உடலை ஆரோக்கியமாகவும், வலிமையாகவும் வைத்துக் கொள்வதற்காக மேற்கொள்ளும் செயல்களைக் குறிக்கும், உழைப்பின் மூலம் பெறும் பயிற்சியோடு உடற்பயிற்சியும் மேற்கொள்ள வேண்டும், உழைப்பின் மூலம் உடலின் அனைத்து உறுப்புகளும் பயிற்சி பெறும் என்று கூற முடியாது.
குறிப்பிட்ட ஒரு வேலையைச் செய்பவர்களுக்கு அந்த வேலையைச் செய்யும் உறுப்புகள் தவிர ஏனைய உறுப்புகளுக்குப் போதுமான அளவு பயிற்சி கிடைக்காது, அந்தக் குறையைப் போக்க உடற்பயிற்சி தேவைப்படுகிறது. அனைத்து உறுப்புகளும் நன்றாகச் செயல் பட்டால்தான் ஆரோக்கியமாக வாழமுடியும்.
ஆகவே, உடற்பயிற்சி கொடுக்க இப்போது பல கருவிகள் வந்துள்ளன. அவற்றைப் பயன்படுத்தி உடல் நலம் பெறலாம் ஒல்லியாய் இருப்பவர்கள் உடற்பயிற்சி செய்யத் தேவையில்லை எனும் மனநிலையில் இருப்பார்கள் அவர்களும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழவேண்டுமெனில் நிச்சயமாக உடற்பயிற்சி செய்யவேண்டும் என்று லண்டனின் வெளியான ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.
ஓடுவதும், உடல் வியர்க்க உடற்பயிற்சி செய்வதும் குண்டாக இருப்பவர்களுக்கு மட்டும் தான் என்றும், ஒல்லியாக இருப்பவர்கள் வரம் வாங்கியவர்கள் அவர்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டாம் எனும் கருத்து பரவலாக உள்ளது.
அந்த எண்ணத்தை உடைத்திருக்கிறது இந்த ஆராய்ச்சி. ஆரோக்கியமான வாழ்க்கை என்பதும் உடல் எடையைக் குறைப்பதில் மட்டுமல்ல என்றும், சரியான உடற்பயிற்சி செய்யாத ஒல்லியான மனிதருக்கும் குண்டான மனிதருக்கு வர வாய்ப்புள்ள அத்தனை பிரச்சனைகளும் வரும் என்றும் அந்த ஆராய்ச்சி பயமுறுத்துகிறது.
உடலிலுள்ள கொழுப்பை சரியான அளவுக்குள் வைத்திருக்க இந்த உடற்பயிற்சிகள் மிகவும் முக்கியமானவை. அதே நேரத்தில் நல்ல இரத்த ஓட்டத்திற்கும், சுறுசுறுப்புக்கும் கூட உடற்பயிற்சிகளே துணை செய்கின்றன.
தினமும் முப்பது நிமிடங்கள் எனும் அளவில் வாரம் ஐந்து நாட்கள் உடற்பயிற்சி செய்வதை ஒல்லியானவர்களும் கடைபிடிப்பதே ஆரோக்கிய வாழ்வுக்கு சிறந்தது என அந்த ஆராய்ச்சி தெரிவிக்கிறது.