காலையில் எழுந்தவுடன்
கலைந்த கேசமும் - தூக்கம்
கலையாத கண்களுமாய்
கண்ணாடி முன் நிற்கையில்
கலங்காமல் கண் சிமிட்டுகிறாய் நீ
அவசர உலகின் ஓர்
அங்கமாய் மாறி - சிறு
அலங்காரம் முடித்து
சிற்றுண்டி தவிர்த்து
அவசரமாய் நான் வேலை கிளம்புகையில்
அமைதியாய் என்னுள் நீ
அனைத்து கடவுளையும் துதித்து
அன்றாட வேலை தொடங்கி
அன்றைய வேலை முடித்து
அயர்வாய் நான் அமர்கையில்
அழகாய் சிரிக்கிறாய் நீ
அலைபேசியில் உன் அழைப்புக்காய்
நான் ஏங்குகையில்
எங்கெங்கிருந்தோ அழைப்புகள் வர
சிணுங்கிய அழைபேசியை அணைக்கப்போகையில்
அழைப்பு எண்ணின் கீழ்
நிழற்படமாய் நிற்கிறாய் நீ
தோழிகளுடன் பேசிச் சிரிக்கையில்
தொல்லைகள் யாவும் தொலைத்த
அந்த நொடியில்
எனக்கு மட்டும் தெரிகிறாய்
தொலைவில் எங்கோ நீ
பயணப்பொழுது சுகமாய் அமைய
பார்த்துப் பார்த்து
நான் சேகரித்த
பல பொருட்கள்
நியாபகப்படுத்தும் நினைவுகளாய் நீ
அடங்காத துன்பம் வந்து
அழுதழுது - நான்
சோர்ந்த போதெல்லாம்
என்னுள் ஊற்றெடுத்த
அன்பாய் நீ
எத்தனை தூரம்
நான் கடந்து போனாலும்
எத்தனை முறை
நான் தொலைந்து போனாலும்
என்னுள் முளைத்து
என்னுடனே வாழ்கிறாய்
என்னவனே நீ