FTC Forum

தமிழ்ப் பூங்கா => இங்கு ஒரு தகவல் => Topic started by: Dharshini on September 08, 2012, 04:11:57 PM

Title: மின்பற்றாக்குறை மிகப் பெரும் சிக்கலாக மாறியது ஏன்?
Post by: Dharshini on September 08, 2012, 04:11:57 PM
மின்பற்றாக்குறையால் தமிழகம் பெரும் நெருக்கடியைச் சந்தித்துள்ளது. பற்றாக்குறையைத் தீர்க்கவியலாமல் தமிழக அரசு தவிக்கிறது. தமிழக மக்களும் இந்தச் சிக்கலைக் கடந்துசெல்லும் வழி தெரியாமல் திண்டாடுகின்றனர். தமிழகத்தில் அமைந்துள்ள பஞ்சாலைகள், நூற் பாலைகள் போன்ற சிறு, குறு, நடுத்தரத் தொழிற்சாலைகள் தொடர்ச்சியான மின்வெட்டால் உற்பத்தித் தேக்கம் கண்டுள்ளன. விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் தொழில் வளமும் விவசாய வளமும் மிகுந்த கொங்கு மண்டலம் அதிகப் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்ட மின்வெட்டல்லாமல் அறிவிக்கப்படாத மின்வெட்டாலும் தமிழகத்தின் தொழில்நடத்துநர்களும் தமிழக மக்களும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். முறைப்படுத்தப்படாத இந்தச் சீரற்ற மின்தடையிலிருந்து மாநிலத்தைக் காப்பாற்ற வேண்டிய முக்கியப் பொறுப்பை எப்படி அரசு நிறைவேற்றப்போகிறது என்பதை யூகிக்க முடியவில்லை.
பொருளாதாரரீதியான முன்னேற்றத்திற்குத் தொழிற்துறை முன்னேற்றமும் விவசாய அபிவிருத்தியும் அவசியம். இவை இரண்டும் பெரிதும் நம்பியிருப்பது மின் ஆற்றலைத்தான். தமிழகத்திற்குத் தேவையான மின் ஆற்றல் ஏறக்குறைய 11,000 மெகா வாட். ஆனால் உற்பத்தியாவதோ 8000 மெகாவாட்தான். இடைப்பட்ட 3000 மெகாவாட் மின்சாரம்தான் நமது நிம்மதியைக் குலைத்துள்ளது; தமிழகத்தை அந்தகாரம் சூழக் காரணமாகியுள்ளது. பற்றாக்குறையைச் சமாளிக்கத் தேவைப்படும் நடவடிக்கைகளை அரசு சரிவர எடுக்கவில்லை என மார்க்சிஸ்ட், தேமுதிக, பாமக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் குற்றம்சுமத்தியுள்ளன. அரசு கையறு நிலையிலுள்ளது. இவற்றுக்கு நடுவில் மாட்டிக்கொண்ட மக்கள் தங்கள் வீட்டு, விவசாய, தொழில் உபயோகத்திற்குப் போதுமான தங்கு தடையற்ற மின்சாரத்துக்காகக் காத்திருக்கின்றனர்.
மின்வெட்டைக் கண்டிக்கும் முகமாகப் பிப்ரவரி 10 அன்று கோவையில் முப்பத்தி ஆறு தொழிலமைப்புகளைச் சேர்ந்த ஏறக்குறைய மூன்று லட்சம் தொழிலாளர்கள் அடையாள வேலைநிறுத்தத்தை மேற்கொண்டனர். இதனால் 250 கோடி ரூபாய்வரை உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு சிறுதொழில் மற்றும் குறுந்தொழில் சங்கம் சார்பாகவும் பாமக உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் சார்பாகவும் தமிழகமெங்கும் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. தமிழகத்தில் மூன்று ஷிப்டுகளாக இயங்கிவந்த தொழிற்துறை நிறுவனங்கள் இரண்டு ஷிப்டுகளை மட்டுமே நடத்துகின்றன அதுவும் ஜெனரேட்டர் உதவியுடன். ஜெனரேட்டர் வசதிகள் இல்லாத சிறு நிறுவனங்கள் ஒரே ஒரு ஷிப்டு உற்பத்தியைத்தான் மேற்கொள்கிறது. டீசல் விலையும் பெருமளவில் உயர்ந்துள்ளதால் ஜெனரேட்டர் உதவியுடன் உற்பத்தி நிகழ்த்தப்படும்போது ஒரு யூனிட்டுக்குப் பதினைந்து ரூபாய்வரை செலவிட நேர்வதாகத் தெரிகிறது. விவசாயத்திற்குத் தரப்படுவதுபோல் டீசல் மானியம் வழங்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
மின்பற்றாக்குறை மிகப் பெரும் சிக்கலாக மாறியது ஏன் என்பது முக்கியக் கேள்வி. மத்திய, மாநில அரசுகள் கடைப்பிடிக்கும் சந்தைப் பொருளாதாரமும் தனியார்மயக் கொள்கையும் இதற்கான முக்கியக் காரணங்கள். முன்பு தமிழக மின்சார வாரியம் நமக்கான மின்சாரத்தை உற்பத்தி செய்துவந்தது. மின் உற்பத்தியில் தனியார் நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்ட பிறகு அவற்றிடமிருந்து மின்சாரத்தைப் பெற வேண்டிய நிலைக்கு மின் வாரியம் வந்தது. அவை நிர்ணயித்த விலைக்கு மின்சாரத்தைப் பெற வேண்டிய நிலையால் மின் வாரியத்தின் செலவு அதிகரித்தது. கையிருப்பு சிறிது சிறிதாகக் குறைந்து அதுவரையிலும் மின்மிகை மாநிலமாக இருந்துவந்த தமிழ்நாடு மெதுவாக மின்பற்றாக் குறை கொண்ட மாநிலமாக மாறியது. மின் உற்பத்தித் திட்டம் ஒன்று நிறுவப்பட்டு அது பயன்தரத் தொடங்க ஐந்திலிருந்து ஏழு ஆண்டுகள்வரை தேவைப்படும். அதிகரித்து வரும் தேவையை மனத்தில் கொண்டு அதற்கேற்றபடி உற்பத்தியைப் பெருக்கத் தேவையான நடவடிக்கைகளில் தொடர்ந்து வந்த தொலை நோக்குப் பார்வை அற்ற அரசுகள் மெத்தனப்போக்கைக் கடைப்பிடித்தன. கடந்த பல பத்தாண்டுகளாக மாறி மாறி ஆட்சியைக் கைப்பற்றி வரும் கழகங்கள் இரண்டுமே ஒரே விதமான மனப் போக்கைத்தான் கொண்டிருந்தன. காழ்ப்புணர்ச்சியின் காரணமாக ஒரு ஆட்சியில் போடப்பட்ட திட்டங்கள் அடுத்த ஆட்சியில் கண்டுகொள்ளப்படாத நிலை தொடர்வதால் இது போன்ற இன்னல்களை நாம் அனுபவிக்க வேண்டியுள்ளது.
பயன்பாட்டு இலக்கை எட்ட இயலாமல் மின் ஆற்றல் தடுமாறுகையில் இலவசத் திட்டங்கள் என்னும் பெயரில் மின் சாதனங்களை வாரி இறைத்தது திமுக. அதே வழிமுறையை அதிமுகவும் பின்பற்றுவது ஆபத்தின் அறிகுறி. இலவசத் திட்டங்களை மக்கள் விரும்பவில்லை என்பதற்குக் கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்குக் கிடைத்த பரிதாபமான தோல்வியே எடுத்துக்காட்டு.
முறையான பராமரிப்பு இல்லாததன் காரணமாக எண்ணூர் அனல் மின்நிலையம் உள்ளிட்ட மின் உற்பத்தி நிலையங்களில் ஏழு அலகுகள் முழுவதுமாகச் செயலிழந்துள்ளன. பற்றாக்குறையோடு இயந்திரக் கோளாறும் இணைந்துகொள்ளச் சிக்கலில் மேலும் சில முடிச்சுகள் விழுந்துள்ளன. மின் உற்பத்தி நிலையங்கள் முடங்காமல் இயங்கத் தகுந்த பராமரிப்பும் கண்காணிப்பும் அவசியம். இதைப் போன்ற நெருக்கடியான தருணங்களில் மின் உற்பத்தி தடைப்படுவதைத் தடுக்காமல் அரசு வேடிக்கை பார்ப்பதற்குக் காரணம் அதன் அலட்சியமே. தவிர நிலக்கரியின் விலை டன்னுக்கு 45 டாலரிலிருந்து கடந்த ஐந்தாண்டுகளில் 120 டாலராக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக அனல் மின் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. புனல் மின்நிலையப் பராமரிப்புச் செலவு அதிகமென்பதாலும் நீர்வசதியின்மையாலும் நீரிலிருந்து எடுக்கப்படும் மின்சார அளவும் குறைந்துவிட்டது. மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் வரத்து நிறுத்தப்பட்டிருப்பதால் தற்போது உற்பத்தி பாதிக்கப்பட்டிருக்கிறது. வெளியிலிருந்து மின்சாரத்தைப் பெறுவதிலும் சிக்கல்கள் நிறைந்துள்ளன. குஜராத் மாநிலத்திலிருந்து யூனிட்டுக்கு 4.20 ரூபாய் விலையில் 500 மெகாவாட் மின்சாரம் வாங்க ஒப்பந்தம் இருந்தும் மின்தொடர் நெருக்கடி காரணமாக அதாவது மின்சாரச் செலுத்தீட்டுச் சரிவர அமைக்கப்படாததால் 235 மெகாவாட் அளவிலேயே மின்சாரத்தைப் பெற்றுக்கொள்ள முடிகிறது. மத்திய தொகுப்பிலிருந்து 2500 மெகாவாட் மின்சாரத்திற்குப் பதில் 1000 மெகாவாட் தான் வழங்கப்படுகிறது. மின்வாரியத்தின் நிதி நெருக்கடி காரணமாக மின்சாரம் வாங்கியவகையில் காற்றாலைகளுக்குத் தரப்பட வேண்டிய கோடிக்கணக்கான ரூபாயும் ஆந்திராவிடமிருந்து மின்சாரம் வாங்கியதற்கு அளிக்கப்பட வேண்டிய தொகையும் நிலுவையிலுள்ளன. இப்படியாக அவசியப்படும் மின்சாரத்தைத் திரட்ட முடியாமல் மின்னாற்றல் சார்ந்த பல்வேறு திசைகளிலும் நீடித்துவரும் இடர்ப்பாடுகள் தமிழகத்தைச் சூழ்ந்துள்ள இருளை அடர்த்தியாக்குகின்றன.
இத்தனை நெருக்கடியிலும் பன்னாட்டு நிறுவனங்களுக்கான மின்சாரம் தங்குதடையின்றி வழங்கப்படுகிறது. பெருமளவில் நிதிவசதியுள்ள பன்னாட்டு நிறுவனங்கள் டீசல்சார்ந்து மின் உற்பத்தி செய்துகொள்ள முடியும். ஆனால் அவற்றுக்கு மின்தடை விதிக்கப்படாமல் நிதிவசதியற்ற சிறுநிறுவனங்களுக்கு மின் தடையென்னும் சூழலை உருவாக்கியுள்ள அரசின் செயல் அபத்தமன்றி வேறென்ன? தமிழகத்தின் பிற பகுதிகள் பல மணிநேரம் இருளில் மூழ்கியிருந்தும், சென்னையில் பெரிய அளவில் மின்வெட்டு இல்லாததன் காரணம் குறித்தும் யோசிக்க வேண்டியுள்ளது. அரசியல்வாதிகளும் அதிகாரவர்க்கத்தினரும் ஊடகவியலாளர்களும் குவிந்துள்ள சென்னையில் இத்தகைய மின்வெட்டு தொடருமானால் அது அரசுக்கு மிகப் பெரும் நெருக்கடியாக மாறும். ஊடகங்கள் பிரச்சினையைத் தீவிரமான தளத்திற்கு நகர்த்திச்செல்லக்கூடும். இவற்றைத் தவிர்ப்பதற்காகவே தலைநகரில் தளர்த்தப்பட்ட மின்வெட்டு அமலாக்கப்பட்டுள்ளதாக நம்ப வேண்டியுள்ளது. தமிழகத்தின் பிற பகுதி மக்களுக்கு இந்தப் பாரபட்சம் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்திற்கு மத்திய தொகுப்பிலிருந்து அதிக மின்சாரம் அளிக்கப்பட வேண்டுமென மத்திய அரசைக் கோரிய மத்திய இணையமைச்சர் நாராயணசாமி தமிழகத்தின் கூடங்குளம் அணுமின்நிலையம் இக்குறையைத் தீர்ப்பதற்காக உருவாக்கப்பட்டிருந்தும் அதற்கெழுந்துள்ள எதிர்ப்பின் காரணமாக உற்பத்தி நடைபெறாததால் இத்தகைய நெருக்கடியை மக்கள் சந்திக்க நேர்ந்துள்ளதாகத் தெரிவித்த கருத்தில் மறைந்திருக்கும் உள்நோக்கம் வெளிப்படையானது. தமிழகத்தின் தொழில்முனைவோர்களும் தற்போதைய பற்றாக்குறையைச் சமாளிக்கக் கூடங்குளம் அணுமின் நிலைய உற்பத்தி அவசியம் எனக் குரலெழுப்பியுள்ளது கூர்ந்து கவனிக்கப்பட வேண்டியது. பித்தம் தெளிய அணுசக்தி உதவாது என்பதை உணர முடியாத அளவுக்கு மக்கள் குழம்பிப்போயுள்ளனர். பொதுமக்கள் மனத்தைக் கூடங்குளம் விஷயத்தில் ஆதரவாகத் திருப்புவதற்காகக் கையாளப்பட்டுள்ள தந்திரமான நடவடிக்கையோ இந்த மின்வெட்டு எனச் சந்தேகம் எழுந்தாலும் அதில் முழுவதும் உண்மையில்லை. கடந்த மூன்றாண்டுகளாகவே தமிழகத்தில் மின்தட்டுப்பாடு நிலவுகிறது. கூடங்குளப் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், கடந்த ஐந்தாண்டுகளாக மாநில முதல்வராக இருந்த கருணாநிதியும் மின்சாரத் துறை அமைச்சராக இருந்த ஆர்க்காடு வீராசாமியும்தான் தமிழகத்தில் தற்போது நிலவும் மின்தட்டுப்பாட்டுக்குக் காரணமென்றும் கடந்த ஆட்சியில் தமிழ் நாட்டில் மின்பற்றாக்குறையைப் போக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மக்களுக்கு அவர்கள் விளக்க வேண்டுமென்றும் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ள கருத்தை இங்கு நினைவுகூரலாம்.
தமிழகம் மின்வெட்டில்லாத மாநிலமாக்கப்படும் எனச் சூளுரைத்து ஆட்சியில் அமரும் கழகங்கள் பதவியிலமர்ந்தபின்பு அதைச் சுலபமாக மறந்துவிடுகின்றன. இரு கழகங்களின் தலைவர்களும் சகிப்புத் தன்மையற்றவர்கள் என்பதோடு ஒருவர்மீது ஒருவர் பழிபோடத் தயங்காதவர்கள். 2011 ஆகஸ்டு நான்கு அன்று தமிழகச் சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் 2012 ஆகஸ்டு முதல் தமிழகத்தில் மின்வெட்டே இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போதோ 2012 ஜூன் மாதம் முதல் படிப்படியாக மின்பற்றைக் குறை தவிர்க்கப்பட்டு 2013 மத்தியில் முற்றிலும் இல்லாமல் ஆக்கப்படும் என்று சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார் ஜெயலலிதா எனக் குறைகூறியுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.
அதிமுக ஆட்சிக்கு வந்ததும் பழுதடைந்திருந்த குத்தாலம், வழுதூர் நிலையங்கள் போர்க்கால அடிப்படையில் சரிசெய்யப்பட்டுள்ளதாகவும் வடசென்னை விரிவாக்கத் திட்டத்தின் ஒன்றாம் அலகில் பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தேசிய அனல்மின் கழகத்துடன் இணைந்து செயல்படுத்தப்படும் வள்ளூர் 500 மெகாவாட் மின்திட்டம் 2012 மார்ச்சிலும் இதன் இரண்டாம் அலகு 2012 ஜூனிலும் மூன்றாம் அலகு 2013 பிப்ரவரியிலும் மேட்டூர் மின்நிலையத்தின் 600 மெகாவாட் மூன்றாம் நிலை 2012 மார்ச்சிலும் வடசென்னை அனல் மின் நிலைய இரண்டாம் அலகு 2012 அக்டோபரிலும் செயல்படத் தேவையானவகையில் பணிகள் முடுக்கிவிடப்பட்டிருப்பதாகவும் முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக ஜூன் மாதத்தில் 1,950 மெகாவாட்டும் அக்டோபரில் மேலும் 600 மெகாவாட்டும் கூடுதலாகக் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார் அவர். மின்திட்டங்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்கப்பட அவசியமான நடவடிக்கைகளை எடுக்க முந்தைய திமுக அரசு தவறியதே இப்போதைய பற்றாக்குறைக்குக் காரணமெனத் தன் பங்குக்குத் தெரிவித்துள்ளார் ஜெயலலிதா. அவர் குறிப்பிட்டுள்ள 2013 ஜூன் வரை மின்வெட்டு கண்டிப்பாக நீடிக்கும் என்பது மட்டுமே நமக்கான குறிப்பு.
மின்சாரத்தைப் பொறுத்தவரை எட்டுத் திக்கும் மதயானை சூழ்ந்துள்ள நிலைமைதான். இதிலிருந்து தப்புவது எளிதல்ல. இச்சிக்கலிருந்து விடுபடத் தேவையான தீர்வில் அனைத்துத் தரப்பினரும் கவனம் செலுத்த வேண்டும். ஊர்கூடி இழுக்க வேண்டிய தேரை யாரோ ஒருவர் நிலைநிறுத்திவிட இயலாது. சூரிய சக்தியால் மின்சார உற்பத்தி செய்யும் வழிமுறைகள் குறித்து அரசு அக்கறையோடு ஆலோசிக்க உகந்த தருணம் இது. அதிகரிக்கப்பட்ட மின் உற்பத்தி என்னும் இலக்கை அடையும்வரை பற்றாக்குறையைச் சமாளிக்க சிக்கனம் கைகொடுக்கும் என்பதை நாம் உண்மையாகவே நம்ப வேண்டும். எல்லாவற்றுக்கும் அரசுமீது பழிபோட்டுவிட்டுக் குடிமைச் சமூகம் ஒதுங்கிக்கொள்ள முடியாது. ஜனநாயக அரசின் செயல்பாட்டில் மக்கள் ஒத்துழைப்பு மிக அவசியம் என்பதை உணர்ந்து நாம் செயல்பட வேண்டும். மின் சிக்கன நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வை அரசு ஏற்படுத்த வேண்டும். அதைத் திறந்த மனத்துடன் புரிந்துகொள்ள நாம் தயாராக வேண்டும். சின்னச் சின்னதாக நாம் மேற்கொள்ளும் மின் சேமிப்பு பெரிய அளவில் உதவும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். மின்சாரத்தை விரயமாக்கும் பண்பாட்டிலிருந்து நாம் எல்லோருமே மீண்டுவர வேண்டும். இது தொடர்பான விழிப்புணர்வை உருவாக்கும் கடமையில் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் பங்கு உள்ளது. வெறுமனே அரசியல் கட்சிகளையும் மின்வாரிய அதிகாரிகளையும் மட்டும் குறைகூறிக்கொண்டிருந்தால் நமது வீடும் மாநிலமும் மேலும் மேலும் இருளில் மூழ்க நாமும் மறைமுகக் காரணமாகிவிடுவோம்.
அந்தமாதிரி ஏதும் நடக்காமல் இருக்க இன்றிலிருந்தே மின்சாரத்தை சேமிக்க ஆரம்பிப்போம்; இருளில்லா வாழ்க்கை வாழ்வோம் என்று நாம் அனைவரும் முடிவெடுத்தால் அதன் பலனை நாம் கண்கூடா பார்க்கலாம்!