பால் பொருட்களில் ஒன்றான பன்னீரில் நிறைய சத்துக்கள் உள்ளன. இத்தகைய பன்னீரை வைத்து நிறைய ரெசிபிக்கள் உள்ளன. பன்னீர் மிகவும் சுவை தரக்கூடிய ஒரு உணவுப் பொருள். அதிலும் பன்னீரை குடைமிளகாயுடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டால், அதன் சுவையே தனி தான். மேலும் குடைமிளகாய்க்கும், பன்னீருக்கும் என்ன உறவுமுறை உள்ளதோ தெரியவில்லை, பெரும்பாலான பன்னீர் ரெசிபியில் குடைமிளகாய் நிச்சயம் இருக்கும். இதுவரை இந்த இரண்டு பொருட்களை வைத்து, மசாலா, குழம்பு என்று தான் செய்திருப்போம்.
ஆனால் இப்போது சற்று எளிமையான முறையிலும், விரைவில் செய்யக்கூடியதுமான வறுவலை எப்படி செய்வதென்று பார்ப்போம். மேலும் இந்த வறுவல் மிகவும் காரசாரமான ஒன்று. இப்போது இத்தகைய மிளகு வறுவலை எவ்வாறு செய்வதென்று படிப்படியாகவும், தெளிவாகவும் கொடுத்துள்ளோம், அதைப் படித்து தெரிந்து கொண்டு, சமைத்து மகிழுங்கள்.
தேவையான பொருட்கள்:
பன்னீர் - 1 கப் (துண்டுகளாக்கப்பட்டது)
வெங்காயம் - 1 (நறுக்கியது)
குடைமிளகாய் - 1 கப் (துருவியது)
பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
மிளகு - 2 டீஸ்பூன் (வறுத்து பொடி செய்தது)
கறிவேப்பிலை - சிறிது
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
1 முதலில் மேலே குறிப்பிட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்.
2 ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் சிறிது ஊற்றி, பன்னீரை போட்டு, சிறிது நேரம் வறுத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
3 அதே வாணலியில் சிறிது எண்ணெய் சேர்த்து, அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
4 பின்னர் அத்துடன் வறுத்து வைத்துள்ள பன்னீர் மற்றும் உப்பு சேர்த்து, நன்கு வதக்க வேண்டும்.
5 பின்பு மிளகுப் பொடியைத் தூவி, அதில் போட்ட பொருட்கள் அனைத்தும் ஒன்று சேர கிளற வேண்டும்.
6 அனைத்தும் ஒன்று சேர்ந்ததும், அத்துடன் துருவி வைத்துள்ள குடைமிளகாயை சேர்த்து, நன்கு 2 நிமிடம் பிரட்டி, இறக்க வேண்டும்.
7 அதே சமயம், மற்றொரு அடுப்பில் சிறு வாணலியை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, கீறி வைத்துள்ள பச்சை மிளகாயை சேர்த்து வதக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
8 இப்போது சுவையான பன்னீர் குடைமிளகாய் மிளகு வறுவல் ரெடி!!! இதன் மேல் பொரித்து வைத்துள்ள பச்சை மிளகாயை வைத்து அலங்கரித்து, பரிமாற வேண்டும்.