FTC Forum

தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: MysteRy on October 13, 2012, 06:21:15 PM

Title: ~ எவெரஸ்ட் சிகரத்தை அடைந்து உலக புகழ் பெற்ற டென்சிங் !!!! ~
Post by: MysteRy on October 13, 2012, 06:21:15 PM
எவெரஸ்ட் சிகரத்தை அடைந்து உலக புகழ் பெற்ற டென்சிங் !!!!

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-b.ak.fbcdn.net%2Fhphotos-ak-snc7%2F408685_292969600808547_1711408634_n.jpg&hash=3bcac353283271aa92ffd8986e73be3248130219) (http://www.friendstamilchat.com)(http://)


டென்சிங் நோர்கே (Tenzing Norgay, (மே 1914 – மே 9, 1986), நேபாள மற்றும் திபெத்திய மலையேறுநர் ஆவார். இவர் பொதுவாக ஷேர்ப்பா டென்சிங் எனவே அழைக்கப்படுகிறார். இவர் மே 29, 1953 இல் நியூசிலாந்தின் சேர்எட்மண்ட் ஹில்லரியுடன் இணைந்து எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை முதன் முதலில் அடைந்து சாதனை படைந்த்தார்.

கட்டுமஸ்தான உடம்புடன் இருந்த இளைஞன் டென்சிங், ஒரு கோணிப் பை நிறைய கற்களை அள்ளிப் போட்டுக் கட்டி, தன் தோளில் சுமந்தபடி ஊரைச் சுற்றி வந்தான். பார்த்தவர்கள் எல்லாம் கேலியும் கிண்டலும் செய்தனர்.

டென்சிங்கின் மனைவிக்கும் அவனது இந்தச் செயல் பிடிக்காததால், அந்த மூட்டையை இரவோடு இரவாக அப்புறப்படுத்த நினைத்தாள். ஆனால், அவளால் அதை அசைக்கக்கூட முடியவில்லை. ‘‘இத்தனை கனமான சுமையைச் சுமந்துகொண்டு எப்படி உங்களால் சிரிக்க முடிகிறது?’’ என மறுநாள் தன் கணவனைக் கேட்டாள்.‘‘சந்தோஷமாக ஏற்றுக்கொண்டால் சுமை தெரியாது!’’என்றான் டென்சிங். ‘‘சுமை தெரியவில்லை, சரி... மற்றவர்களின் கேலியும் கிண்டலும் கூடவா உங்களை வேதனைக்குள்ளாக்கவில்லை?’’ என மீண்டும் கேட்டாள். ‘‘அவற்றையும் நான் சந்தோஷமாகவே ஏற்றுக் கொள்கிறேன்’’ என்றான்.

இமயமலை அடிவாரத்தில் இருக்கும் கும்ஜிங் கிராமத்தில், ஏழ்மையான குடும்பத்தில் பதினோராவது குழந்தையாக 1914-ம் வருடம் பிறந்தான் ‘நாம்கியால்’. சுற்றுப்பயணம் வந்திருந்த திபெத்திய மதகுரு லாமா, அந்தக் குழந்தையைப் பார்த்து, ‘‘இவன் உலகப் புகழ் பெறுவான். இவனை இனி ‘டென்சிங் நோர்கே’ எனக் கூப்பிடுங்கள்’’ என்றார் .யாக் எருமைகளை மேய்த்துக்கொண்டு இருந்த டென்சிங்குக்கு மலையின் உயரம்கிளர்ச்சி ஊட்டியது. மலை ஏறும் தனது ஆசையைத் தாயிடம் சொன்னான்.

‘‘மகனே! நம்மைப் போன்றவர்கள் மலை ஏறும் வீரனாக‌ அல்ல; ஒரு சுமை தூக்கியாகத்தானப்பா போக‌ முடியும்’’ என்றாள். உடனே, வீட்டைவிட்டு வெளியேறி, நேபாளத்தில் சுமை தூக்கியாக வேலையில் சேர முயன்றான் டென்சிங். ஆனால், அவனால் அதிக சுமையைத் தூக்க முடியவில்லை. எனவே, வேலை கிடைக்காத வருத்தத்துடன் அவன் திரும்பிக்கொண்டு இருந்தபோது, தலாய்லாமாவைச் சந்தித்து தன் ஏக்கத்தைச் சொன்னான். ‘‘சந்தோஷமாக ஏற்றுக்கொண்டால் எந்தச் சுமையும் தெரியாது!’’ என்றார் அவர். அந்த மந்திரச் சொல்லை மனதில் ஏற்றிக்கொண்டு, தன் உடலை உறுதி செய்யும் விதமாகத்தான் கோணிப் பை நிறையக் கற்களை அள்ளிப் போட்டுக்கொண்டு சந்தோஷமாகச் சுமக்கத் தொடங்கினான் டென்சிங். அவனது உடல் இரும்பு போல் உரேமறியது. மலை ஏறும் குழுவில் சுமைதூக்கியாக, 1937-ம் ஆண்டு வேலையும் கிடைத்தது.

மலையின் மீது குறைவான உணவே கிடைக்கும் என்பதால், பசியுடன் அதிக எடையைச் சுமக்க வேண்டும். குளிரும் பனிக் காற்றும் உடம்பை ஊசி போல் குத்தும். பள்ளத்தாக்குகளைக் கடக்கும்போது, பாலம் கட்ட வேண்டும்.மலைச்சரிவில் ஏறும்போது கோடரிகளால் பாறைகளை வெட்டி, படி அமைக்க வேண்டும். மிகக் குறைவான நேரமே தூங்க முடியும். பனிப் புயலும், பனிப் பாறைகள் விழுவதும் மரண பயம் தரும்.

ஆனால், இத்தனை சிரமங்களையும் மீறி, மலைகளின் மீது சர்வ சாதாரணமாக, புன்னகை மாறாமல் நடைபோட்டான் டென்சிங். உயரம் செல்லச் செல்ல, மற்றவர்கள் சோர்வடைந்துவிட, இவன் மட்டும் உற்சாகமாக தனது இலக்கை நோக்கிப் போய்க்கொண்டே இருந்தான்.

நியூசிலாந்தைச் சேர்ந்த எட்மண்ட் ஹில்லாரியுடன் ஏழாவது முயற்சியாக எவெரஸ்ட் நோக்கிக் கிளம்பினான். கடுமையான பயணத்துக்குப் பின் டென்சிங், ஹில்லாரி இருவரும் 1953-ம் வருடம் மே, 29-ம் நாள் பகல் 11.30 மணிக்கு எவெரஸ்ட் சிகரத்தின் உச்சியில் நின்றார்கள். தன் மகள் ஆசையுடன் கொடுத்தனுப்பிய சின்னஞ்சிறு பென்சிலை அங்கே நட்டுவைத்தான் டென்சிங்.

கல்வியறிவில்லாத, வசதியில்லாத, எவ்விதப் பயிற்சியும் இல்லாத குக்கிராமத்தில் பிறந்த டென்சிங்கை உலகப் புகழ் பெறவைத்த அந்த மந்திரம், வெற்றிபெறவிரும்பும் அனைவருக்கும் அற்புத வழிகாட்டி!


விருதுகள்

1953 இல் இரண்டாம் எலிசபெத்திடம் இருந்து ஜோர்ஜ் விருதைப் பெற்றார்.

நேபாள மன்னர் திரிபுவன் நேபாளத்தின் நட்சத்திர விருதை 1953 இல் வழங்கினார்.

1959 இல் இந்திய அரசு பத்மபூஷன் விருது வழங்கியது.

1978 இல் இவரது நினைவாக இந்திய அரசு டென்சிங் நோர்கே விருதினை அறிவித்தது.