FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஆதி on September 12, 2012, 06:55:48 PM

Title: தேடல்
Post by: ஆதி on September 12, 2012, 06:55:48 PM
யாரென உணர
தனிமை திறந்து
பேரமைதிக்குள் நுழைந்தேன்

என் மௌனத்தின் சப்தம்
மலைகளிலும்
பாறைகளிலும் மோதி
நொறுங்க நுணுகின..

விழிமத்தியில் விளக்கேற்றி
வெளிச்சமாய் விரிந்தேன்
பேரண்டத்தின்
பேரெல்லை வரை..

ஒவ்வொன்றாய் வெளிநடந்தன
உணர்வுகள் என்னுள் இருந்து..

வெறிநாயின் முகமும்
குருதி வடிகிற வாயுமாய்
ஒருத்தன் வெளியேறினான்..

யாரனெ வினவினேன்

பதில்:
நான் குரோதம்

அடுத்தொருவன்
கைப்பையுள்
பொதிந்த முகமூடிகளுமாய்
வாசல் கடந்தான்..

யாரென வினவினேன்

என் பெயர் துரோகம்
எனச் சொன்னான்

பருத்த உடலும்
திருப்தி இல்லா முகமுமாய்
இன்னொருத்தன்

நீ யாரப்பா ?

ஆசை

பெருமை பொதிந்த தோற்றமும்
பெரும்பாலும் பேசாத இதழுமாய்
இன்னொருத்தன்

உன் பெயர் ?

ஏளனச்சிரிப்புடன்
என்னைப் பார்த்துச் சொன்னான்
நான் அகந்தை..

ரோகத்தில் சுருங்கிய முகமும்
புண்ணுடைந்து சீழ்வழிகிற
புலன்களுமாய்
மற்றொருவன்

நீ ?

காமம்

மழைத்துளி போன்ற விழிகளும்
பூவெளி போன்ற புன்னகையுமாய்
ஒருவன்

யாரென வினவினேன்

இதயத்தின் இமைதிறந்து
எனைப் பார்த்து
முறுவலுடன் கூறினான்
நான் அன்பு

முற்றிய வயதும்
நரைத்த தாடியும்
அழுக்கு சட்டையுமாய்
ஒரு கிழவன் வெளிவந்தான்

நீங்கள் யார் ?

உனக்குள் உள்ள என்னை
உலகில் தேடுகிறாய்
நான் அமைதி
நான் நிம்மதி
நான்தான் ஞானம்

நீ யாரென
அனைவரின் சுட்டுவிரலும்
எனை நோக்கி நீள..

உரைத்தேன்:
நான் மனிதன்

ஐம்பொறியும் அதிர
ஐம்புலன்கள் சிரித்தன
அந்த பெரும்சப்தத்தில்
என் பேரமைதி கிழிய
தெறித்தேன் ஒரு துளியாய்
வெளியே...

நான் யாரென்ற வினாவுடன்..

Title: Re: தேடல்
Post by: Global Angel on September 12, 2012, 07:02:42 PM
அருமை ஆதி ... நமக்குள் இருக்கும் உணர்வுகளுக்கெல்லாம் உருவம் கொடுத்து கவிதை ஆக்கி இருகின்றீர்கள் ... கற்பனைகளில் அவற்றை நிறுத்தி பொருத்தி பார்த்தேன் கனகட்சிதமாய் பொருந்துகின்றது உருவ பொருத்தங்கள் ... உண்மைதான் ஆமா நீங்க யாரு அத சொலவே இல்லையே ..

ஆதி மிக சிறப்பான கவிதை
Title: Re: தேடல்
Post by: Dharshini on September 13, 2012, 04:56:59 PM
nice varigal aathi unga kavithaigala pakum pothu na kathuka vendiyathu inum evlooo irukenu malaipa irukum unga kavithaiku comments podurathu kuda na en thaguthiya valathukanum thonum really nice unga ella kavithaium ethavathu ona unarthite irukum really great
Title: Re: தேடல்
Post by: ஆதி on September 13, 2012, 06:06:17 PM
//அருமை ஆதி ... நமக்குள் இருக்கும் உணர்வுகளுக்கெல்லாம் உருவம் கொடுத்து கவிதை ஆக்கி இருகின்றீர்கள் ... கற்பனைகளில் அவற்றை நிறுத்தி பொருத்தி பார்த்தேன் கனகட்சிதமாய் பொருந்துகின்றது உருவ பொருத்தங்கள் ... உண்மைதான் ஆமா நீங்க யாரு அத சொலவே இல்லையே ..

ஆதி மிக சிறப்பான கவிதை
//

நன்றிங்க, நான் யாருனுதான் இன்னும் கண்டு புடிக்கலையே :)

//nice varigal aathi unga kavithaigala pakum pothu na kathuka vendiyathu inum evlooo irukenu malaipa irukum unga kavithaiku comments podurathu kuda na en thaguthiya valathukanum thonum really nice unga ella kavithaium ethavathu ona unarthite irukum really great//


உங்கள் பின்னூட்டம் நெகிழ்ச்சியையும் கூச்சத்தையும் உண்டு செய்தது

நெகிழ்ச்சி உங்கள் புகழ்ச்சியால்

கூச்சம் //kavithaiku comments podurathu kuda na en thaguthiya valathukanum //

இந்த வரிகளால்

நாம் எல்லாருமே மாணவர்கள்தான் நிதம் நிதம் புது புது நுட்பங்களை படித்துக் கொண்டிருக்கிறோம் அப்படியிருக்க யாரும் யாருக்கும் சளைத்தவர் இல்லை

நீங்கள் மட்டுமென்ன குறைச்சல் சொல்லுங்கள், தெளிந்த நீரோட்டம் போல தெளிவா எழுதுறீங்க‌

ஒவ்வொருத்தர் கிட்டையும் கற்றுக் கொள்ள எனக்கு நிறையவிடயம் இருக்குங்க,  உங்க கிட்ட கற்று கொள்ளவும் தான்

நன்றிங்க‌