FTC Forum

தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: MysteRy on September 01, 2012, 07:24:26 PM

Title: ~ கடல் மட்டி அதிக சுவை உடைய உயிரினம் !! ~
Post by: MysteRy on September 01, 2012, 07:24:26 PM
கடல் மட்டி அதிக சுவை உடைய உயிரினம் !!

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fa8.sphotos.ak.fbcdn.net%2Fhphotos-ak-snc7%2F423893_281587498613424_1045999101_n.jpg&hash=a02728e71c25688b596eb956e4566ba6ced65c0b) (http://www.friendstamilchat.com)


கடலில் வாழும் சிப்பி வகைகளில் அதிக அழகும், அதிக சுவையும் உடைய உயிரினமே கடல் மட்டி. இவற்றின் தோற்றம், பயன்பாடுகள் ஆகியன குறித்து ராமநாதபுரத்தை சேர்ந்த கடல் உயிரியலாளர் ர.செந்தில்குமார் கூறியது..

""கடலில் வெப்ப மண்டலப் பகுதிகளில் பரவி வாழும் கடல் மட்டிகளுக்குப் பெர்னாவிடிஸ் என்பது விலங்கியல் பெயர். மைடிலிடே என்ற சிப்பி வகையைச் சேர்ந்த இவை பல நாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள கடல் பகுதிகளிலும் அறிமுகமாகி வளர்ந்து வருகின்றன. இவற்றின் ஓடுகளுக்கு உள்ளே உள்ள சதை மிகவும் சுவையானதாக இருப்பதால் பலரும் இதை விரும்பிச் சாப்பிடுகின்றனர். ஆஸ்திரேலியா, ஜப்பான், வட, தென் அமெரிக்கா ஆகிய நாடுகளில் இவற்றின் சுவை மிகுந்த சதைக்காக இதனை விரும்பி வளர்த்தும் வருகின்றார்கள். கடற்கரைகளிலும் கடலுக்குள் பண்ணைகள் அமைத்தும் இவை வளர்க்கப்படுகின்றன. சில நாடுகளில் இதனை கூடைகள், கயிறுகள் போன்றவற்றில் ஒட்டியும் இவற்றை வளர்க்கிறார்கள்.

மேலும், கீழும் ஒரே மாதிரியான ஓடுகளைப் பெற்றிருந்தாலும் 80 முதல் 100 மி.மீ நீளமும் சில மட்டும் 165 மி.மீ. நீளம் வரையும் வளரக்கூடியது. கீழ்ப்பக்கம் கூர்மையாகவும் மேற்புறம் பழுப்பு நிறத்திலும் காணப்படுகின்றன. இளமையான கடல் மட்டிகள் வெளிறிய பச்சை நிறத்தில் இருந்தாலும் வயதாக ஆக கரும்பச்சையாக மாறி விடுகின்றன. இவற்றின் உடலில் உள்ள பைசஸ் என்னும் நூலிழை கடினமான இடத்திலும் உறுதியாக ஒட்டிக் கொள்ளும் சக்தி படைத்தது.

வேகமான கடல் அலையிலும்கூட இவை ஒட்டிய இடத்திலிருந்து கீழே விழுந்துவிடாத வகையில் உறுதியாக பற்றிக் கொள்ளும்.

கப்பல்களின் அடிப்புறத்தில் இவை ஒட்டிக் கொண்டு பல நாடுகளுக்கும் பயணம் செய்து அங்கெல்லாம் தன் இனத்தை பெருக்கி விடுகின்றன. இப்படியாக உலகம் முழுவதும் உள்ள கடல் பகுதிகளில் இவை பரவி விட்டன. தொழிற்சாலைகள்,மின் நிலையங்கள் ஆகியனவற்றில் உள்ள பெரிய குழாய்களில் இவை ஒட்டிக் கொண்டு அதிகமாக வளர்ந்து அவற்றை அடைத்தும் விடுகின்றன. கப்பல்களிலும் கடலினுள் போடப்படும் மிதவைகளிலும் ஒட்டிக் கொண்டு வளர்ந்து அவற்றையை அரித்து சேதமடையச் செய்தும் விடுகின்றன.

இவை ஒரு குறிப்பிட்ட வெப்பமும், உப்புத்தன்மையும் உள்ள கடல் பகுதிகளில் தான் உயிர் வாழக் கூடியவை. இவையிரண்டும் தேவைக்குத் தவிர கூடினாலோ அல்லது குறைந்தாலோ இறந்து போய் விடுகின்றன. பெண் இனம் முட்டைகளை மழைக்காலங்களின் இறுதியிலும்,வசந்த காலங்களிலும் இடுகின்றன. முட்டையிலிருந்து வெளிவரும் லார்வாக்கள் சுமார் 12 நாட்கள் வரை நீந்தித் திரிந்து விட்டு வளர்சிதை மாற்றமடைந்து ஒரே இடத்தில் ஒட்டி வாழத் தொடங்கிவிடும்.

மட்டிகளின் சதை சுவையாக இருப்பதால் ஆக்டோபஸ், சிங்கி இறால்கள், நட்சத்திர மீன்கள் மற்றும் பெரிய மீன்கள் போன்றவற்றுக்கு இரையாகியும்விடுகின்றன.

கடல் நீரை வடிகட்டி அதிலுள்ள தாவர மிதவை நுண்ணுயிரிகளை உண்டு வாழும் இந்த உயிரினம் ஒரு சதுர மீட்டரில் மட்டும் சுமார் 35,000 வரை எண்ணிக்கையில் அதிகமாக பெருகி கூட்டம், கூட்டமாக கடலுக்குள் ஒரு தனி சாம்ராஜ்யத்தையே நடத்துகின்றன'' என்றார்.