Author Topic: அலட்சியம் செய்யலாமா?  (Read 1376 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 599
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
அலட்சியம் செய்யலாமா?
« on: January 21, 2013, 03:53:02 AM »
பகவான், கிருஷ்ண அவதாரம் எடுத்து, பாண்டவர்களை காத்து, துரியோதனாதியர்களை அழித்து பூபாரம் தீர்த்து, தன் அவதார காரியம் பூர்த்தியாகி விட்டதால், வைகுந்தம் திரும்பி விட்டார். இவர், பாண்டவர்களுக்கு அருள் செய்து கொண்டிருந்ததால், பாண்டவர்கள் ஒவ்வொருவரும் அசகாய சூரர்களாகவும், வில்லாதி வில்லர்களாகவும் விளங்கினர். பகவான் வைகுந்தம் திரும்பிச் சென்ற பிறகு, பாண்டவர்களின் சக்திஎல்லாம் போய் விட்டது. அர்ஜுனனும் தன் வலிமையையும், காண்டீபம் முதலான ஆயுதங்களின் வல்லமையையும் இழந்து நின்றான்.
இவன், துவாரகாவாசி மங்கையை அழைத்து வந்து கொண்டிருந்த போது, திருடர்கள் ஓடி வந்து அர்ஜுனனைத் தாக்கினர். பெண்களை இழுத்துக் கொண்டு ஓடினர். அவர்களை வில், அம்புகளால் தாக்கினான் அர்ஜுனன்; ஆனால், அந்த அம்புகளுக்கு எந்தவித சக்தியுமில்லை. திருடர்களை, அவை ஒன்றும் செய்யவில்லை. அவர்களோடு சண்டையிட உடம்பில் தெம்புமில்லை; சக்தியுமில்லை. அடடா… இது நாள் வரையில் பகவான் கிருஷ்ணனின் அருளும், உதவியுமிருந்ததால் நாம் பராக்கிரமசாலிகளாகவும், வில், அம்புகள் சக்தி வாய்ந்ததாகவும் இருந்தன. இப்போது, வாசுதேவன் இல்லாததால், எல்லா சக்தியும் போய் விட்டது என்று எண்ணி, துக்கப்பட்டு நின்றான்.
பிறகு, அவன் அஸ்தினாபுரம் செல்லும் வழியில் வேதவியாசரை கண்டு, அவரது திருவடிகளை வணங்கி நின்றான். அப்போது, அர்ஜுனனைப் பார்த்து, "அர்ஜுனா… நீ, ஏன் இப்போது ஒளியிழந்து சோகத்தோடு காணப்படுகிறாய்? ஆடு, கழுதை முதலியவைகளின் கால் தூசிகளைப் பின் தொடர்ந்து சென்றாயோ? பிரம்மஹத்தி செய்தாயோ? உறுதியான ஓராசை கெடத் துன்பம் உற்றாயோ?
"கல்யாணத்துக்காக உன் உதவியை நாடியவர்களை அலட்சியம் செய்தாயோ, சேரக்கூடாத மங்கையருடன் சேர்ந்தாயோ, வறுமையாளரின் பொருளை அபகரித்தாயோ, முறத்தின் காற்று படும்படி நின்றாயோ, கொள்ளிக் கண்ணரால் பார்க்கப்பட்டாயோ, நகம் பட்ட தண்ணீரை ஸ்பரிசித்தாயோ? "தண்ணீர் குடம் கொண்டு போகும் போது, அதிலிருந்து தண்ணீர் துளிகள் உன் மீது விழுந்தனவோ, போரில் தாழ்ந்தவர்களால் வெல்லப் பட்டனையோ, நீ உன் தேஜசையும், சக்தியையும் இழக்க காரணம் என்னவோ?’ என்று கேட்டார் முனிவர்.
அதற்கு, "பகவான் எங்களிட மிருந்து பிரிந்து சென்று விட்டார். அதனால், அவரது அருள் இல்லாமல் போய் விட்டது. ஆகையால் என் தேஜஸ், சக்தி, வில், அம்புகளின் சக்தி எல்லாமே போய்விட்டன. நான் வெறும் வைக்கோல் அடைத்த பொம்மையாகி விட்டேன்…’ என்றான் அர்ஜுனன். இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால், பகவானின் அருள் இருக்கும் வரை நாம் சிங்கம், புலியைக்கூட வெல்லலாம், பிறரை அடக்கி ஆளலாம், எதுவும் செய்யலாம்.
அவனருள் இல்லையென்றால், நாய், நரி கூட ஒருவனை சுலபமாக இழுத்துச் சென்று விடும். பிச்சைக்காரன் கூட மதிக்க மாட்டான். இது ஞாபகம் இருக்க வேண்டும். பகவானை சதா வழிபட வேண்டும். மற்றொன்று, வியாசர் கேட்ட கேள்விகள் முக்கியமானவை. ஆடு, கழுதை முதலியவைகளின் கால் தூசி நம் மீது படக் கூடாது, பிரம்மஹத்தி செய்யக் கூடாது, கல்யாணத்துக்காக உதவி கேட்பவனை அலட்சியம் செய்யக் கூடாது, தகாத பெண்களுடன் சேரக் கூடாது, முறத்தின் காற்று நம் மீது படக் கூடாது, நகம் பட்ட தண்ணீரை குடிக்கக் கூடாது, குடத்து நீர் நம் மீது படக் கூடாது என்பன.
இவைகளெல்லாம் நம் தேஜஸ், ஆயுள், ஐஸ்வர்யம் எல்லாவற்றையும் அழித்து விடக் கூடியவை. இதையெல்லாம் ஒதுக்கிவிட வேண்டும். அதாவது, தகாத காரியங்களைச் செய்ய வேண்டாமென்றனர். முடியுமா, பாருங்கள்!