கிரிடிட் கார்டுக்குள் ஒளிந்திருக்கும் ஆபத்துகள் !!!(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-h.ak.fbcdn.net%2Fhphotos-ak-ash3%2F541097_293686280736879_1023989154_n.jpg&hash=2f25bbbb014f9aa4246cb219b6544a2368dcf44a) (http://www.friendstamilchat.com)
உங்கள் கிரிடிட் கார்டுகளுக்குள் ஒளிந்திருக்கும் ஆபத்துக்கள் மற்றும் மோசடிகள் குறித்து உங்களுக்கு தெரியுமா?
மாதம்தோறும் வரும் கிரிடிட் கார்டு ஸ்டேட்மெண்டுகளை நம்மில் எத்தனை பேர் படிக்கிறோம்? அல்லது எத்தனை பேருக்கு படித்துப்பார்க்க தெரியும்?
பதிலென்னவோ நெகடிவ் தான்.காரணம்?
அதை படிப்பதில் ஆர்வமின்மை; அல்லது அதில் சொல்லப்பட்டுள்ள அர்த்தம் புரியாத வார்த்தைகள்.
வெகு சிலரே கிரிடிட் கார்டு ஸ்டேட்மெண்டுகளை முழுவதும் படிக்கிறார்கள் என்கிறது ஒரு ஆய்வு.
கிரிடிட் கார்டுகளைப்பற்றி முழுமையாக தெரிந்து கொண்டால், பிரச்சினைகளை தவிர்ப்பது எப்படி என்பதனை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.
இதோ கிரிடிட் கார்டுகளைப்பற்றி உங்களுக்காக!
கிரிடிட் கார்டு எண் (Credit card Number):
இது உங்களது பிரத்தியேக எண். இந்த 16 இலக்க எண் கிரிடிட் கார்டின் முகப்பில் சூப்பர் இம்போஸிங் முறையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கார்டின் அனைத்து பயன்பாடுகளுக்கும் இந்த எண்ணே பிரதானம் என்பதால், இதை நீங்கள் எப்போதும் நினைவில் வைத்திருப்பது அவசியம்.
கார்டு தொலைந்து போனால் உடனடியாக சம்பந்தப்பட்ட வங்கிக்கு புகார் செய்ய, கார்டு எண்ணைத்தான் நீங்கள் முதலில் தெரிவிக்க வேண்டும். ஒருவேளை, கிரிடிட் கார்டு எண் உடனடியாக நினைவுக்கு வரவில்லை எனில், இது கிரிடிட் கார்டு ஸ்டேட்மென்டிலிருந்து உங்களுக்கு கிடைக்கும். ஸ்டேட்மென்டில், பளிச்சென்று தெரியும் வகையில் ஒரு பிரதான இடத்தில் இந்த எண் தெளிவாக அச்சிடப்பட்டிருக்கும்.
கிரிடிட் லிமிட் (Credit limit ):
இது தான் உங்களது கடன் பெறும் திறன் எனப்படுவது. அதாவது, கார்டை வழங்குகிற வங்கி அல்லது நிறுவனம் எந்த அளவுக்கு உங்களுக்கு கடன் தர இயலும் என்பதைத்தான் இது குறிப்பிடுகிறது. இந்த அளவை அவர்கள் எவ்வாறு வரையறை அல்லது நிர்ணயம் செய்கிறார்கள்? அதற்கான அளவுகோல்கள் என்னென்ன?
உங்களது மாத வருமானம்
கடனை திரும்ப செலுத்தும் திறன் இதற்கு முன் கடன் பெற்ற இடங்களில் தடையின்றி சரியாக திரும்பச் செலுத்தியிருக்கிறீர்களா?
இந்த மூன்று விஷயங்களின் அடிப்படையில் தான் உங்களது கடன் பெறும் தகுதியை வங்கிகள் நிர்ணயம் செய்கின்றன.
மேற்சொன்ன மூன்றும், உங்களது கிரிடிட் லிமிட்டை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ செய்யும் தன்மை படைத்தவை.
வங்கிகள், உங்களுக்கு அனுமதிக்கும் இந்த கிரிடிட் லிமிட்டை இரண்டு பிரிவாக பிரிக்கின்றன.
அதாவது, உங்களது மொத்த கிரிடிட் லிமிட்டில் 70 சதவீதத்தை பொருட்கள் வாங்குவதற்கும் மீதமுள்ள 30சதவீதத்தை வங்கிகளின் ஏ.டி.எம்.களிலிருந்து ரொக்க பணமாக பெற்றுக்கொள்வதற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ரொக்கமாக பணம் பெறும் பிரிவில், பெறுகிற பணத்திற்கு 2.50 முதல் 3.00 சதவீதம் வரை டிரான்ஸாக்ஷன் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மேலும், இந்த வசதிக்கு வட்டி வீதமும் அதிகமென்பதால் தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் மட்டுமே இதனை பயன்படுத்திக்கொள்வது நல்லது.
வங்கிகள், தங்களது கிரிடிட் கார்டு ஸ்டேட்மென்டுகளில் உங்களுக்கு அனுமதிக்கப்பட்ட கிரிடிட் லிமிட், அதில் 'பொருட்களாக வாங்குவதற்கு எவ்வளவு? ரொக்கக்கடனாக பெறுவதற்கு எவ்வளவு?' என்கின்ற தகவல்களையும்; ஒவ்வொரு பிரிவிலும் ஸ்டேட்மெண்ட் தேதிப்படி எவ்வளவு பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதைனையும், இன்னும் பயன்பாட்டிற்கு எவ்வளவு மீதமுள்ளது என்பது குறித்த தகவல்களையும் தெளிவாக கூறுகின்றன.
ஒருவேளை, இந்த கிரிடிட் லிமிட்டை தாண்டி உங்கள் பயன்பாடு இருக்குமானால், இது போன்ற அதிகப்படியான பயன்பாட்டிற்கு வங்கிகள் அதிக வீதத்தில் வட்டி வசூல் செய்யலாம்.
சரி, கிரிடிட் லிமிட்டை கடந்து எந்த அளவுக்கு பயன்படுத்தலாம் என்றால், அதற்கும் வங்கிகள் ஒரு எல்லையை வைத்திருக்கிறன.
அந்த எல்லை எது என்பதனை வங்கிகள் பெரும்பாலும் உங்களுக்கு தெரிவிப்பதில்லை.
இந்த எல்லை மீறுதலை அனுமதிக்க மறுக்கும் உரிமையையும் வங்கிகள் தங்கள் வசமே வைத்துள்ளன.அவைலபிள் கிரிடிட் லிமிட் (Available credit limit):
அனுமதிக்கப்பட்ட கிரிடிட் லிமிட்டில் இதுவரை பயன்படுத்தியுள்ளது போக தற்போது மீதியுள்ளது என்று பொருள்.
உதாரணமாக, உங்களது கிரிடிட் லிமிட் ரூ 1 லட்சம் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் இதுவரையிலும் ரூ 80 ஆயிரம் செலவு செய்திருந்தால் தற்போது மீதமிருக்கும் ரூ 20 ஆயிரம் தான் 'அவைலபிள் கிரிடிட் லிமிட்'என்று குறிப்பிடப்படுகிறது.
பேமென்ட் டியூ டேட் (Payment Due Date ):
ஒவ்வொரு மாதமும், நீங்கள் கிரிடிட் கார்டுக்கான தவணையை செலுத்த வேண்டிய தேதி இது. அதாவது, இந்தத்தேதியில் வங்கிக்கு உங்கள் காசோலை அல்ல, நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். பணம் சென்று சேர்ந்திருக்க வேண்டிய தேதி. உங்களது காசோலை வங்கியால் பணமாக்கப்படுகின்ற தேதி தான் இந்த பேமென்ட் டியூ டேட் என்பதனால், இந்த தேதியில் பணமாக்கத்தக்க வகையில் உங்களது காசோலை முன்னதாகவே வங்கியை சென்றடையும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.
ஸ்டேட்மெண்ட் டேட் (Statement Date)
நீங்கள் கடந்த ஒரு மாதமாக வாங்கிய பொருட்களின் பில்களுக்கான பட்டியல் இது. இதில் உங்களது பயன்பாடு தேதி வாரியாக பட்டியலிடப்படுகிறது. எங்கெங்கெல்லாம் எப்போதெல்லாம் பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடப்படுகிறது.
அது மட்டுமல்ல, வட்டி; கிரிடிட் கார்டுக்கான ஆண்டு கட்டணம்; தாமதத்திற்கான அபராத வட்டி இவையெல்லாமே கூட இந்த பட்டியலில் இடம் பெறுகிறது. இதில் சொல்லப்பட்டுள்ள அனைத்து தகவல்களுமே சரியானவையா என்பதனை நீங்கள் உறுதிப்படுத்திக் கொள்வது அவசியம்.
ஏதேனும், தவறான கட்டணங்களோ, பயன்பாடு பில்களோ காணப்படுமானால், அது குறித்து உடனடியாக புகார் செய்ய வேண்டும்.
மொத்த நிலுவை தொகை (Total amount Due):
மொத்த நிலுவை தொகை என்பது குறிப்பிட்ட தேதியில் நீங்கள் பெற்றுள்ள மொத்த கடன், அதன் மீதான வட்டி, அபராத வட்டி (பொருந்துமெனில்) இன்னும் என்னென்ன கட்டணங்கள் உண்டோ அனைத்தும் சேர்ந்தது.
குறைந்தபட்சம் செலுத்த வேண்டிய தொகை (Minimum Amount Due ):
ஒவ்வொரு மாதமும், மொத்த கடன் தொகையில் ஒரு குறிப்பிட்ட தொகையை நீங்கள் திரும்ப செலுத்தலாம். அந்த குறைந்த பட்சம் செலுத்த வேண்டிய தொகை என்பது, மொத்த கடன் தொகையில் 5 சதவீதம். இந்த குறைந்தபட்ச தொகையை மேலே சொன்னபடி சரியான தேதியில் கட்டத்தவறினால், வங்கிகள் தாமதத்திற்கென அபராத வட்டி வசூல் செய்கின்றன. நீங்கள் குறைந்த பட்ச தொகையை மட்டுமே செலுத்துகிறீர்கள் என்றால் மீதமுள்ள நிலுவைத்தொகைக்கு வங்கி வட்டி வசூல் செய்கிறது. இந்த வட்டி வீதம் மிகவும் அதிகமென்பது நீங்கள் அறிந்திருக்கக்கூடும். அப்படி ஒவ்வொரு மாதமும் வட்டி மேல் வட்டி என்பது உங்கள் மீது பெரும் சுமையாக வளர்ந்து கொண்டே போகலாம்.
எப்படி தெரியுமா?
நீங்கள் குறைந்த பட்ச தொகையை மட்டுமே செலுத்துகிறீர்களென்றால், இந்த வங்கிகள் மறுபடியும் வட்டியை மொத்த நிலுவைத்தொகைக்கே கணக்கிடுகின்றன.
உதாரணமாக, ஒரு மாதம் நீங்கள் மொத்த நிலுவை தொகையில் 60 சதவீதத்தை திரும்ப செலுத்துகிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். அடுத்த மாதம் கடந்த முறை கட்டாமல் விடப்பட்ட 40 சதவீதத்துக்கு மட்டும் தானே வட்டியை கணக்கிட வேண்டும். ஆனால், மாறாக 100 சதவீதத்துக்குமே வட்டி கணக்கிடப்படுகிறது. இந்த வகையில், கடந்த மாதம் நீங்கள் செலுத்திய குறைந்த பட்ச தொகைக்கும் சேர்த்து மீண்டும் வட்டி செலுத்த வேண்டியவராகிறீர்கள்.
இதைத்தான் 'கடன் சுமையாக வளர்ந்து கொண்டே போகலாம்' என்று மேலே குறிப்பிட்டிருந்தோம்.
ரிவார்டு பாய்ண்டுகள் (Reward Points):
கிரிடிட் கார்டுகளை அதிக அளவில் நீங்கள் பயன்படுத்தும்படி உங்களை தூண்டுவதற்காக வங்கிகள் கையாளும் வியாபார யுக்தி தான் இந்த ரிவார்டு பாய்ண்டுகள். ஒவ்வொரு முறையும் நீங்கள் கார்டை பயன்படுத்துகிற அளவை பொறுத்து இந்த ரிவார்டு பாய்ண்டுகள் கணக்கிடப்படுகின்றன. உங்களிடம் சேர்ந்துள்ள ரிவார்டு பாய்ண்டுகளை, நீங்கள் அவர்கள் தருகிற ஏதேனும் பொருள்களுக்கு மாற்றிக்கொள்ளலாம். எவ்வளவு பாய்ண்டுக்கு என்ன பொருளை நீங்கள் பெறலாம் என்று அவர்கள் ஒரு பட்டியலை வைத்துள்ளனர். ஸ்டேட்மென்டில், கடந்த மாதம் எவ்வளவு பாய்ண்டுகள் இருந்தன தற்போது எவ்வளவு பாய்ண்டுகள் பெற்றுள்ளீர்கள்? எவ்வளவு பாய்ண்டுகளை நீங்கள் பொருட்களாக மாற்றிக்கொண்டுள்ளீர்கள்? மீதமுள்ள பாய்ண்டுகள் எவ்வளவு?' என்ற தகவல்களும் கார்டு ஸ்டேட்மெண்ட்டில் தவறாமல் இடம் பெறுகின்றன.
ஆகவே, அடுத்த முறை கார்டு ஸ்டேட்மெண்ட் வந்ததும் அனைத்தையும் படித்துப்பாருங்கள். மோசடிகளை தடுக்கவும் தவறுகளை கண்டுபிடித்து சரி செய்யவும் ஆபத்துக்களிலிருந்து உங்களை பாதுகாத்துக்கொள்ளவும் இது உதவும்.