FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: ஸ்ருதி on October 28, 2012, 10:40:41 AM

Title: வத்தாளை கிழங்கு சிப்ஸ்
Post by: ஸ்ருதி on October 28, 2012, 10:40:41 AM
வத்தாளை கிழங்கு சிப்ஸ்
படர்ந்து வளரும் கொடி இனத்தைச் சேர்ந்த கிழங்கு வகைகளில் இதுவும் ஒன்று. மத்திய அமெரிக்காவிலிருந்து வந்த இது இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் அதிகம் வளருகிறது.

இலங்கையில் வத்தாளை என்பதை தமிழ்நாட்டில் வள்ளிச் சீனிக் கிழங்கு என்பர். Sweet potatoes என ஆங்கிலத்தில் அழைக்கப்படுவதை தாவரவியலில் Ipomoea batatas எனப்படும்.

ஆபிரிக்காவில் நயமி Nyami என அழைக்கப்பட்டதே Yam என ஆங்கிலத்தில் மருவியது என்கிறார்கள் மொழி வல்லுணர்கள். அதிக மாப்பொருளும், ஈரலிப்புத் தன்மையும் கொண்ட இது உருளைக்கிழங்கு போல் மஞ்சளாக அல்லாது இளம் கத்தரிப்பூ நிறம் கொண்டது.

போஷணைக் கிழங்கு

இதில் மாப்பொருள் 28 சதவிகிதமும், 2 சதவிகித புரதமும் உண்டு. ஆயினும் உருளைக் கிழங்கில் 28 சதவிகிதம் மட்டுமே மாப்பொருள் உண்டென்பது குறிப்பிடத்தக்கது. நார்ப்பொருள் அதிகம் உண்டு.

இவ்வாறு பல்வேறு போஷணைப் பொருட்கள் கொண்டதால் பல நாடுகளில் பிரதான உணவாகவும் பயன்படுத்தப்படுகிறது.

இதில் அதிகளவு விற்றமின் ஏ, மற்றும் சீ (Vitamin A, C) உள்ளது. பொட்டாசியம், போலிக் அமிலம், விற்றமின் B6 ஆகியனவும் உண்டு.

சுவையான கிழங்கு

இனிப்புச் சுவை கூடியது. சேமித்து வைக்கும் போதும் சமைக்கும் போதும் இதன் இனிப்புத் தன்மை மேலும் அதிகரிக்கும். அதனால் சிறுவர்கள் விரும்பி உண்பர்.

கிழங்கை அவித்து எடுத்து காலை உணவாகவும், ஈவினிங் சிற்றுண்டியாகவும் உண்பதுண்டு.

பச்சை மிளகாய், மஞ்சள் இட்டு தேங்காயப் பால் கறியாகவும், மிளகாய்ப் பொடி இட்டு குழம்பாகவும், அவித்தெடுத்த கிழங்கை சலட் வகைகளிலும் கலந்து கொள்ளலாம்.

வேண்டியவை

வத்தாளைக் கிழங்கு – 2
மிளகாய்த் தூள் – ½ ரீ ஸ்பூன்
உப்பு தேவைக்கு ஏற்ப
பொரிப்பதற்கு ஓயில் ¼ லீட்டர்
விரும்பினால்
மஞ்சள் பொடி, பெருங்காயப் பொடி சிறிதளவு

செய்து கொள்வோம்


கிழங்கின் தோலை நீக்கி தண்ணீரில் நன்கு கழுவிக் கொள்ளுங்கள். தோல் நீக்கியவுடன் கிழங்கு கறுக்கும் தன்மை அடைந்துவிடும். அதனால் பெரிக்கும் நேரம் சீவி எடுத்துக் கொள்ளுங்கள்.

கிழங்கை மெல்லிய வட்டங்களாகச் சீவி எடுத்துக் கொள்ளுங்கள். பெரிய கிழங்காக இருந்தால், இடையே கீறி வெட்டிக் கொள்ளுங்கள்.

தாச்சியில் எண்ணெயை விட்டு நன்கு கொதி வந்ததும் வெட்டிய துண்டங்களைப் போட்டு பிரவுன் கலரில் பொரித்து எடுங்கள்.

அடிக்கடி கிளறிக் கொண்டால் ஒரு புறமாகக் கருகிவிடாமல் இருக்கும்.

இறுதியில் விரைவில் பொரிந்துவிடும் ஆதலால் கவனமாக தீயைச் சற்றுக் குறைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

எண்ணெய் வடியவிட்டு சற்று ஆற உப்பு, மிளகாய்ப் பொடி தூவிக் கொள்ளுங்கள்.

உப்பு, இனிப்பு, உறைப்புச் சுவையுடன் இருக்கும் சிப்ஸ் அனைவரும் விரும்பிக் கொறிப்பார்கள்.

போத்தலில் இட்டு இறுக மூடி வைத்துக் கொண்டால் இரண்டு மூன்று நாட்களுக்கு கொறித்துக் கொள்ளலாம்.

மிளகாய்ப் பொடி பிடிக்காதவர்கள் உப்பு, மஞ்சள் பொடி, சிறிதளவு மிளகுப் பொடி, பெருங்காயப் பொடியை முதலே பிரட்டி பொரித்து எடுத்துக் கொள்ளுங்கள்.