தென்னிந்திய உணவுகளில் சாதத்துடன் சேர்த்து சாப்பிடுவதில், ரசத்திற்கு ஈடு இணை ஏதும் இல்லை. அதிலும் தென்னிந்தாவில் உள்ள எந்த ஒரு ஹோட்டலுக்கு சென்று சாதம் சாப்பிட்டாலும், அதில் நிச்சயம் ரசம் இருக்கும். அந்த அளவு ரசம் தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமானது. குறிப்பாக ரசத்திலேயே தக்காளி ரசம் மிகவும் சுவையுடன் இருக்கும்.
மேலும் தக்காளியில் கலோரிகள் மற்றும் கொழுப்புக்கள் குறைவாக உள்ளது. எனவே அத்தகைய தக்காளியை வைத்து ரசம் செய்து சாப்பிட்டால், உடலுக்கு வேண்டிய சத்துக்களை பெறலாம். சரி, இப்போது அந்த தக்காளி ரசத்தை எப்படி வைப்பதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
தக்காளி - 3
துவரம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
மிளகு - 2 டீஸ்பூன்
சீரகம் - 2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
பூண்டு - 6 பல்
பச்சை மிளகாய் - 1
பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, அதில் துவரம் பருப்பை கழுவிப் போட்டு, அத்துடன் தக்காளியையும் போட்டு வேக வைத்து மசித்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் மிக்ஸியில் மிளகு, சீரகம், பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் சிறிது கறிவேப்பிலை போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்
. பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, வெந்தயம், பெருங்காயத் தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்பு அதில் அரைத்து வைத்துள்ளதை சேர்த்து 1 நிமிடம் வதக்கி, பின் மசித்து வைத்துள்ள பருப்பு மற்றும் தக்காளியைப் போட்டு, உப்பு சேர்த்து இரண்டு கொதி விட்டு இறக்க வேண்டும்.
இப்போது சுவையான தக்காளி ரசம் ரெடி!!! இதில் கொத்தமல்லியை போட்டு சிறிது நேரம் மூடி வைத்து, பின் பரிமாற வேண்டும்.
R