FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஆதி on August 31, 2012, 01:08:08 AM

Title: சில்லுகள் ‍ - 6
Post by: ஆதி on August 31, 2012, 01:08:08 AM
ஆயுதங்கள்
கண்டு பிடிக்கிறோம்
சோதனை செய்கிறோம்
உற்பத்தி செய்கிறோம்

எதிரிகளிடம் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக..

வல்லரசாய் திகழ்வதற்காக..

சரித்திரம் படைப்பதற்காக..

என்கிறோம்.


ஒருத்தன் ஒன்றையும் கண்டுபிடிக்கவில்லை
சோதனை செய்யவில்லை
உற்பத்தியும் செய்யவில்லை..
ஆனால்
வரலாற்றை இரண்டாக பிரித்தான்..

இன்னொருத்தன்
உண்மையை கண்டுபிடித்தான்
உண்மையை சோதனை செய்தான்
உண்மையை உற்பத்தி செய்தான்
மகாத்மாவானான்..

ஆயுதங்கள்
ஒன்றையும் சாதித்துவிடவில்லை
ஏசுவையும், மகாத்தாவையும் கொன்றதை தவிர‌
Title: Re: சில்லுகள் ‍ - 1
Post by: Global Angel on August 31, 2012, 01:17:12 AM
Quote
ஆயுதங்கள்
ஒன்றையும் சாதித்துவிடவில்லை
ஏசுவையும், மகாத்தாவையும் கொன்றதை தவிர‌


சத்தியமான வரிகள் ...ஆயுதம் ஆக்கியவை இவைதான்


 எந்த கருவை எடுத்தாலும் மிக துல்லியமாக அருமையாக கவிதை எழுதுகின்றீர்கள் ஆதி ....
Title: Re: சில்லுகள் ‍ - 2
Post by: ஆதி on August 31, 2012, 09:41:37 AM
கடிவாளமாய்
உருமாறிவிடுகின்றன
உன் இமைகள்..
என்னை பார்க்கும் போதுக‌ளில்..

என் மனதிற்கு
உன் ஞாபகங்கள்
நுகத்தடி இட்டு
வழிநடத்தி செல்கின்றன காதலில்..

நட்சத்திரத் துளை வழியே
விழும் பனிப் போல்
உதிர்கின்றன என் ஏக்கங்கள்
நீ இல்லாத புல்வெளிகளில்..

*****************************************************

தற்காக்க
உன் நினைவுகளினுள்
மறைந்து கொண்டேன்..
காதல் என்னைத் தேடி
அழைகிறது வெளியே..

****************************************************

காத்திருந்து
காலமணலில் தொலைத்த
சில்லறையை கண்டெடுத்த தருணதில்
செல்லாத காசானது..
எம் வாழ்வைப் போல்

தன்னில் பாதி
தன் மனைவி என
நவில்வவரினூடே
பாதிப்பாதிகளாய் நாங்கள்

மனிதம் மனிதமென
அரற்றும் ஊரழைக்கிறது
அலிகள்
நாங்களும் உங்களின்
கேலிக்கைக்கு பழிகளாய்..

***************************************************************


தருவாயா தைமகளே நிரம்ப
தண்ணீர்வரும் காவிரியை; தீயனல்
உருவாய் நீண்டமணல் நாவிற்கு
ஒருவாய்நீர் கொடுப்பாயோ; அன்று
கர்வத்தால் அடைப்பட்டாய் அகத்தியன்
கமண்டலத்தில்; இன்று கபினிக்குள்
அரசியல் காழ்ப்புணர்ச்சியில் ; என்றுமே
அடைப்படுகிற உறழ்வுதானோ காவிரி!!
Title: Re: சில்லுகள் ‍ - 2
Post by: Global Angel on August 31, 2012, 12:56:53 PM
 அருமை ஆதீ .... முதல் பகுதியில் தேடலின் வரட்சி ...அடுத்த பகுதியில் காதலின் வரட்சி ... அடுத்த பகுதியில் மனிதத்தின் வரட்சி .... இறுதியில் தமிழ் நாட்டின் வரட்சி ... இவை அனைத்தையும் அழகு தமிழில் அருமையாக எடுத்து கொடுத்தீர் கவிதை வடிவில் நன்று ... எந்த வரிகள் பிடித்தம் என்றில்லாமல் அனைத்துமே சிறப்பாய் பிடிதவைகளாய் அமைந்திருகிறது ..
Title: Re: சில்லுகள் ‍ - 2
Post by: ஆதி on August 31, 2012, 01:32:53 PM
நன்றிங்க, பின்னூட்டம் எழுதிய விதம் நல்லா இருக்கு
Title: Re: சில்லுகள் ‍ - 3
Post by: ஆதி on September 02, 2012, 09:08:35 PM
தெரியும்'கள் அனைத்தும் மதிலென எழுந்து நிற்கிறது மற்றவைகளை மறைந்து

'தெரியும்'களின் பட்டியலை நாளும் நெடிதாகிக் கொள்கிறவர்களின்
முன்னால் நெடுநெடு என வளர்ந்து நிற்கிறது
தெரியாமைகளின் மரம்..

நாலாப்புறமும் கிளைத்து நீளும் அதன் நீட்சியை
'தெரியும்'களின் ஒற்றை இலை பார்க்கவிடாமல் மறைக்கலாம்

அதற்காக, தெரியாமை மரத்தின் உயரம் குன்றிவிடுவதில்லை .

தெரியும் ‍
ஒரு கறுப்புக்காண்டியாய் இருந்த போது
இருட்டாய் இருந்தது பூமி
அது தெரியாமையின் கரங்களால் கழட்டப்பட்ட பிறகு
வெளிச்சமாய் விரிந்திருக்கிறது பார்வை
வெளியை கடந்து
Title: Re: சில்லுகள் ‍ - 3
Post by: Global Angel on September 03, 2012, 12:32:50 AM
வாவ் அருமையான கவிதை... எப்போது நாம் எமக்கு எல்லாம் தெரியும் அப்டி நினைத்து கொள்கின்றோமோ .. அப்போது  கற்று கொள்கின்ற வாய்ப்பு நமக்கு அற்று போகிறது .. தெரியாது என நினைத்து கொண்டால் நிறைய விடயங்கள் நமக்கு புதிதாய் கிடைக்கும் கற்று கொள்ள...

அருமையான கருத்து , கவிதை பதிவு ஆதி ... அருமை
Title: Re: சில்லுகள் ‍ - 4
Post by: ஆதி on September 08, 2012, 11:31:17 PM
காற்றிலொரு வண்ணத்துப் பூச்சியென
பரிணமித்து
எங்கு செல்லினும்
என்னை பின் தொடர்ந்து
அருகில் அகல சிறகு பரப்பி வந்த*மரும்
உன் நினைவுகள் மட்டும்

*****************************************************

கார்பரேட்/ஐடி வாழ்க்கை அல்லது வேலை

உதற இயலாத புழுதியென*
உடலில் அசதியை சுமந்தவாறு
பொழுதுபூராவும் அலைந்து சோர்வுற்று
ஓய்வெடுக்க ஆயாசமாய் அமரும் தருணத்தில்
ஆசனத்தில் இருந்து
ஓடு ஓடு இன்னும் ஓடுவென*
குற்றும் ஒரு முள்

***********************************************

பகட்டு செறிந்திருக்கும் இந்த நகரத்தில்
பெருகியோடு கவர்ச்சியின் பிரளயத்தில்
அடித்து செல்லப்பட்டுவிடாமல்
சிரத்தையோடு பாதுகாத்து வைத்திருக்கிறேன்
நம் காதலை

***********************************

நேற்றிந்த புல்வெளியில் நிகழ்ந்த சந்திப்பில்
நாம் சுமந்திருந்த கௌரவங்களுக்கு
எந்த பங்கமும் உண்டாகிவிடாத கவனத்தோடு
பேசிக் கொண்டிருந்துவிட்டு பிரிந்தோம்
சுமக்க முடியாமல் சுமந்திருந்த காதலை
இறுதிவரை பரிமாறி கொள்ளாமல்

**************************

இந்த புதிய அப்பார்ட்மெண்டில்
அறிமுகத்திற்கு பிந்தைய சந்திப்புகளில்
"எப்படி இருங்கீங்க ?" என கேட்கும் பக்கத்துவீட்டுக்காரருக்கு
பத்து வருடத்திற்கு முன்
நீ வழங்கிப் போன கொடுங்கசைப்பை
இன்னும் செரிக்க இயலாமல் வதையுறுவது பற்றி
தெரிந்துவிட கூடாதென்று
ஒவ்வொருமுறையும்
வெறுமனே புன்னகைத்து மட்டும் கடக்கிறேன்
Title: Re: சில்லுகள் ‍ - 4
Post by: ஆதி on September 11, 2012, 12:30:09 PM
உருப்பட போவதில்லை என்று
ஒதுக்கிவிட்டவைகள் எண்ணற்ற..

உருப்படாத காற்று
உருப்படாத நீர்
உருப்படாத கடவுள்
உருப்படாத காலம்
என
உருப்படாதவைகளின் பட்டியல்
மிக பெரியது..

உருப்படாதவைகள் தான்
பல சமயங்களில்
மேன்மை பொருந்தினவையாய் இருக்கின்றன..

ஆகையால்
ஒரு போதும் தயக்கங்கள் வேண்டாம்
உருப்படாதவைகளாக...
Title: Re: சில்லுகள் ‍ - 6
Post by: ஆதி on September 24, 2012, 01:32:46 PM
ஊமையாய் இறுகிவிட்டிருந்தது
உன் வார்த்தையின் வலியக்கரங்கள்
என் உயிரின் குரல்வளையை நெரித்த
அத்தருணம்...

அது ஒரு மரணத்தைப் போல
தற்செயலான நேர்ச்சி அல்ல..

ஒரு படுகொலையை போல
திட்டமிடப்பட்ட நிகழ்வு..

என்றாலும்,
அதை நீ செய்திருக்க வேண்டாம்
உன் பூ உதடுகளால்..

========================================


ஏளன சிரிப்பின்
நிசப்தமான அரக்க ஓசைகள்
செவிப்பறை கிழிய
அதிர்ந்தது அன்றொரு நாள்..

அந்த சிரிப்புக்கான முகாந்திரம்
என் இயலாமையாகவோ
என் அறியாமையாகவோ
என் ரசனையின்மையாகவோ
என் கவனமின்மையாகவோ
என் தவறுதலாகவோ
ஒரு தர்ம சங்கடமான சம்பவமாகவோ
இன்னப் பிற
எதுவாகவும் இருக்கலாம்..

தப்புரைக்க சாத்தியமற்ற
காரணமாயினும்
தலை குனிவோடான
காயத்தை வழங்கிய அச்சிரிப்புக்கு
என்றைக்கும் தெரிய போவதில்லை
எச்சமாதானத்துக்கும் ஆறாத என் வலிகளை..

==================================================

பரிமாறிக்கொள்ள
பிரிவதற்கு முந்தையதோ
பிரிவிற்கு பிந்தையதோவான
நினைவுகள் நம்மிடம்
எதுவும் இருந்திருக்கவில்லை
அந்த சந்திப்பில்..

என் புது உறவுகளைப் பற்றிய
பெருமித வார்த்தைகளோ
ஏகாந்த காலங்களில் உற்ற
வலி துயரைங்களையும்
பகிர்ந்து கொள்ளவில்லை..

மௌனத்தின் கதவுகளை பலமாய் சாத்திக் கொண்டு
நம்மில் ஒருவர் உதிர்க்கப் போகிற
முதல் வார்த்தைக்காக
காத்து கிடந்திருந்தோம்..

உன் எதிர்ப்பார்ப்புக்கள் என்னுடையதையும்
என் எதிர்ப்பார்ப்புக்கள் உன்னுடையதையும்
எதிர்நோக்கி ஏக்கத்தவமிருந்ததை உணர்ந்திருந்தும்
இருவரும் நம் ஆங்கார அரியணையில்
பிடிவாதத்தோடே அமர்ந்திருந்தோம்..

இதே ஆங்காரந்தான்
அன்றொரு பிரிவுக்கு ஆதாரமாய் இருந்தது..
இன்றும் நம் களையாத மௌனத்தின்
கதவாய் இருக்கிறது..

நாம் நிறைய மாறி இருக்கிறோம்
உருவத்திலும்..
வாழ்விலும்..
என்றாலும்
மாறாமல் இருக்கிறது
நம் ஆங்காரம்
நம் காதலைப் போல்..
Title: Re: சில்லுகள் ‍ - 6
Post by: Global Angel on September 24, 2012, 01:48:11 PM
Quote
காயத்தை வழங்கிய அச்சிரிப்புக்கு
என்றைக்கும் தெரிய போவதில்லை
எச்சமாதானத்துக்கும் ஆறாத என் வலிகளை
..

உண்மைதான் சில சந்தர்பங்களில் அடுத்தவர்களது சிரிப்பு கூட  ஆழமானா காயங்களை ஏற்படுத்தி விட கூடியது ... ஆங்காரம் என்பது ஆள் மனதில் தூங்கி கொண்டிருக்கும் ஒரு முறை அது தட்டி எழுப்பபடால் அது உறங்குவதில்லை அருமையான கவிதை ஆதி