற்றி வெந்ததும் எடுக்கவும்.

Online MysteRy

Re: ~ 30 வகை தோசை! செய்முறை ~
« Reply #22 on: August 03, 2013, 02:52:25 PM »
பூண்டு புதினா தோசை



தேவையானவை:ஆலு தோசை மாவு - 2 கப், பூண்டு - 20 பற்கள், புதினா (கழுவி, பொடியாக நறுக்கியது) - 2 டேபிள்ஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் - 1, எண்ணெய் - தேவைக்கேற்ப.


செய்முறை:   பூண்டுப் பற்களை தோலுரித்து, நீளவாக்கில் இரண்டாக நறுக்கவும். மிளகாயைப் பொடியாக நறுக்கவும். 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு பூண்டை அரைப்பதமாக வதக்கி எடுக்கவும். 1 டீஸ்பூன் எண்ணெயில் புதினாவை லேசாக வதக்கி வைத்துக்கொள்ளவும். மாவை ஊத்தப்பமாக ஊற்றி அதில் சீரகம் சிறிது தேய்த்துப் போட்டு, அதன் மேல் வதக்கிய பூண்டு + புதினாவை பதிக்கவும். ஒவ்வொரு ஊத்தப்பத்துக்கும் 6-லிருந்து 7 துண்டு பூண்டு பதிக்கலாம். எண்ணெய் ஊற்றி வேகவிட்டு, பின் திருப்பிபோட்டு மேலும் சிறிது எண்ணெய் விட்டு வேகவைத்து எடுக்கவும். தக்காளிச் சட்னியுடன் சேர்த்து இதை சாப்பிட்டால், சுவை அமோகம்.

Online MysteRy

Re: ~ 30 வகை தோசை! செய்முறை ~
« Reply #23 on: August 03, 2013, 02:54:39 PM »
துவரம் பருப்பு தோசை



தேவையானவை: புழுங்கலரிசி - 1 கப், துவரம்பருப்பு - அரை கப், உப்பு - தேவையான அளவு, பச்சை மிளகாய் - 2, தேங்காய் துருவல் - 1 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு.


செய்முறை: அரிசி, பருப்பை தனித்தனியாக ஊறவைத்து உப்பு சேர்த்து ஆட்டவும். பின் அதில் நறுக்கிய பச்சை மிளகாய், தேங்காய் சேர்த்து கலக்கி, உடனே மெல்லிய தோசைகளாக ஊற்றவும். சுற்றிலும் எண்ணெய் ஊற்றி, வெந்ததும் திருப்பிவிட்டு மேலும் சிறிது எண்ணெய் விட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும். இதற்கு குருமா சுவை கொடுக்கும்.


குறிப்பு:காரம் அதிகம் விரும்புவோர் பச்சை மிளகாய்க்கு பதில் 6 காய்ந்த மிளகாய்களை அரைத்துப் போடலாம்.

Online MysteRy

Re: ~ 30 வகை தோசை! செய்முறை ~
« Reply #24 on: August 03, 2013, 02:56:20 PM »
ரவா தோசை



தேவையானவை: பச்சரிசி ஆட்டியது - 1 கப், ரவை - அரை கப், மைதா மாவு - அரை கப், உப்பு - தேவைக்கேற்ப. தாளிக்க: எண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், மிளகு - 10 உடைத்தது, சீரகம் - அரை டீஸ்பூன், கறி வேப்பிலை - 1 ஆர்க்கு, முந்திரிப்பருப்பு - 6, மல்லித்தழை (பொடியாக நறுக்கியது) - அரை கப்.


செய்முறை: ரவையை சிறிது தண்ணீர் சேர்த்து ஊறவைக்கவும். மல்லித்தழை, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கவும். முந்திரிப்பருப்பை பொடியாக நறுக்கி, எண்ணெயில் வறுத்து வைத்துக்கொள்ளவும். மைதா மாவை சிறிது தண்ணீர் விட்டு கரைத்துக் கொண்டு, அத்துடன் ஆட்டிய பச்சரிசி மாவு, ஊறிய ரவை, உப்பு ஆகியவற்றை சேர்த்து ஒன்றாகக் கலந்து வைக்கவும்.
பின்னர் வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் தாளிப்பவற்றை போட்டு தாளித்து மாவில் கொட்டவும். வறுத்த முந்திரியையும், கழுவிய மல்லித்தழையையும் மாவில் கலந்து எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து கலக்கி சூடான தோசைக்கல்லில், மாவைக் கரண்டியில் எடுத்து, அள்ளித் தெளித்த மாதிரி மிக மெல்லிய தோசைகளாக ஊற்றி, சுற்றி வர எண்ணெய் விட்டு மூடவும். வெந்ததும் மறுபுறம் திருப்பி விட்டு மொறுமொறுவென வேக வைத்தெடுக்கவும்.
விருப்பமுள்ளவர்கள், ரவா தோசைக்கு சின்ன வெங்காயம் பொடியாக நறுக்கிச் சேர்க்கலாம். இதற்கு பூண்டு, மிளகாய்ச் சட்னி தொட்டுச் சாப்பிட்டால் சூப்பர் டேஸ்ட்!

Online MysteRy

Re: ~ 30 வகை தோசை! செய்முறை ~
« Reply #25 on: August 03, 2013, 02:58:02 PM »
மெதுகீரை தோசை



தேவையானவை:புழுங்கலரிசி - 1 கப், உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், அவல் - கால் கப், மோர் - 2 டம்ளர், உப்பு - தேவைக்கேற்ப, எண்ணெய் - தேவையானது, நச்சு கெட்ட (லெச்சகெட்ட) கீரை - 30 இலைகள், பச்சை மிளகாய் - 2, சின்ன வெங்காயம் - 15, பாசிப்பருப்பு - கால் கப், உப்பு - தேவைக் கேற்ப, கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன், எண்ணெய் - 4 டீஸ்பூன்.


செய்முறை: புழுங்கலரிசி முதல் அவல் வரையிலான பொருள்களை 6-லிருந்து 8 மணி நேரம் வரை மோரில் ஊறவைத்து ஆட்டி, உப்பு சேர்த்து சிறிது புளிக்க விடவும். கீரையின் நடுவில் உள்ள நரம்பை நீக்கி பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயை நடுவில் வகுந்துகொள்ளவும். சின்ன வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். பாசிப்பருப்பை அரைப்பதமாக வேகவிட்டு, நீரை வடிக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும், தாளிப்பவற்றை போட்டு தாளிக்கவும். பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய், கீரை சேர்த்து கிளறி, வெந்ததும் உப்பு சேர்க்கவும். கடைசியாக, வேகவைத்த பாசிப்பருப்பையும் சேர்த்து கிளறி எடுக்கவும்.
தோசை மாவை வட்டமாக மெல்லிய ஊத்தப்பமாக ஊற்றி சுற்றிவர எண்ணெய் விட்டு மூடவும். அடிப்புறம் வெந்ததும் மூடியைத் திறந்து அதன் மேல் கீரையை பரப்பிவிட்டு தோசைக் கரண்டியால் அழுத்தி விட்டு மறுபுறம் திருப்பாமல் எடுத்து பரிமாறவும். இந்தக் கீரை தோசை உடல்வலிக்கு நிவாரணம் தரும்.

Online MysteRy

Re: ~ 30 வகை தோசை! செய்முறை ~
« Reply #26 on: August 03, 2013, 02:59:40 PM »
சோயா தோசை



தேவையானவை:புழுங்கலரிசி - 1 கப், காய்ந்த சோயா - 2 டேபிள்ஸ்பூன், உளுத்தம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, எண்ணெய் - தேவையான அளவு, சின்ன வெங்காயம் - 8, பச்சை மிளகாய் - 2.


செய்முறை: அரிசி, சோயா, உளுத்தம்பருப்பை கழுவி தனித்தனியாக 3-4 மணிநேரம் ஊறவைத்து, தனித்தனியாக நன்றாக ஆட்டி ஒன்று சேர்த்து உப்புக் கலக்கிவைக்கவும். பச்சை மிளகாய், வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். மாவு ஆட்டிவைத்த 10 மணி நேரம் கழித்து, அதில் நறுக்கிய வெங்காயம், மிளகாய் கலந்து மிக மெல்லிய தோசைகளாக ஊற்றி இருபுறமும் திருப்பிவிட்டு எண்ணெய் விட்டு, மொறுமொறுவென வேக வைத்து எடுக்கவும்.

Online MysteRy

Re: ~ 30 வகை தோசை! செய்முறை ~
« Reply #27 on: August 03, 2013, 03:01:11 PM »
ஜவ்வரிசி தோசை



தேவையானவை:புழுங்கலரிசி - ஒன்றரை கப், ஜவ்வரிசி (மாவு அரிசி) - 1 கப், சின்ன வெங்காயம் - 10, பச்சை மிளகாய் - 4, கடுகு - அரை டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, எண்ணெய் - தேவையான அளவு.


செய்முறை: அரிசியை கழுவி, 2 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். ஜவ்வரிசியைக் கழுவி, 4 மணி நேரம் தயிரில் ஊறவைக்கவும். வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். முதலில் அரிசியை ஆட்டவும். பின் ஜவ்வரிசியையும் ஆட்டி எடுக்கவும். வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, சூடு வந்ததும் கடுகு தாளித்து பின்னர் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அதோடு உப்பு சேர்த்து மாவில் கலந்து ரவா தோசை போல் ஊற்றி இருபுறமும் மொறுமொறுவென வேகவைத்து எடுக்கவும்.

Online MysteRy

Re: ~ 30 வகை தோசை! செய்முறை ~
« Reply #28 on: August 03, 2013, 03:02:48 PM »
கொத்தமல்லி தோசை



தேவையானவை: புழுங்கலரிசி - 1 கப், உளுத்தம்பருப்பு - 1 கைப்பிடி, மல்லித்தழை (பொடியாக நறுக்கியது) - அரை கப், மிளகு (உடைத்தது) - அரை டீஸ்பூன், இஞ்சி (துருவியது) - 1 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, எண்ணெய் - தேவையான அளவு. தாளிக்க: சீரகம் - அரை டீஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன்.


செய்முறை: அரிசி, உளுத்தம்பருப்பை 2 மணி நேரம் ஊறவைத்து, ஆட்டவும். மல்லித்தழையை பொடியாக நறுக்கவும். வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய்விட்டு, சூடானதும் தாளிப்பவற்றை போட்டு தாளித்து, இஞ்சியை சேர்த்து வதக்கவும். அத்துடன் ஆட்டிய மாவு, உப்பு, மல்லித்தழை, தாளித்தவை ஆகியவற்றை ஒன்று சேர்த்து கலந்து ரவா தோசைபோல் ஊற்றி இருபுறமும் மொறுமொறுப்பாக வெந்ததும் எடுத்து தேங்காய்ச் சட்னியுடன் பரிமாறவும்.

Online MysteRy

Re: ~ 30 வகை தோசை! செய்முறை ~
« Reply #29 on: August 03, 2013, 03:04:24 PM »
டிரை ஃப்ரூட் தோசை



தேவையானவை: புழுங்கலரிசி - 1 கப், உளுத்தம்பருப்பு - கால் கப், பெரிய கற்கண்டு (பொடித்தது) - 10 டேபிள்ஸ்பூன், பேரீச்சம்பழம் - 25, உலர் திராட்சை - 25, டூட்டி ஃப்ரூட்டி - 2 டேபிள்ஸ்பூன், தேன் - 5 டீஸ்பூன், முந்திரிப்பருப்பு - 30, எண்ணெய் - தேவையான அளவு.


செய்முறை: அரிசி, பருப்பை கழுவி, தனித்தனியே 2 மணி நேரம் ஊறவைக்கவும். பேரீச்சம்பழத்தை விதை நீக்கி, சிறு சதுரங்களாக நறுக்கவும். ஊறிய அரிசி, பருப்பை நைஸாக ஆட்டவும். ஒரு டீஸ்பூன் உப்பு சேர்த்து கலக்கி, 10 மணி நேரம் பொங்க விடவும். மறுநாள் காலையில், தோசை ஊற்றப் போகும்போது பொடித்த கற்கண்டை மாவில் கலக்கவும். பின்னர் தோசைக் கல்லில் இதை மெல்லிய தோசைகளாக ஊற்றி எண்ணெய் விட்டு வெந்ததும், கலந்து வைத்திருக்கும் பேரீச்சம்பழம், உலர் திராட்சை, டூட்டி ஃப்ரூட்டி, வறுத்த முந்திரிப்பருப்பு ஆகியவற்றில் சிறிது எடுத்து தோசையின் ஒரு பாதியில் பரப்பவும். அதன் மேல் அரை டீஸ்பூன் தேன் விட்டு, மறு பாதி தோசையால் மூடி, வெந்ததும் எடுத்து பரிமாறவும்.
அனைவரின் நாவையும் கொள்ளைகொள்ளும் இந்த தோசை, பள்ளிக் குழந்தைகளுக்கு பிடித்தமான ஸ்நாக்ஸ்.