Author Topic: கிளிசரினை எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்?  (Read 738 times)

Offline kanmani

குளிர்காலத்தில் சருமத்தில் வறட்சி அதிகமாக இருக்கும். அத்தகைய வறட்சியை போக்குவதற்கு பலர் க்ரீம்களை பயன்படுத்துவார்கள். மேலும் சிலர் கிளிசரினைப் பயன்படுத்துவார்கள். ஏனெனில் சரும வறட்சியை போக்குவதற்கும், சருமத்திற்கு குளிர்ச்சி தருவதற்கும் கிளிசரின் பெரிதும் துணை புரிகின்றன. இத்தகைய கிளிசரின், சருமத்திற்கு மட்டுமின்றி, கூந்தலுக்கும் பயன்படுகிறது.

glycerin hair skin
அதிலும் அந்த கிளிசரினை சருமத்திற்கு அப்படியே பயன்படுத்தலாம். ஆனால் அதையே கூந்தலுக்கு நேரடியாகப் பயன்படுத்தினால், கூந்தல் தான் பாதிக்கப்படும். ஆகவே இப்போது அந்த கிளிசரினை எப்படி பயன்படுத்தினால், அது நன்மையைத் தரும் என்பதைப் பார்ப்போமா!!!

சுருட்டை முடி

பொதுவாக கூந்தல் வகைகளிலேயே அதிக பராமரிப்பு செலுத்த வேண்டிய வகை என்றால், அது சுருட்டை முடி தான். அந்த வகையான முடி அழகாக இருந்தாலும், அவற்றின் பராமரிப்பு மிகவும் கடினமானது. அதிலும் தலைக்கு குளித்துவிட்டு, அதனை பார்த்தால், பேய் போன்று அடங்காமல் காணப்படும். அப்போது அதனை சரிசெய்ய வேண்டுமென்றால், எவ்வளவு வேலை செய்ய வேண்டியிருக்கும்.

அதிலும் சிலர் அந்த முடியை பராமரிக்க பல ஜெல் மற்றும் ஸ்ப்ரேகளை பயன்படுத்துவார்கள். இருப்பினும் அவை சிறிது நேரத்தில் போய்விடும். எனவே அவ்வாறு செலவு செய்து பராமரிப்பதற்கு பதிலாக சருமத்திற்கு பயன்படுத்தும் கிளிசரினைப் பயன்படுத்தியே, எந்த ஒரு மிகுந்த செலவின்றி ஈஸியாக பராமரிக்கலாம். இதனால் கூந்தலில் வறட்சி ஏற்படாமல், ஈரப்பசையுடன் காணப்படும்.

பயன்படுத்தும் முறை:

கிளிசரின் ஸ்ப்ரே செய்வதற்கு, வெஜிடேபிள் கிளிசரின் மற்றும் தண்ணீரை சரிசமமாக எடுத்துக் கொண்டு, அதனை நன்கு குலுக்கி, பின் அதில் மூன்று துளிகள் எண்ணெயை சேர்த்து, ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் தலைக்கு குளித்தப் பின்பு, அந்த ஸ்ப்ரேயை தலைக்கு தெளித்தால், கூந்தல் அடங்கிவிடும்.

சருமம்

சருமத்திற்கு பயன்படுத்தினால் சருமம் வறட்சியின்றி காணப்படுவதோடு, சரும செல்களை பக்குவப்படுத்தும். அதற்காக முதிர்ச்சியான தோற்றத்தை தரும் என்று எண்ண வேண்டாம். ஏனெனில் சரும செல்கள் ஓரளவு பக்குவத்துடன் இருப்பது மிகவும் முக்கியம். அதுமட்டுமின்றி கிளிசரின் சருமத்தில் இருக்கும் பாதிப்படைந்த செல்களை சரிசெய்வதோடு, புதிய செல்கள் உருவாகவும் உதவுகிறது.

பயன்படுத்தும் முறை:

ஒரு பாகம் கிளிசரின் மற்றும் ஒரு பாகம் தேனை சரிசமமாக எடுத்துக் கொண்டு, அதோடு இரண்டு பாகம் தண்ணீர் அல்லது பாலை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின்னர் சிறிது ஓட்ஸ் சேர்த்து பேஸ்ட் செய்து கொண்டு, முகத்தில் தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இதனால் சருமமானது வறட்சியின்றி நன்கு பொலிவோடு காணப்படும். அதிலும் நீர்மமான கிளிசரினை பயன்படுத்தும் போது அத்துடன் சிறிது ஜோஜோபோ ஆயிலையும் சேர்த்து பயன்படுத்தினால், நல்ல பலனைப் பெறலாம்.

மேற்கூறியவாறெல்லம் பயன்படுத்தி சருமத்தையும், கூந்தலையும் பொலிவோடு வைத்துக் கொள்ளுங்கள். மேலும் வேறு எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்று உங்களுக்கு தெரிந்தால், எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.