FTC Forum
தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: தமிழன் on September 27, 2012, 11:42:36 PM
-
புத்தகம் படிக்கும் பழக்கம் உண்டா உங்களுக்கு?
புத்தகம் காகிதப் பூக்கள். இந்த காகிதப் பூக்களிலும் தேன் சுரக்கும். இந்த காகிதப் பூக்களிலும் மணம் இருக்கும்.
புதுக்கவிதை புத்தகமும், பூ மரத்து நிழலும், மதுக்கிண்ணமும், மதி முகத்து மங்கையும் இருந்தால் போதும் பாலைவனமும் சொர்க்கமாகி விடும் என்றான் ஒரு கவிஞன்.
புத்தகம் ஒன்று போதாதா? மற்றவை எதற்கு? புத்தகமே நிழல் தரும் மரமாகவும், போதை தரும் மதுவாகவும், மனம் மயக்கும் மங்கையாகவும் இருக்கிறதே.
புத்தகம் போல மனம் இளைப்பாறும் நிழலை மரம் தர முடியுமா?
பூமரத்துக்கு இலையுதிர் காலம் உண்டு. அப்போது ஏது நிழல்?
புத்தகம் போல போதை தரும் மது உலகில் உண்டா? மதுவின் போதை மயக்கத்தில் முடியும். புத்தகங்களின் போதை மயக்கங்கள் தெளிவடைவதில் முடியும்.
புத்தகம் போல எந்த பிரச்சனையும் இல்லாத காதலியாக இருக்க எந்த பெண்ணால் முடியும்?
ஒரு நல்ல புத்தகம் இருந்து விட்டால் பாலைவனம் என்ன, நரகமும் சொர்கமாகி விடுமே?
புத்தகம் ஒரு பொய்கை. அதில் நீராடி மனம் தூய்மையடைகிறது.
புத்தகம் பறிமாறப்பட்ட இலை. அறிவு அதில் பசியாறுகிறது.
ஒவ்வொரு புத்தகமும் ஒரு தேன் கூடு. ஆயிரம் பூக்களின் தேன்துளிகள் அதில் சேமித்து வைக்கப்பட்டிருக்கின்றன.
ஒவ்வொரு புத்தகமும் ஒரு உயில். அதில் நமது முன்னோர்களில் மூளைச் செல்வங்கள் நம் அனைவருக்கும் உரிமையாக்கப்பட்டிருக்கிறது.
ஒரு புத்தகத்தை திறப்பவனொரு புதையல் குகையின் வாசலை திறக்கிறான்.
ஒரு புத்தகத்தை வாசிப்பவன் இன்னொருவனுடைய ஆயுள் அனுபவங்களை பெறுகிறான்.
புத்தகங்களின் பக்கங்கள் வெறும் காகிதங்கள் அல்ல. அவை நாம் அறியாத உலகுக்கு நம்மை அழைத்து செல்லும் சிறகுகள்.
இந்த நூல்களால் தான் நம் நிர்வாணத்துக்கான ஆடை நெய்யப்படுகிறது.
இந்த நூல்களால் தான் நமது கிழிசல்கள் தைக்கப்படுகின்றன.
இந்த நூல்களால் தான் நாம் பட்டங்களாகி மேலே பறக்கிறோம்.
இந்த நூல்களால் தான் நாம் அறிவின் கழுத்தில் மூன்று முடிச்சு போடுகிறோம்.
இன்த எழுத்துக்கள் புனித யாத்திரை புறப்பட்ட ஒரு எழுதுகோலின்
காலடிச் சுவடுகள்.
இன்த எழுத்துக்கள் சாகாத சிந்தனையின் நிழல்கள்.
வெள்ளைத்தாளில் கருப்பு எழுத்துக்கள்
வெள்ளை வானில் கருப்பு நட்சத்திரங்கள்.
ஆனால் சூரியனும் சந்திரனும் தர முடியாத வெளிச்சத்தை
இந்த கருப்பு நட்சத்திரங்களே நமக்குத் தருகின்றன.