மீன்களில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் உள்ளது. எனவே அடிக்கடி மீனை சாப்பிட்டால், உடல் நன்கு ஆரோக்கியமாக இருக்கும். அதிலும் குறிப்பாக, சால்மன், கானாங்கெளுத்தி, மத்தி போன்றவை உடலுக்கு மிகவும் சிறப்பானது.
இப்போது அந்த மீன்களில் ஒன்றான மத்தி மீனை வைத்து, கேரளா ஸ்டைலில் எப்படி வறுவல் செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
மத்தி மீன் - 1/2 கிலோ
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
சோம்பு - 1/2 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 3 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
தயிர் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் மீனை நன்கு சுத்தம் செய்து, கழுவி வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து காயந்ததும், அதில் மிளகு, சீரகம், சோம்பு போன்றவற்றை போட்டு வறுத்துக் கொள்ள வேண்டும்.
பின் அதனை குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு, நன்கு நைஸாக அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
அடுத்து ஒரு பாத்திரத்தில் அரைத்த பொடி, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், எலுமிச்சை சாறு, தயிர், உப்பு சேர்த்து கிளறி, அதனை கழுவிய மீனில் நன்கு தடவி, 1-2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
பின்பு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், அதில் ஊற வைத்துள்ள மீனைப் போட்டு, பொன்னிறமாக, பொரித்து எடுக்க வேண்டும்.
இப்போது சுவையா மத்தி மீன் வறுவல் ரெடி!!!