FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Anu on September 05, 2012, 06:35:38 AM
-
குதித்துவரும் அலை கண்டு இறுகப்பற்றும்
குழந்தைகளின் கைகளை இன்னும் கொஞ்சம்
இறுக்கிப் பிடிப்பதில் முளைக்கிறது
ஓராயிரம் நம்பிக்கைத் துளிர்கள்...
ஊன்றி நிற்கும் கால்களை கடந்து
பின்வாங்கும் அலைகள் திருடும் மணல்துகள்கள்
உள்ளங்காலுக்குக் கீழே உருவாக்கும் குறுகுறுப்பில்
கரைந்துபோகிறது சேர்ந்துகிடந்த சோர்வு...
திரும்பிச்சென்ற அலைகள் விட்டுப்போன
பிசுபிசுப்பை கழுவிவிட வரும் புதிய அலை
இந்தமுறை மனதில் அழுத்தமாக அப்பிச்செல்கிறது
கூடுதலாய் சந்தோச பிசுபிசுப்பை...
குழந்தைகளின் உலகத்துக்குள்
கொஞ்சம் கரைந்துபோகும் சுகத்துக்கும்
அலைகளிடம் கால்களை கொடுத்து
மனதை இழக்கும் இதத்திற்கும் நிகர் ஏது?
எழுதியது ஈரோடு கதிர்
-
ஒரு தாய்மையோடு எழுதப்படிருக்கிறது கவிதை, அலையாடுதலின் சுகமே தனி சுகம் தான்
//திரும்பிச்சென்ற அலைகள் விட்டுப்போன
பிசுபிசுப்பை கழுவிவிட வரும் புதிய அலை
இந்தமுறை மனதில் அழுத்தமாக அப்பிச்செல்கிறது
கூடுதலாய் சந்தோச பிசுபிசுப்பை...
//
இந்த வரிகள் சென்னையையும் கடலையும் நான் எவ்வளவு இழந்து கொண்டிருக்கிறேன் என்று யோசிக்க வைத்துவிட்டது, அந்த அளவுக்கு கடல் பைத்தியம் நான், கடலுக்காக அலுவலகம் மட்டம் போட்ட காலங்கள் எல்லாம் ஞாபகத்துக்கு வந்து போகின்றன
உச்சி மதிய வேளையில், நீல வானமும், உக்கிரமாய் பொங்கும் வெயிலும் நெளியும் கடலை ரசிப்பதில் கூட தனி இன்பம் இருக்கிறது
//உள்ளங்காலுக்குக் கீழே உருவாக்கும் குறுகுறுப்பில்
கரைந்துபோகிறது சேர்ந்துகிடந்த சோர்வு...
//
இந்த கவிதையில் வரும் ஒரே பிழை, கடலில் கால் நனைக்கையில் சோர்வு விழித்துக் கொள்கிறது எனும் வரிதான், ஒரு வேளை கவிஞர் இந்த அர்த்தம் வரவே எழுதியும் இருக்கலாம், எனினும் இந்த கவிதைக்கும் அந்த வரிக்கும் சம்பந்தமில்லை
பகிர்வுக்கு நன்றிங்க அனு
-
அதீத இன்பத்தை அனுபவித்தால் சோர்வு தோன்றுவது போல் இருக்குமல்லவா .. அதை குறிபிட்டு இருக்கலாமே ஆதி ...? என்ன சொல்கின்றீர்கள் ? கடலில் கால் நுழைந்தாடும் இன்பத்தை அதீதமாய் அனுபவித்து சோர்வு விளித்து கொண்டதோ என்னவோ
::)