FTC Forum
Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: kanmani on November 14, 2012, 09:47:41 PM
-
பண்டிகை என்றாலே பலகாரம் அதிகம் சாப்பிடுவார்கள். அதுவும், நெய், எண்ணெய் பலகாரங்கள் சாப்பிடுவதால் வயிறு பிரச்சினையாகிவிடும். அதேபோல் ஒன்றுக்கு ஒன்று ஒத்துக்கொள்ளாத பொருட்களை சேர்த்து சாப்பிடுவதன் மூலமும் ஒவ்வாமை ஏற்பட்டு சிலருக்கு ஃபுட் பாய்சன் ஆகிவிடும் வாய்ப்பும் உள்ளது. இதனால் பண்டிகை நாளும் அதுவுமாக வயிற்றுவலி, டயாரியா என்று படுத்துக்கொள்வார்கள். மருத்துவமனைக்கு ஓடினால் கையில் இருக்கும் பணத்தை பெரிதாக கறந்துவிட்டுத்தான் வேறு வேலை பார்ப்பார்கள்.
எனவே நாம் உண்ட உணவு ஜீரணமாகாவிட்டாலோ, விஷமாகிவிட்டாலோ வீட்டில் சமையலுக்குப் பயன்படுத்தும் பொருட்களைக் கொண்டே நிவாரணம் தேடலாம் என்கின்றனர் நிபுணர்கள்.
இஞ்சியிருக்க பயமேன்
உணவில் ருசியை அதிகரிக்க அன்றாட சமையலில் இஞ்சி பயன்படுத்துகிறோம். இது மிகச்சிறந்த விஷ முறிவு மருந்து. இது அனைத்து வகையான ஜீரணக்கோளாறுகளையும் சரி செய்யும். ஒரு டேபிள் ஸ்பூன் தேனுடன் சிறிதளவு இஞ்சிச் சாறு கலந்து குடித்தால் எந்த விஷமாக இருந்தாலும் ஓடிவிடும். வலிகளுக்கும் நிவாரணம் கிடைக்கும்.
அகத்தை சீராக்கும் சீரகம்
உடலின் உள்ளே உள்ள ரத்தத்தை சுத்தம் செய்யும் என்பதனால்தான் இதற்கு சீர் அகம் என்று கூறுகின்றனர். எனவே பாத்திரத்தில் மூன்று டம்ளர் தண்ணீரை நன்கு காய்ச்சி அதில் ஒரு டேபிள் ஸ்பூன் சீரகத்தைப் போட்டு மூடிவைத்தால் அதில் சாறு இறங்கிவிடும். அந்த தண்ணீரை பருகினால் வயிறு உபாதைகளுக்கு நிவாரணம் கிடைக்கும்.
தெய்வீக மூலிகை துளசி
வயிறு மற்றும் தொண்டை தொடர்பான தொற்றுக்களுக்கு துளசி இலை சிறந்த மருந்தாக செயல்படுகிறது. துளசி இலையை நன்கு அரைத்து அந்த சாறில் ஒரு டேபிள்ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் அடுத்த சில மணிநேரங்களில் வயிறு, தொண்டை தொடர்பான நோய்கள் குணமடையும்.
வாழைப்பழம், ஆப்பிள்
பொட்டாசியம் சத்து நிறைந்த வாழைப்பழம் மிகச்சிறந்த விஷ முறிவு மருந்தாக செயல்படுகிறது. வாழைப்பழத்தை நன்கு அடித்து கூழ் போல மாற்றி ஷேக் செய்து சாப்பிடலாம்.இதேபோல் ஆப்பிள் சிறந்த விஷ முறிவு பழமாகும். இது நெஞ்செறிச்சல் இருந்தாலும் நீக்கும். ஆப்பிளில் உள்ள சத்தான என்சைம்கள் டயாரியாவை உண்டாக்கும் பாக்டீரியாவை அழித்து வயிறு வலியை குணமாக்கும்.
விஷத்தை முறிக்கும் எலுமிச்சை
எலுமிச்சையில் உள்ள அமிலம் விஷ உணவில் இருந்த கெட்ட பாக்டீரியாக்களை அழிக்கும் தன்மை கொண்டவை. எனவே ஃபுட் பாய்சன் ஏற்பட்டு வயிறு வலியால் அவதிப்படுபவர்களுக்கு எலுமிச்சையை பிழிந்து சாறு எடுத்து சிறிதளவு சர்க்கரை சேர்த்து ஜூஸ் குடிக்க தரலாம். லெமன் டீ குடிக்க கொடுத்தாலும் சிறந்த நிவாரணம் கிடைக்கும். இதேபோல் புதினா டீ தயாரித்து கொடுத்தாலும் வயிற்றினை சுத்தப்படுத்தி விஷத்தை முறித்துவிடும்.
தண்ணீர் குடிங்க
ஃபுட் பாய்சனால் டயாரியா ஏற்பட்டு உடம்பில் உள்ள நீர்ச்சத்து குறைந்து கொண்டே வரும். எனவே உடம்பின் நீர்ச்சத்தை தக்கவைக்க அவ்வப்போது தண்ணீர் குடிப்பது அவசியம். இதனால் விஷமும், பாக்டீரியாக்களும் விரைவில் வெளியேற்றப்படுவதோடு உடல் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பும்.