FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஆதி on September 28, 2012, 06:40:51 PM

Title: கவியரசருக்கு ஒரு கவிதை
Post by: ஆதி on September 28, 2012, 06:40:51 PM
வருத்தத்தில் இருந்தாலும் வடிந்து போகா
..வறுமையினில் இருந்தாலும் வழியும் மையல்
நெருக்கத்தில் இருந்தாலும் பிரிவு துய்கும்
..நெஞ்சங்க ளானாலும் காதல் மேவும்
பருவத்தில் இருந்தாலும் பனிக்கும் பெண்கள்
..பார்வைகளில் நனைந்தாலும் உன்றன் பாடல்
பொருந்தாமல் போனதில்லை புதைந்து இங்கு
..உன்னில்புண் ணாற்றாதார் யாரு மில்லை


இதமான பாட்டெழுதி எங்கள் நெஞ்சில்
..இடம்மீதி இல்லாமல் நிரம்பி விட்டாய்
மிதமான உணர்வுகளை மெல்ல தூண்டி
..மெதுவாக மீட்டிவிட்டாய்; கவியில் பாட்டில்
பதமான வார்த்தைகளை பயன்ப டுத்தி
..பாமரர்க்கும் தத்துவங்கள் புரிய வைத்தாய்
நிதம்நூறு கோப்பைகளில் மலரில் மூழ்கி
..விதமான அனுபவங்கள் பெற்று தந்தாய்


கிளிகளோடும் கிண்ணம்நி ரம்பி பொங்கும்
..கிரக்கத்தோ டுமிருக்கும் போதில் தான்நான்
விழிமூட வேண்டுமென்றாய் வாழ கூடா
..வாழ்க்கைவாழ்ந்தேன் என்றாய் உன்னை பற்றி
ஒளிக்காமல் கோடிசொன்னாய் உந்தன் பாட்டை
..உதவாத பாடலென்றாய் ஆனால் எம்மில்
அழியாத பாடலானாய் கவியா விற்கும்
..அரசனானாய் மரணமற்ற இறைவ னானாய்...