பழுத்த ஆனால் அதிகம் கனியாத திராட்சைப் பழங்கள்
கத்தரிக்கோல்
வடிதட்டு
துளைகளுள்ள ப்ளாஸ்டிக் கூடை
டீ டவல்கள்
டீஹைட்ரேட்டர் (Dehydrator) (அ) தட்டையான பெரிய ட்ரேக்கள்
கிச்சன் ஃபாயில் (Kitchen Foil)
சல்லடைத் துணி
துணி காயப் போடும் க்ளிப்புகள் (Cloth Pegs)
வற்றல் போடுவதற்கு வித்துக்கள் அற்ற பழங்கள் நல்லது. வித்துக்கள் இருந்தால் கடிபடும் என்பதைத் தவிர சாப்பிடக் கூடாது என்று இல்லை. கடையில் வாங்கும் பழங்களில் கழிவுகள் அதிகம் இருப்பதில்லை. வீட்டுத் தோட்டத்தில் விளைந்தவையானால் பறவைகள் கொத்தியவை, குலை நடுவில் சிறிய காய்கள், பூச்சிகள் இருக்கக்கூடும். இவற்றைக் கத்தரிக்கோல் கொண்டு நறுக்கிக் கழித்து விடவும்.
கத்தரிக்கோலினால் குலையை சிறிய கொப்புகளாகப் பிரித்துப் போடவும்.
பழங்களை கொஞ்சம் கொஞ்சமாக வடிதட்டில் வைத்து ஓடுகிற நீரில் அலசவும். பழங்கள் நொந்து போகும் அளவுக்கு நீரைத் திறந்துவிட வேண்டாம்.
நீர் வடியும் விதமாக, ஒரு வலைக் கூடையில் போட்டு வைக்கவும்.
சமையலறை மேடையில் டீ டவலை விரித்துக் கொள்ளவும். வடியவைத்த பழங்களிலுள்ள காம்புகளை நீக்கி பழங்களைத் தனித்தனியாகப் பிரித்து டவலில் போடவும். (பழங்களைக் கழுவிய பின்புதான் காம்பை நீக்க வேண்டும். முன்பே நீக்கி வைத்தால் நீரோடு அந்த இடத்தின் வழியாக அழுக்குகள் உள்ளே போகும்). பழங்களை ஒவ்வொன்றாகப் பிடித்து மெதுவே சுழற்றியபடியே இழுக்க, தோல் பிய்ந்து போகாமல் காம்பு மட்டும் வரும். டவலில் போட்டவற்றின் மேல் இன்னொரு டவலை வைத்து, அழுத்தாமல் மெதுவாக விரல்களால் உருட்டவும். துவாய் (Towel) பழங்களிலுள்ள மீதி நீரை உறிஞ்சிக் கொள்ளும்.
துடைத்த பழங்களை டீஹைட்ரேட்டரின் ஒவ்வொரு தட்டிலும் ஒற்றைவரி மட்டும் வருமாறு பரவலாகப் போடவும். தட்டில் போடும் போதே பழங்களின் விதம், பழங்களின் அளவு, பழுத்திருக்கும் அளவு என்று தரம் பிரித்து தனித்தனித் தட்டுகளில் போட்டு விடவும். ராக்கைகள் என்று இல்லாமல் இது போல அடுக்கும் தட்டுகள் உள்ள டீஹைட்ரேட்டர் பயன்படுத்தும் போது, தட்டின் உயரத்தை விட பழங்கள் பெரிதாக இருக்குமானால் அந்தத் தட்டை மேலே வைக்கவும். இரண்டாம் மூன்றாம் தட்டுகளிலும் பழங்களும் பெரிதாக இருந்தால், பழங்களை அழுத்தி விடாமல் தட்டுக்களை சரியான நிலையில் வைத்துவிட்டால், பழங்கள் உலர ஆரம்பிக்க தட்டு தன்னால் சரியான இடத்திற்கு இறங்கிவிடும்.
டீஹைட்ரேட்டரை மூடி அதிலுள்ள அதி உயர் வெப்பநிலையில் குறைந்தது 6 மணி நேரம் தொடர்ந்து ஓடவிடவும். பழங்களினுள்ளே உள்ளவை கிட்டத்தட்ட கொதிக்கும் நிலைக்கு வந்து, பழங்களின் வெளிப்புறம் வெந்தது போல் இருக்க வேண்டும். (பழங்களின் அளவு, தன்மை & டீஹைட்டேரைப் பொறுத்து மேலும் சிலமணி நேரங்கள் ஓடவிட வேண்டி வரலாம்). பின்பு வெப்ப நிலையை அடுத்த நிலைக்கு மாற்றி தொடர்ந்து ஓடவிடவும். 12 மணித்தியாலம் கழித்து டீஹைட்ரேட்டரைத் திறந்து கீழுள்ள தட்டுகளை மேலேயும், மேலேயுள்ளவற்றை கீழேயும் மாற்றி வைக்கவும். மீண்டும் அதி உயர் வெப்பநிலையில் 2 மணி நேரம் ஓடவிட்டு பின்பு அடுத்த நிலைக்கு மாற்றி தொடர்ந்து ஓடவிடவும். தினமும் காலை ஒரு முறை, மாலை ஒரு முறை திறந்து பார்த்து, தயாராக இருக்கும் பழங்களை எடுத்துவிட்டு மீதித் தட்டுகளை தேவை போல மேல் கீழாக மாற்றி வைக்கலாம்.
ஒவ்வொரு முறை திறக்கும் போதும் மீண்டும் அதி உயர் வெப்பநிலையில் போட்டு வைத்திருந்து பிறகு அடுத்த வெப்பநிலைக்கு மாற்றவும். முதல் நாளிலிருந்து 3 நாட்களில் சில தட்டுகளிலுள்ளவை தயாராகிவிடும். வெளியே எடுக்கும் பழங்கள் காற்றுப்பட மேலும் இறுகிப் போகும். அதனால் 100% வீதமும் இயந்திரத்தின் உள்ளேயே காயவைக்கத் தேவையில்லை. பழங்களை விரல்கள் நடுவில் பிடித்து அழுத்தினால் நன்கு இறுக்கமாக ஆனால் பிசையக் கூடிய பதத்திலிருந்தால் வற்றல் தயாராகிவிட்டது. உள்ளே கெட்டித் திரவம் உருளுவது போல இருந்தால் மேலும் சில மணித்தியாலங்கள் உலரவிட்டு எடுக்கவும்.
வெயிலில் வற்றல் போடுவதானால் பெரிய ரோஸ்டிங் / அவன் ட்ரேகளில் Foil Lining விரித்து (இப்படிச் செய்தால் பழங்கள் விரைவாக உலரும்.) பழங்களை ஒற்றை வரியில் பரவலாகப் போட்டு, தூசு சேராமல், ஈ மொய்க்காமல் ஒரு சல்லடைத் துணியால் மூடி சாதாரணமாக வற்றல் போடுவது போல நல்ல வெயில் விழும் இடத்தில் வைத்து எடுக்கவும். ட்ரே விளிம்பில் துணி காயப் போடும் க்ளிப்புகள் மாட்டி விட்டால் துணி காற்றுக்கு விலகாது. தட்டுகளை இரவில் உள்ளே எடுத்து வைத்து மறுநாள் மீண்டும் வெயிலில் வைக்கவும்.
கல் போல வற்ற விட்டு எடுத்தால் வருடக் கணக்கில் வைக்கலாம். ஆனாலும் தேவைக்கு அதிகம் உலரவிட வேண்டாம். சமையலுக்குத் தயாராகும் போது வெந்நீரில் ஊறவிட்டு அளவுக்கு ஊறியதும் எடுத்து நீர் வடிய சில நிமிடங்கள் பரவி வைத்து பயன்படுத்தலாம்.