FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஆதி on September 08, 2012, 03:31:25 PM

Title: விண்மீன்கள்
Post by: ஆதி on September 08, 2012, 03:31:25 PM
நிதம்நிதம் வானை
நிமிர்ந்திவள் பார்த்தால்
நீங்காமல் பதிந்துவிட்ட
நீள்விழி சுவடுகள்

பாவையர் மேனியை
பகல்விளக்கில் சுட்டதற்கு
மாலையில் விம்மிடும்
மேல்கருத்த வானம்


விண்ணவள் ஒருத்தியை
விண்ணவன் நோக்கையில்
மின்னவள் விழிகளை
மீறிவிழுந்த நாணத்துளிகள்

ரதியவள் ஆடிடும்
ரம்மிய அழகினில்
மதிகெட்ட வானவர்
வார்த்திட்ட ஜொள்ளுகள்

அங்கொரு ஆண்டவன்
அந்திரமாக மனைவியை
அணைத்திடும் முன்பொழுதில்
அவிழ்த்திட்ட ஆபரணங்கள்

இங்கொரு ஆண்டவன்
இன்பத்து பாலிலே
திளைத்திட்ட தருணத்தில்
திமிறிய விரகங்கள்

விண்ணக வீதியில்
விளையாட்டு மகிழ்வினில்
சின்னஞ் சிறியவர்
சிந்திய சிரிப்புக்கள்

வாலிபை ஒருத்தி
வடிவாய் உருட்டிய சோழிகள்
தோழி ஒருத்தி
தொலைய வீசிய வட்டாங்காய்கள்

கற்பகதருவிலே தேவப்பறவைகள்
கட்டிய கூடுகள்
காமதேனுவை கறக்கையில்
சிதறிய காம்பு தூறல்கள்