FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஆதி on August 30, 2012, 02:53:16 AM

Title: நடு நிலைக்காதல்
Post by: ஆதி on August 30, 2012, 02:53:16 AM
மாதமெலாம்
முதல் தேதியைத்
மூச்சிறைக்க துரத்தியோடும்
நடுத்தர வர்க்கத்தின் நம்பிக்கைகள்
நாமிருவரும்..

ஆண்டாண்டுக்கு முன்
ஏழரை மணி பேரூந்தில்
ஆரம்பித்த நம் காதல்
இன்னும் கடைசி
இருக்கை காதலாகவே உள்ளது..

வண்ணப்புடவை அணிந்த
வெள்ளைப் பட்டாம் பூச்சியாய்
அருகு வந்தமர்ந்து
என் மனசுக்குள் பறப்பாய்
ஒவ்வொரு காலையும்..

கடல் தரித்த கரையில்
மணல் வறுத்த கடலையை
கொறித்தவாறு
சிரித்து பேசி
சிறிது சிந்தி
சிறிது வாழ்ந்து
சிறிது நொந்து
மேலுமொரு பிரிவை நோக்கி
முற்றும் நம் சந்திப்புகள்..

அடிப்படை அவசியங்களின்
அடைப்பு குறியில்
அடங்கி முடிந்துவிடும்
நமதாசைகள்..

சிகையாழியின்
மிதம்மீறிய நரை வெம்மையில்
தட்பமிழக்கிறது
தம்பதிகளாகும் கனவுகளும்..

பாக்கிகளின் நிழல் விழுந்து
கருப்புற்றிருக்கும் பொருள் நிலா
ஊதிய ஏற்றத்திலும்
போதிய வெளிச்சம் பெறாமல்
தார்க் காகிதமாகிறது
தாறுமாறான விலை நீட்சியால்..
Title: Re: நடு நிலைக்காதல்
Post by: Global Angel on August 30, 2012, 03:27:00 PM
நடுத்தர வர்கத்தவரின் காதல் எல்லாம் இப்படிதான் பேரூந்திலும் கடற்க்கரையிலும் கரைந்து போகிரதாகதான் இருக்கிறது ... ஏற்கதுணிவும் இல்லை இழக்க மனமும் இல்லை ..... அருமை ஆனல் இறுதி வரிகள் புலப்படவில்லை என் அறிவிக்கு அதிகமாக  இதன் பொருள் என்னவோ ...?


 
Quote
பாக்கிகளின் நிழல் விழுந்து
கருப்புற்றிருக்கும் பொருள் நிலா
ஊதிய ஏற்றத்திலும்
போதிய வெளிச்சம் பெறாமல்
தார்க் காகிதமாகிறது
தாறுமாறான விலை நீட்சியால்..
Title: Re: நடு நிலைக்காதல்
Post by: ஆதி on August 30, 2012, 04:08:05 PM
பாக்கிகள் = கடன் அல்லது தர வேண்டிய தொகை

எப்படி பூமியின் நிழல் விழுந்து நிலா பிறையாகிறதோ அப்படி, குடும்ப பொருளாதாரமும் பாக்கிகளின் நிழல் விழுந்து கருப்பாகியிருக்கிறது

சம்பள ஊயர்வு கிடைத்தாலும் அவை போதியவையாக இல்லை, விலைவாசி தாறுமாறாக உயர்வதால்
Title: Re: நடு நிலைக்காதல்
Post by: Global Angel on August 30, 2012, 04:20:02 PM
ஹஹா இப்படிதான் இருக்குமென்று நினைத்தேன் ... இருந்தாலும் காதல் ... இக்குள்ளே இது ஏன் வர போகிறது என்ற சிந்தனையில் விட்டுவிட்டேன் நன்றி ஆதி