FTC Forum
Special Category => வலை செய்திகள் => Topic started by: Global Angel on November 06, 2012, 06:52:47 PM
-
பூட்டிய ஒரு தொழிற்சாலைக்குள் ஏழு பேர் மாட்டிக் கொள்கிறார்கள். அப்படி மாட்டிக்கொண்ட அவர்கள் யார் என்பதும், எப்படி அந்த தொழிற்சாலைக்குள் அவர்கள் சிக்கி கொண்டார்கள் என்பதும், அவர்களுக்கே தெரியாது. தாங்கள் யார் என்பதையே மறந்துவிட்டு பரிதவிக்கும் அந்த ஏழு பேரும் யார்? அவர்கள் அங்கு மாட்டிகொள்ள என்ன காரணம் என்பதை விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் சொல்லியிருக்கிறார் இயக்குநர் கணேசன் காமராஜ்.
விறுவிறுப்பாகவும், திகிலாகவும் தொடங்கும் படம் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்ப்பார்ப்பை காட்ச்சிக்கு காட்சி ஏற்படுத்துகிறது. இந்த ஏழு பேரும் யார்? என்ற உண்மையை இயக்குநர் எப்போது சொல்வார் என்ற எதிர்ப்பார்ப்போடு படம் பார்க்கும் ரசிகர்கள், அந்த உண்மை தெரியும் போது வேறு ஒரு எதிர்பார்ப்பில் முழ்கிவிடுகிறார்கள்.
இப்படி படம் முழுவது பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாமல் திரைக்கதையை உருவாக்கியிருக்கும் இயக்குநர் கணேசன் காமரஜ், ஒரு சிறிய சம்பவத்தை வைத்துகொண்டு இப்படி பட்ட ஒரு படத்தை இயக்கியிருப்பதற்காக அவருக்கு ஒரு பெரிய சபாஷ் சொல்லலாம்.
ரியாஸ் கான், கலாபவன் மணி, நடிகை சஞ்சனா சிங், ஜெயப்பிரகாஷ் ஆகிய நடிகர்களைத் தவிர மற்ற நடிகர்கள் இதுவரை தமிழ்ப் படங்களில் பார்த்திராத முகங்கள்.
ரியாஸ் கான், கலாபவன் மணி, ஜெயப்பிரகாஷ் போன்றோர் தங்களுடைய பாத்திரத்திற்கு ஏற்ற பங்களிப்பை கொடுத்தது போலவே, இப்படத்தில் நடித்திருக்கும் புதுமுகங்களான அச்சுத குமார், தர்மா, திலீப் ராஜ், ஹாரிஸ் ராஜ், நிஷான் ஆகியோரும் தங்கள் பங்கிற்கு நடிப்பின் மூலம் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.
அதுவும், "தனக்கு பணம் கொடுப்பவன் பிரண்ட், கொடுத்த அந்த பணத்தை திரும்ப கேட்காதவன் பெஸ்ட் பிரண்ட்." என்ற புதிய தத்துவத்தை சொல்லும் நடிகரின் நடிப்பு அசத்தல், அவருக்கு டப்பிங் பேசிய எம்.எஸ்.பாஸ்கருக்கும் இத்த இடத்தில் ஒரு சபாஷ் சொல்லலாம்.
ஒளிப்பதிவாளர் மகேஷ் கே.தேவின் கேமரா கோணங்களும், இசையமைப்பாளர் கண்ணனின் பின்னணி இசையும் படத்தின் விறுவிறுப்பை மேலும் கூட்டியிருக்கிறது.
ஒரே இரவில் தொடங்கி முடியும் திகில் படமான இப்படம் அதற்கு ஏற்றவாறே, பாடல்கள் இல்லாமல், சொல்ல வந்ததை மிக நேர்த்தியாக சொல்லப்பட்டிருக்கிறது. தேவையில்லாத இடத்தில் பாடல்களை வைத்து ரசிகர்களை வெளியேற்றாமல், பாடல்களே இல்லாமல் ஒரு நல்ல திரைக்கதையோடும், சுவாரஸ்யமான காட்சிகளோடும் வெளியாகியிருக்கிறது இப்படம்.
ஒன்றரை மணி நேர படமாக இருந்தாலும், உண்மையான திகில் அனுபவத்தை கொடுக்கும் 'யாருக்கு தெரியும்' ஒரு முறை பார்க்க வேண்டிய படம் தான்.
ஜெ.சுகுமார் (டி.என்.எஸ்)