மாசு மருவில்லாத, வழவழப்பான சருமம் இருப்பதையே அனைவரும் விரும்புவோம். மன அழுத்தமும், புறக்காரணிகளான மாசு, தூசு, அழுக்கு போன்றவையும் சருமத்தைப் பாதிப்பதோடு, சரும நலனையும் கெடுக்கும். பணி முடிந்து வீடு திரும்பியவுடன், குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவுதல், பனிக்கட்டியைக் கொண்டு முகத்தில் தேய்த்தல் போன்ற செயல்கள், களைப்பை நீக்கி உடனடியாகப் புத்துணர்வைக் கொடுக்கும். பனிக்கட்டியும், குளிர்ந்த நீரும் இரத்த ஓட்டத்தைத் தூண்டி, களைப்படைந்த சருமத்திற்கு தற்காலிகமான புத்துணர்வைக் கொடுக்கும். ஆனால் நாள் முழுதும் களைப்பு அடையும்படி பணிபுரிந்ததால், பொலிவிழந்து இருக்கும் சருமத்தை பளபளப்பாக பொலிவுடன் திகழச் செய்ய இதோ சில வழிமுறைகள்!!!
ஸ்கரப்
களைப்படைந்த சருமத்தைப் புத்துணர்வூட்டவும், பொலிவூட்டவும், மிகவும் விரைவான வழிகளில் ஒன்று, இறந்த செல்களை வெளியேற்றும் ஸ்கரப் ஆகும். இறந்த சரும செல்களை நீக்கவும், சருமத்தை புதியதாகவும், பளபளப்பாகவும் வெளிப்படுத்த இறந்த செல்களை வெளியேற்றுவது இன்றியமையாததாக இருக்கிறது. எனவே குறைந்தது வாரம் ஒரு முறை முகத்திற்கு ஸ்கரப் மற்றும் உடலுக்கு ஒரு மென்மையான ஸ்கரப்பர் பயன்படுத்தித் தேய்க்க வேண்டும்
அதிக அளவு தண்ணீர் குடிக்கவும்
தண்ணீர், உடலை ஆரோக்கியமாக மற்றும் சருமத்தை ஈரப்பதத்துடன் பராமரிப்பதற்கான சிறந்த தீர்வு. வேண்டுமெனில், சரும நிறம் பிரகாசமாவதற்கு, இளநீரைப் பயன்படுத்தலாம்.
ஈரப்பதமூட்டும் ஃபேஸ் மாஸ்க்
இறந்த சரும செல்களை நீக்கவும், சருமத்தை புதியதாகவும், பளபளப்பாகவும் வெளிப்படுத்தவும், ஈரப்பதமூட்டும் ஃபேஸ் மாஸ்க் போட வேண்டும். அதற்கு ஒரு கிண்ணத்தில், சிறிது தயிர் அல்லது பாலாடை எடுத்துக் கொண்டு, அதனுடன் சிறிது எலுமிச்சைச் சாறு பிழிந்துவிட்டு, சிறிது ஜாதிக்காய் தூள் மற்றும் மஞ்சள் தூள் சிறிது சேர்த்து, நன்கு கலக்கவும். இந்த கலவையை, முகத்தில் தடவி 5-10 நிமிடங்கள் வரை காத்திருக்கவும். அதன் பிறகு குளிர்ந்த நீர் கொண்டு கழுவவும். பின்னர் சருமத்தின் மீது பன்னீரைத் தடவினால், சருமம் பொலிவையும் இளமையையும் திரும்பப் பெறும்.
உணவில் உப்பினைக் குறைத்துக் கொள்ளவும்
உணவில் தேவைக்கு அதிகமாக உப்பினை சேர்த்துக் கொண்டு வந்தால், சில சமயங்களில் கண்கள் வீக்கம் அடையத் தொடங்கும். கண்களைச் சுற்றியுள்ள தசைகள் இறுக்கமடையவும், கண் இமைகள் சுருங்கவும் செய்யும். ஆகவே உணவில் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.
வெள்ளரி/உருளைக்கிழங்கு
கண்களைச் சுற்றியிருக்கும் கருவளையம் மற்றும் சுருக்கத்தைப் போக்குவதற்கு, உருளைக்கிழங்கு அல்லது வெள்ளரிக்காயை வட்டமாக வெட்டி, கண்கள் மீது வைத்து மூடி சிறிது நேரம் அமர வேண்டும். இதனால் கண்களில் இருக்கும் களைப்புகளும் நீங்கும்.
சரியான க்ரீம்களைத் தேர்ந்தெடுக்கவும்
இரவு நேரங்களில் சருமத்திற்கு ஈரப்பதமூட்டும் க்ரீம்களை பயன்படுத்தி தூங்கினால், சரும செல்கள் புத்துணர்ச்சியடைவதோடு, சருமத்தில் சுருக்கங்கள் நீங்கி, சருமம் மென்மையாக, பிரகாசமாக, பொலிவோடு இருக்கும்.
நல்ல தூக்கம்
இரவில் சரியான, முழுமையான, ஆழ்ந்த, உறக்கம் இல்லாதது கூட, களைப்படைந்த, பொலிவில்லாத சருமத்திற்குக் காரணமாக அமையலாம். ஆகவே இரவுகளில் சீரான, நல்ல உறக்கம், சருமத்தை ஆரோக்கியமாகவும், இளமையுடனும் திகழ செய்யும். ஏனெனில் ஆழ்ந்து உறங்கும் பொழுது உடல், மீள் உருவாக்க நடைமுறையை மேற்கொண்டு, ஆரோக்கியமான சரும செல்களை அதிக அளவில் உருவாக்கி, தோல் முதுமையடைவதையும், தோலில் சுருக்கங்கள் ஏற்படுவதையும் தடுக்கிறது.